காயல் சினிமா விமர்சனம்

எதன் சாயலும் இல்லாமல் புதிய கோணத்தில் கதை சொல்லியிருக்கிற ‘காயல்.’

இளம்பெண் தேன்மொழி தற்கொலை செய்து மரணமடைகிறாள். அதனால் அவளது அப்பாவும் அம்மாவும் பிரிகிற சூழ்நிலை உருவாகிறது. பிரிவதற்கு முன் மகளது அஸ்தியை ராமேஸ்வரம் சென்று கரைக்க முடிவெடுத்து அவர்கள் வசிக்கும் புதுச்சேரியிலிருந்து புறப்படுகிறார்கள். அந்த பயணத்தில் மனநல நிபுணர் ஒருவரும் இணைகிறார். போகும் வழியில், அந்த பெண் காதலித்த இளைஞனை சந்திக்கிறார்கள். அதன்பின் சில உணர்வுபூர்வமான சம்பவங்கள் நடக்கிறது. அவற்றை அந்த உணர்வுகள் குறையாத காட்சிகளாக தொகுத்திருக்கிறார் இயக்குநர் தமயந்தி.

கதை நாயகி தேன்மொழியாக காயத்ரி. காதலனுடன் உற்சாகமாக பொழுதைக் கழிப்பது, கீழ்சாதி இளைஞனை காதலித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்மாவிடம் காதலை ஏற்கச் சொல்லி வலியுறுத்துவது என அவருக்கான இளவயதுக்கான துடிப்பையும் துணிச்சலையும் காண்பித்து கடந்து போகிறார்.

கதைநாயகியின் மனதில் இடம் பிடித்தவராக லிங்கேஷ். காதலிக்கும்போது இனிமை சுமந்த முகபாவம் காட்டுபவர், ஒரு கட்டத்தில் அவளைப் பிரியும் சூழ்நிலை உருவாகும்போதும், அவளது அஸ்தியை அருகில் வைத்துப் பயணிக்கும்போதும்  அதற்கு பொருத்தமான வலி சுமந்த மனநிலையை பொருத்தமாக பிரதிபலித்திருக்கிறார்.

லிங்கேஷின் கடந்த காலம், இப்போதைய மனநிலை என எதையும் புரிந்து கொள்ளாமல் அவரை ஒரு தலையாக காதலிப்பதும், இறுக்கியணைப்பதுமாக மெல்லிய கவர்ச்சியுடன் களமாடியிருக்கிறார் பாடகி ஸ்வாகதா. கேரக்டருக்கேற்ற வெகுளித்தனத்தை ரசிக்கும்படி தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

சாதி வேற்றுமை பார்த்து மகளின் காதலை ஏற்காமல் விட்டதை நினைத்து அவளை இழந்தபின் வேதனையில் துடிக்கிற அம்மாவாக அனுமோல். உணர்ச்சிகளை மென்மையான கடத்துகிற அவரது நடிப்பு நெகிழ வைக்கிறது.

மகளின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தும் அதற்கு பலனில்லாது போனதில் மனம் நொந்துபோனவராக, சாதிப் பாகுபாடு பார்த்து மகளின் இழப்புகாரணமாக இருந்த மனைவியை வெறுப்பவராக, துக்கத்தின் தாக்கத்தால் குடிபோதையில் மிதப்பவராக தேர்ந்த நடிப்பைத் தந்து, கண்கலங்க வைக்கும் முடிவை சந்திக்கிறார் ஐசக்.

சண்டை சச்சரவால் மனைவியைப் பிரிந்தது, அந்த மனைவி விபத்தில் சிக்கிய நிலையில் பார்க்கப் போகலாமா வேண்டாமா என குழம்பித் தவிப்பது என மனம் முழுதும் பிரச்சனைகளை நிரப்பி வைத்துக் கொண்டு, காயத்ரியின் அப்பா அம்மாவுக்கு மனநல ஆலோசனை சொல்லி ஆறுதலாக நிற்கிறார் ரமேஷ் திலக்.

புதுச்சேரியில் துவங்கி வேளாங்கண்ணி வழியாக ராமேஸ்வரம் வரையிலான பயணத்தில் விரிகிற கிழக்கு கடற்கரை சாலையின நீள அகலத்தை, திரும்பிய பக்கமெல்லாம் கடல்நீர் சூழ்ந்திருக்கும் அழகை கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறது கார்த்திக் சுப்பிரமணியனின் கேமரா.

ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மனதில் பதிய மறுத்தாலும் கேட்பதற்கு இதம் சேர்க்கத் தவறவில்லை.

காட்சிகள் மெல்ல மெல்ல நகர்வது சுறுசுறுப்பும் பரபரப்பும் நிரம்பிய படங்களைப் பார்த்துப் பழகியிருக்கும் இன்றைய தலைமுறைக்கு அயர்ச்சியைத் தரலாம்.

அதையெல்லாம் கடந்து,

இந்தச் சமூகம் பெண்களின் தன்னிச்சையான தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை, ஆணவக் கொலைகள் இப்படி கூட நடக்கிறது என்பதை, சாதி தாண்டிய காதல் விவகாரத்தில் அப்பா, அண்ணன், தம்பி, பங்காளிகள் என ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் கொடூரமானவர்களாக நடந்து ‘கொல்’வதை என பலவற்றை எளிமையான திரைமொழியில் ஆவணமாக்கியிருக்கும் இயக்குநர் தமயந்தியின் முயற்சி பாராட்டுக்குரியது.

-சு. கணேஷ்குமார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here