நடிகர் அர்ஜுன்தாஸ் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து புகழ் வெளிச்சம் பெற்றார். அதற்கு முன் ‘கைதி’ படத்தில் நடித்திருந்தாலும் மாஸ்டரில் வில்லனாக மிரட்டியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்ல திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தார்.
காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்த ‘போர்’ படத்தில் படு பயங்கர டெரர் முகம் காட்டினார். வில்லன் கேரக்டராக இருந்தாலும் ஆக்சன் ஹீரோவாக இருந்தாலும் அவருடைய கரகர குரல் அவருக்கு ஒருவித கம்பீரத்தைக் கொடுத்தது. அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’யில் வில்லனாக இரட்டை வேடத்தில் அதகளம் செய்தார்.
விஜய், அஜித் என இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன்தாஸ் இன்று வெளியாகியுள்ள ‘பாம்’ படத்தில் ஏற்றிருக்கும் கேரக்டர் அட அவரா இவர் என்று ஆச்சரியப்படும்படி இருக்கிறது.
ஒரு கிராமம் சாதிப் பாகுபாடால் இரண்டு தரப்பாக பிரிந்து கிடக்கிறது. மணிமுத்து என்ற பெயரில் வருகிற அர்ஜுன்தாஸ் கதைப்படி கீழ்சாதிக்காரர். பிரிந்து கிடக்கும் மக்களைச் சேர்த்து வைக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை அவர் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பது கதை.
நண்பர் இறந்து போகிறார். அதை அர்ஜுன்தாஸால் ஏற்க முடியவில்லை. ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் சென்று பரிசோதிக்க முடிவெடுக்கிறார். மேல் சாதிக்காரர்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடாது என தடுக்கிறார்கள். அவர்களை எதிர்த்துப் பேசினால் அந்த பக்கமுள்ள ஒருவர் பளாரென்று கன்னத்தில் அறைகிறார். அந்த அறை விழுந்ததுமே அர்ஜுன்தாஸை கொடூர வில்லனாக பார்த்து பழகியுள்ள நமக்கு, அறைவிட்டவனை அர்ஜுன்தாஸ் போட்டுப் பொளக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. ஆனால், அப்படி ஏதும் செய்யாமல் அடித்தவனை முறைத்துக் கூட பார்க்காமல் வேதனையை தாங்கியபடி கடந்து செல்கிறார். அப்படி மீண்டும் மீண்டும் அடிபடுகிற சூழ்நிலை. அப்போதும், அதிரடியில் ஈடுபடாமல் அடக்கி வாசிக்கிறார். காரணம், அவரது கேரக்டர் அப்படிப்பட்டது.
ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறார்.
இறந்து போன நண்பனை இறுதிச் சடங்கு செய்வதற்காக துக்குகிறார்கள். ஆனால் யாராலும் தூக்க முடியவில்லை. அந்தளவுக்கு சடலம் கனமாக இருக்கிறது. ஆனால், அர்ஜுன்தாஸ் சுலபமாக தூக்கி விடுகிறார்.
ஊர்மக்கள் எல்லோராலும் மதிக்கப்படுகிற பூசாரி ‘அவர் இறக்கவில்லை; சாமியாகி விட்டார்’ என்கிறார். சடலத்தை சாமியாக அலங்கரித்து மக்கள் வழிபடத் துவங்குகிறார்கள். யாருமே தூக்க முடியாதபோது தூக்குகிற சக்தி ஒருவனுக்கு கிடைத்திருக்கிறது என்றால் அவனை எல்லோரும் மதிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அதனால் அர்ஜுன்தாஸ் மக்களால் மதிக்கப்படுகிறார். அப்போதும் அலட்டிக் கொள்ளவில்லை. சாமியைத் தூக்கும் முன் எப்படி இருந்தாரோ அப்படியே மக்களிடம் நடந்து கொள்கிறார். அலட்டலாக பந்தாவாக எதையுமே செய்யவில்லை. தன்மையான மனிதர் என்ற தான் ஏற்ற கேரக்டராகவே மாறியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மக்கள் முன் சாமி வந்து ஆட வேண்டிய சூழ்நிலை. அந்த ஆட்டத்தில் வெறித்தனம் காட்டி சிலிர்ப்பூட்டுகிறார். நண்பனின் தங்கையைக் காதலிக்கிற கடமையை அதற்கான உணர்வுகளுடன் செய்திருக்கிறார். முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக சூறாவளியாய் சுழன்றடித்தவரா இவர் என ஆச்சரியப்படுத்துகிறார். விமர்சனங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுக்களை குவித்து வருகிறார்.
அர்ஜுன்தாஸை வெறுமனே அடிதடி வன்முறை ரத்தச்சகதி என போட்டுப் புரட்டாமல் கதையம்சமுள்ள கதாபாத்திரங்களைக் கொடுத்தால் சிறப்பாக நடிப்பார் என்பதற்கு ஏற்கனவே வசந்தபாலன் இயக்கிய ‘அநீதி’, சாந்தகுமார் இயக்கிய ‘ரசவாதி’ படங்கள் உதாரணங்களாக இருக்கின்றன. அதில் இப்போது இணைந்திருக்கிறது ‘பாம்.’
எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் பெஸ்டை தருகிற அர்ஜுன்தாஸுக்கு தமிழ் சினிமாவில் மாபெரும் எதிர்காலம் காத்திருக்கிறது!


