Home சினிமா நம் தந்தை, பாட்டன், முப்பாட்டன் கதைகளை மறந்து விடக்கூடாது; நாம் வந்த வழிகளை நம் குழந்தைகளுக்கு...

நம் தந்தை, பாட்டன், முப்பாட்டன் கதைகளை மறந்து விடக்கூடாது; நாம் வந்த வழிகளை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்! -‘இட்லி கடை’ பட விழாவில் கதையின் போக்கு பற்றி பேசிய நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. ,முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் உற்சாகமாக நடைபெற்றது.

நிகழ்வில் தனுஷ் பேசியபோது, ”எனக்காகக் காத்திருக்கின்ற ரசிகர்களுக்கு நன்றி. ராஜ்கிரண் சார் எங்கள் குடும்பமே உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. என் அப்பா படத்தின் முதல் ஹீரோவும் நீங்கள் தான். என் முதல் பட ஹீரோவும் நீங்கள் தான், நன்றி. சத்யராஜ் சார், உங்களோடு நடிக்கவேண்டும் என ரொம்ப நாட்களாக ஆசை. நீங்கள் பெரிய நடிகர். உங்களுக்கு எப்படி நடிக்கச் சொல்ல வேண்டும் என தயக்கம் இருந்தது. ஆனால், அதை உடைத்து, எனக்கு ஆதரவாக இருந்து நடித்ததற்கு நன்றி. அருண் விஜய் சார், நீங்கள் கதை கேட்ட உடனே நடிக்க ஒப்புக்கொண்டீர்கள், நன்றி. எனக்காக மண், புழுதி என உருண்டு புரண்டு நடித்தார். மிகப்பெரிய உழைப்பாளி. பார்த்திபன் சார், நீங்கள் நினைத்தது போல இது சின்ன ரோல் இல்லை. படம் பார்க்கும் போது புரியும்.

ஷாலினி சிறப்பாக நடித்ததற்கு நன்றி. நித்யா மேனன், அவர் நடிப்பதில் பெரிதாக ஈடுபாடு இல்லை என்று சொல்வார், ஆனால் சினிமாவுக்கு அவரை நிறையப் பிடித்துள்ளது. அவர் இன்னும் நிறைய நடிக்க வேண்டும். இப்படத்தில் நடித்த சமுத்திரகனி சார், இளவரசு சார், எல்லோரும் என் குடும்பம் மாதிரி. அனைவருக்கும் நன்றி. ஆகாஷ் பாஸ்கரன், நானே உங்களை சில முறை தான் பார்த்துள்ளேன். என்னை முழுதாக நம்பியதற்கு நன்றி. ஜீவி மாதிரி ஒரு நண்பன் கிடைத்தது ஆசீர்வாதம். அவர் இப்படத்தில் ரீல்சுக்கு மியூசிக் போட மாட்டேன், கதைக்கு உண்மையான மண் சார்ந்த இசை தான் செய்வேன் என முடிவு செய்து இசையமைத்துள்ளார். நன்றி ஜீவி. கிரண், இந்த படத்திற்கு பெரிய சப்போர்ட் நன்றி. பிரசன்னா, என்னுடைய எல்லா படத்திற்கும் அவர் தான் எடிட்டர். என்னுடன் தொடர்ந்து கூட இருப்பது அவர் தான். நன்றி. ஜாக்கி, உங்கள் திறமை தான் உங்கள் எதிரி. நீங்கள் போட்ட செட், செட் மாதிரியே தெரிவதில்லை. அதனால் உங்களைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்த படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. உடை வடிவமைப்பாளர் காவ்யா உங்கள் டீமிற்கும் நன்றி. ஷ்ரேயாஸ்-ன் கடும் உழைப்புக்கு நன்றி. அவரை எல்லோரும் பாராட்டுவதைக் கேட்கப் பெருமையாக உள்ளது. நன்றி.

இட்லி கடை என்ன டைட்டில் இது எனக் கேட்டார்கள். பொதுவாக படத்திற்கு ஹீரோ பெயர் தான் வைப்பார்கள், இதில் இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில். ஒரு முறை தனியாக இருக்கும் போது இளையராஜா சார் பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த பாடல் என் கிராமத்திற்கும், என் பாட்டி வீட்டிற்கும் கூட்டிப்போனது. அங்கு ஒரு பஸ் ஸ்டாண்ட் இருக்கும், ஒரே ஒரு கடை இட்லி கடை இருக்கும். அதிலிருந்து எனக்கு தினமும் இட்லி சாப்பிட வேண்டும். ஆனால் காசு இருக்காது. அப்போது உழைத்து 2 1/2 ரூபாயில் சாப்பிட்ட இட்லியில் கிடைத்த சந்தோசம், நிம்மதி இப்போது இல்லை. அந்த இட்லி கடையை வைத்தே ஏன் ஒரு படம் பண்ணக்கூடாது எனத் தோன்றியது. அந்த கிராமத்தையும், சென்னையில் நான் பார்த்த விசயங்களையும் வைத்து உருவானது தான் “இட்லி கடை”. நாம் நம் வாழ்க்கையில் நம் தந்தை, பாட்டன், முப்பாட்டன் கதைகளை மறந்து போய்விடக்கூடாது. நாம் வந்த வழிகளையும் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். வந்த வழியையும் வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது. இப்படத்தில் என் பாட்டி ஒரு சீனில் நடித்திருக்கிறார். இது எனக்கு மிகவும் பர்ஸனல் படம். என்னை ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டீர்கள், சமீபமாக உங்களை சந்தித்து வருகிறேன். நிறைய பேர் டாக்டராக, இன்ஞினியராக, டீச்சராக இருப்பதாகச் சொன்னீர்கள். அது தான் எனக்கு மிகப்பெரிய கர்வமும் சந்தோஷமும். “இட்லி கடை” படம் உங்களை மகிழ்விக்கும். நன்றி” என்றார்.

இயக்குநர் ஆர் பார்த்திபன், ”என் இனிய நண்பர் இயக்குநர்-நடிகர் தனுஷ் அவருக்கும், இந்த அரங்கத்தை கோலாகலமாக வைத்திருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் வணக்கம். ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருக்கு இரண்டு இளவரசர்கள்—ஒருவர் ஆயிரத்தில் ஒருவன், மற்றவர் பத்தாயிரத்தில் ஒருவன். எந்த வாய்ப்பும் கிடைத்தால் அதில் வித்தகனாக இருப்பவர் இந்த இளையவர் தனுஷ் தான். யாத்ரா, லிங்கா படங்களில் இருவருக்கும் எனக்கு பொறாமை. டப்பிங்கில் தனுஷ் சாருடன் பேசும்போது, அவர் வைத்திருந்த போனை பார்த்து “போன் நம்பர் தர முடியுமா?” என்றேன். அவர் சொன்னார், “இது என் பசங்களிடம் மட்டுமே பேசுவதற்கானது.”

படங்களைப் பற்றி பேச வேறு போன் இருக்கும் போலே! தமிழ் திரையுலகில் கமல் சார் திறமை நிறைந்தவர்; அதற்கு இணையான திறமை கொண்டவர் தனுஷ். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஜீவி திறமைக்கான படம் இது அல்ல; 10 வருடங்களுக்கு முன்பே ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை செய்துவிட்டார். அவரது திறமை இன்னும் 50 வருடங்கள் கொண்டாடப்படும். பவர் பாண்டி பார்த்து ராஜ்கிரண் சார் மீது பொறாமை வந்தது! நடிப்பு ராட்சசி நித்யா மேனன் ஏற்கனவே தனுஷ் சாருடன் நடித்தார், தேசிய விருது பெற்றவர். இதிலும் வெற்றி பெறுவார். அருண் விஜய் கடுமையாக உழைத்து இந்த நிலை அடைந்தார்; பிரமாதமான ரோல் செய்துள்ளார். இத்தனை நட்சத்திரங்களுடன் நானும் ஒரு சிறிய ரோல் செய்துள்ளேன். ஷ்ரேயாஸ் தான் என்னை அழைத்து நடிக்க வைத்தவர்; நடிகர்களை பொறுப்புடன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கும், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் நன்றி. உங்களைப் போன்ற ரசிகர்களின் ஆதரவோடு இந்த படத்தை பார்த்திட ஆவலோடு காத்திருக்கிறேன், நன்றி” என்றார்.

நடிகர் சத்யராஜ் ”ஒரு நல்ல தயாரிப்பாளரோடு நடிகனாக நான் சௌக்கியமாக இருக்கிறேன். தனுஷ் அவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொண்டார். நடிப்பு, எழுத்து, இயக்கம் என சகலகலா வல்லவனாக கலக்குகிறார். பவர் பாண்டி படம் பார்த்து ரொம்ப பொறாமைபட்டேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. தனுஷ் சார் நடித்த ‘அசுரன்’, ‘கர்ணன்’ படங்கள் பார்த்து அசந்துவிட்டேன். இவ்வளவு பெரிய ஹீரோ படத்தில் அம்பேத்கர், பெரியார் கருத்துக்கள் பேசிய வெற்றிமாறன், மாரி செல்வராஜுக்கு நன்றிகள். இந்த படம் கதை சொன்ன போது, முதலில் பார்த்திபன் சார் ரோல் தான் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், அவர் இதுதான் உங்களுக்கு சரியாக வரும் என்று எனக்கு பாடல் எல்லாம் தந்துள்ளார். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். அருண் விஜய் ஹீரோவாக இருந்தாலும் அடுத்த ஹீரோ படத்தில் நடிப்பதில் தயக்கம் இருக்கும். ஆனால், இதையெல்லாம் விட்டு இந்த கதையை புரிந்து அற்புதமாக நடித்துள்ளார். நான் என் வயது மூத்தவர்களிடமும், தனுஷ் மாதிரி சின்னவர்களிடமும் நல்ல விசயங்கள் இருந்தால் கற்றுக் கொள்வேன். நடிப்பைப் பற்றி அவரிடம் சொல்லிக் கற்றுக் கொண்டேன். அவருடைய இயக்கத்தை பார்த்து அசந்தேன். இந்த படத்தில் எல்லாம் அம்சமாக அமைந்துள்ளது. ஜீவி இசை அற்புதம். எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் அருமையாக உழைத்துள்ளனர். இதற்கெல்லாம் காரணமாக இருந்த தனுஷ் சார் நன்றி. அவர் மாதிரி ஹாலிவுட் படத்தில் நான் நடித்திருந்தால் என் நடையே மாறியிருக்கும். ஆனால் அவரின் அடக்கம் என்னை வியக்க வைக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை நித்யா மேனன் ”தனுஷ் சார் முதலில் இந்த படத்திற்காக கேட்டபோது எனக்கு டேட் இல்லை. பிறகு வேறு நடிகை வந்தார், ஆனால் மாறிவிட்டார். மீண்டும் ஷீட்டுக்கு முன்னர் ‘நீ தான் நடிக்க வேண்டும்’ என்று சொன்னார். இந்த படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். ‘திருச்சிற்றம்பலம்’ போல நான் இதற்கே செட் ஆகிறேனா? என்று கேட்டேன். அவர் ‘நீ தான் கச்சிதமாக இருப்பாய்’ என்று சொன்னார். எனக்கு இளவரசு, சமுத்திரகனி, தனுஷ் சாருடன் அதிக காட்சிகள் உள்ளன. இங்கு சத்யராஜ் சார், பார்த்திபன் சார் எல்லோரையும் பார்த்ததில் சந்தோசம். இந்த குழு என் குடும்பம் போல. இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தனுஷ் சார், நடிகரைத் தாண்டி இயக்குநராக எனக்கு மிகவும் பிடித்திருக்கிறார். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் “பொல்லாதவன்” எனக்கு மூன்றாவது படம். அப்போது நான் சின்ன பையன், தனுஷ் என் கைபிடித்து இசை விழாவிற்கு அழைத்துச் சென்றார். அப்போதிருந்து இந்த நட்பு தொடர்கிறது. என் சகோதரர் மாதிரி, அவர் ஒருத்தரை நேசித்தால், அவரிடமிருந்து ‘நோ’ என்ற சொல்லே வராது. இட்லி கடை நம் மண் சார்ந்த கதையில் ஒரு அருமையான படமாக உருவாகியுள்ளது. உங்கள் தந்தையை இந்த படம் பார்க்கும்போது நினைத்துப் பார்ப்பீர்கள். இந்த படமும் எங்கள் கூட்டணியில் வெற்றிப்படமாக இருக்கும். அருண் விஜய் சார், சத்யராஜ் சார், பார்த்திபன் சார் என அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். ஷாலினியும் நன்றாக நடித்துள்ளார். நித்யா மேனன் கலக்கியுள்ளார். Dawn Pictures க்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் அருண் விஜய் ”இட்லி கடை படக்குழு, பத்திரிக்கை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நான் மற்ற ஹீரோ காம்பினேஷனில் 2-3 படங்கள் பண்ணியிருக்கிறேன். “டக்குனு ஓகே” சொன்ன படம் ஒன்று “என்னை அறிந்தால்”, இன்னொன்று “இட்லி கடை”. தனுஷ் எனும் இயக்குநர் மீது வைத்த நம்பிக்கை தான் காரணம். இட்லி கடை படத்தின் கருவை அத்தனை அட்டகாசமாகச் சொல்லியுள்ளார். உங்கள் மீதான நம்பிக்கையில் வருகிறேன் என்றேன், என்னை அப்படிப் பார்த்துக்கொண்டார். அவரை இயக்குநராகப் பார்த்து வியந்தேன். அதிலும் நடித்து இயக்குவது எளிதல்ல. அவர் எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பார். “என்னடா இந்த மனுஷன் இத்தனை விருது வாங்கி, ஹாலிவுட் வரை போய்வந்துவிட்டு இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறாரே” என வியந்து பார்ப்பேன். தான் செய்கிற வேலையை தெளிவாகச் செய்ய அந்த காதலும் உழைப்பும் இல்லையென்றால் எதுவும் முடியாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், அவர் உழைத்துக் கொண்டே இருக்கிறார். அவருடன் நடித்தது மிகப்பெரிய சந்தோசம். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்தில் சத்யராஜ் அண்ணனுடன் நடித்தது மகிழ்ச்சி. பார்த்திபன் சார், ராஜ்கிரண் சார் எல்லோருடனும் நடித்தது மகிழ்ச்சி. ஷாலினி துருதுருவென இருப்பார், அவர் தான் எங்கள் எண்டர்டெயினர். நித்யா மேனன் தனுஷ் சாருடன் வேறு மாதிரி நடிப்பைத் தந்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜீவி பிரதர், இவர்கள் எப்படித்தான் இப்படி ஒரு ஹிட் தருகிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. பின்னணி இசையைக் கேட்க ஆசை. எங்கள் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், அவரை இங்கு தான் முதன்முதலில் பார்க்கிறேன். இந்த டீமை முழுமையாக நம்பி படம் தந்துள்ளார். நன்றி. இட்லி கடை, குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்த படமாக இருக்கும்” என்றார்.

நடிகர் ராஜ்கிரண், நடிகர் இளவரசு, நடிகை ஷாலினி பாண்டே, கலை இயக்குநர் ஜாக்கி, ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன், ஒளிப்பதிவாளர் கிரண், எடிட்டர் பிரசன்னா GK, உடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராம், இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், நடிகர் விஜயகுமார், இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, இயக்குநர் கஸ்தூரி ராஜா, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்