Home விமர்சனம் தண்டகாரண்யம் சினிமா விமர்சனம்

தண்டகாரண்யம் சினிமா விமர்சனம்

அதிகார வர்க்கம் ஏழை எளிய மக்களிடம் பெரும்பாலும் சதிகார வர்க்கமாகவே நடந்து ‘கொல்’லும். அந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லும் வலிமிகு படைப்புகளின் வரிசையில் ‘தண்டகாரண்யம்.’

நக்சல்களை முழுமையாக அழிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிற மையத்தில் பழங்குடி இனத்தவரான இளைஞன் முருகன், தன்னை நக்சல் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு இணைகிறான். அவனிடம், அந்த மையத்தில் தருகிற பயிற்சிகளுக்குப் பின் அரசாங்க வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதில் இணைவதற்காக அவரது அண்ணன் விளைநிலத்தை விற்று லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறார்.

நக்சல்களை அழிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிற இடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றால் அரசாங்க வேலையா? அப்படியென்ன பயிற்சி? அப்படியென்ன வேலை? அந்த வேலை கிடைக்கும் என நம்பிப் போன முருகனுக்கு அது கிடைத்ததா? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திக்திக் உணர்வு தந்து பயணிக்கும் திரைக்கதை….

போலீஸ் பயிற்சி மைய உயரதிகாரியின் கறாரான கண்டிப்புக்கு ஆளாக வேண்டும், தன்னைப் போலவே பயிற்சி பெறுகிற ஒருவனின் ரவுடியிஸத்தால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும், அதிகாரிகள் அடிக்கிற வெறித்தன அடி உதைக்கு ஆளாகி ரத்தம் சிந்த வேண்டும், தன்னையும் தன்னைப் போலவே சிக்கியவர்களையும் கொலை செய்யப் போகிறார்கள் என்பது தெரிந்தபின் அதுவரை அடி உதைகளைப் பொறுத்துக் கொண்டிருந்தவர் ஆவேசப் பாய்ச்சல் நிகழ்த்த வேண்டும், காதலியோடு கொஞ்ச வேண்டும், அவளைப் பிரிந்து வாழ்கிற ஏக்கத்தை, தன் குடும்பத்தினர் மீதான பாசத்தை, அண்ணன் மீதான மரியாதையை என மற்ற உணர்வுகளையும் அள்ளித் தெளிக்க வேண்டும். அத்தனையையும் சரியாகச் செய்திருக்கிறார் முருகனாக வருகிற கலையரசன்.

காட்டைப் பாதுகாப்பதாக சொல்லிக் கொண்டு தங்கள் இனத்தவர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளும் அதிகாரிகளிடம் ‘உங்களால் காட்டை வேண்டுமானால் பாதுகாக்க முடியும், ‘காட்டை வளர்க்கணும்னா பழங்குடி மக்கள் வேணும்’ என்று சொல்லி ஆக்ரோசமாவதாகட்டும், தன் இனத்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் களமிறங்கி துணிச்சல் காட்டுவதாகட்டும், அந்த துணிச்சலுக்கு பரிசாக தலைகீழாக கட்டி வைத்து அடிக்கும்போது உடல் முழுதும் ரணமாவதாகட்டும், தன் தம்பி முருகனின் இழப்புக்கு பழிவாங்க வேறொரு அவதாரமெடுத்து துப்பாக்கியுடன் சீற்றமடைவதாகட்டும் ஒவ்வொரு பிரேமிலும் ‘கெத்து’ காட்டியிருக்கிறார் பழங்குடி மக்களின் பாதுகாவலனாக வருகிற தினேஷ்.

பயிற்சி மையத்தின் லீடராக அன்பு மயில்சாமி கம்பீரம் காட்டியிருக்க, அவரது தலைமையில் பயிற்சி பெறுகிற ஷபீர் கல்லரக்கல் சக பயிற்சியாளர்களிடம் அடாவடித்தனமாக நடந்துகொள்கிற கதாபாத்திரத்தை அதற்கான அலட்டலுடன் செய்திருக்கிறார்.

கலையரசனின் நண்பனாக பாலசரவணன். கலையரசன் அனுபவிக்கிற அவஸ்தைகளை அவரும் அனுபவிக்கும்படி கதையோட்டம் அமைந்திருக்க, அந்த வலிகளை சரியான விதத்தில் பிரதிபலித்து, ஒரு காட்சியில் அவரது ஸ்டைலில் காமெடி பங்களிப்பைத் தந்து கலகலப்புக்கு உதவுகிறார்.

கலையரசனின் காதலியாக வின்சு, தினேஷின் மனைவியாக ரித்விகா, அருள்தாஸிலிருந்து மனிதாபிமானத்தை கழற்றி வைத்துவிட்டு அநியாய அக்கிரமங்களை அளவில்லாமல் செய்கிற அதிகாரிகளாக வருகிறவர்கள் என பலரும் கச்சிதமான நடிப்பால் காட்சிகளை பலப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரதான கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் எல்லோருமே உடம்பை வருத்திக் கொணடு நடிக்கும்படி காட்சிகள் அணிவகுக்க, தினேஷின் அப்பாவாக வருகிறவர் அயோக்கியன் ஒருவனிடம் மிதிபடும்போது மனம் கலங்குகிறது.

ஜார்க்கண்டின் நிலப்பரப்பில் அடர்ந்து பரந்த காடு, காட்டுக்குள் பயிற்சி மையம், ஆங்காங்கே பாய்ந்தோடும் நீர்நிலைகள் என கதை நிகழ்விடங்களை கழுகுப் பார்வையில் காண்பித்து படத்தை பிரமாண்டமான விஷுவல் விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா.

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசைக்கு படத்தின் தர மதிப்பீட்டை உயர்த்தியிருப்பதில் பெரும் பங்கிருக்கிறது.

அப்பாவி மக்களை நக்சல்களாக சித்தரித்து அதிகார வர்க்கம் நடத்திய, நடத்தும் கொடூரங்களை அதன் வீரியத்துடன் உருவாக்கி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தரமான படைப்புகளில் ஒன்றாக்கியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை!

-சு. கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்