Home விமர்சனம் கிஸ் சினிமா விமர்சனம்

கிஸ் சினிமா விமர்சனம்

காதல் மதுவில் ஃபேண்டஸி சோடாவை கலந்து கலக்கி, சைடிஸாக காமெடி மிக்ஸரை பரிமாறியிருக்கும் ‘கிஸ்.’

கதைநாயகன் நெல்சனுக்கு காதல் என்றாலே பிடிக்காது. அவரிடம் இளம்பெண் ஒருவர் மூலம் பழங்காலப் புத்தகம் ஒன்று வந்து சேர, அவர் கண்ணில் தொடர்ந்து காதலர்கள் தென்பட, அவர்கள் கிஸ்ஸடிக்க, உடனடியாக அவர்களின் எதிர்காலத்தை கவினால் மனக்கண்ணில் காட்சியாகப் பார்க்க முடிகிறது. மனிதர்கள் முத்தமிட்டால் மட்டுமல்ல; நாய்கள் முத்தமிடுவதைப் பார்த்தால்கூட அதே நிலைமை.

நெல்சன், தனக்கு அப்படியொரு விசேச சக்தி கிடைத்தற்கு காரணமான புத்தகத்தைக் கொடுத்த பெண்ணைச் சந்தித்துப் பேசிப் பழக, பழக்கம் நெருக்கமாக காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண் கவினை முத்தமிட அந்த விசேச சக்தியால் நெல்சனுக்கு அவளது எதிர்காலம் விஷுவலாக விரிகிறது; அது அதிர்ச்சி தருகிறது. அதனால் நெல்சன் காதலியைப் பிரியும் முடிவுக்கு வருகிறான்.

அந்தளவுக்கு அவனை அதிர்ச்சியடைய வைத்தது எது? பிரிந்த காதலர்கள் இணைந்தார்களா இல்லையா? அந்த வில்லங்கமான புத்தகத்தின் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நிறைவுக்கு வருகிறது நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ‘கிஸ்’ படத்தின் கதை.

காதலர்களை கண்டால் வெறுப்பது, அவர்கள் முத்தமிடுவதைப் பார்த்தபின் மனதில் தோன்றும் காட்சிகள் விபரீதமாக இருக்க பதட்டப்படுவது, காதல் உணர்வில் மிதப்பது, எமோஷ்னல் ஏரியாவில் அளவாக அட்டடனன்ஸ் போடுவது என கதையின் முக்கியப் பகுதிகளை பொருத்தமான நடிப்பால் நிரப்பியிருப்பவர் காமெடி களேபரத்தில் மிங்கிள் ஆகாமல் மிரட்சியான முகபாவம் காட்டியபடி கடந்துபோகிறார்.

கவினுக்கு ஜோடியாக வருகிற பிரித்தி அஸ்ராணியின் கதாபாத்திரம் நடனத்தில் ஈடுபாடுள்ளவராக உருவாக்கப்பட்டிருக்க அதற்கேற்ப வளைந்து நெளிகிறது அவரது ஒல்லிப்பிச்சான் உடல்வாகு. காதலிக்கும்போது உற்சாகம், காதலனைப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் குழம்பிக் கலங்கிய மனநிலை என கதை கேட்கிற உணர்வுகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொடுத்திருக்கின்றன அவரது முகபாவங்கள்.

மனநல சிகிச்சை நிபுணராக வருகிற வி டி வி கணேஷ் காமெடி கலாட்டாவில் இறங்கியடிக்க, அவருக்குத் துணையாக நின்று வசனங்களால் ரகளை செய்கிறார் மிர்ச்சி விஜய்.

கதாநாயகனின் அம்மாவாக தேவயானி, அப்பாவாக ராவ் ரமேஷ், ராவ் ரமேஷின் காதலியாக கௌசல்யா, கதாநாயகனுக்கு வந்திருக்கும் பிரச்சனைக்கு தீர்வு சொல்வதற்காக எட்டிப் பார்க்கிற இளைய திலகம் பிரபு என இன்னபிற நடிகர், நடிகைகள் கதையில் கலந்திருக்கிறார்கள்.

ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு, கதையோட்டத்தின் நிறைவில் பற்றியெறிகிற தீ விபத்துக்கான கிராபிக்ஸ் பங்களிப்பு என டெக்னிகல் அம்சங்கள் அசத்துகின்றன. ஜென் மார்ட்டின் இசையில் வரிசைகட்டும் பாடல்கள் செவிக்குள் நுழைந்து மனதுக்குள் தங்காமல் வெளியேறுகின்றன. பின்னணி இசை காட்சிகள் கடத்த நினைக்கும் உணர்வுகளுக்கு உதவி செய்கிறது.

நாயகன் சந்திக்கும் சிக்கல்களுக்கு அஸ்திவாரமாய் இருக்கிற ராஜா காலத்துக் கதையில் இருக்கிற பரபரப்பும் சுவாரஸ்யமும் நிகழ்காலக் கதை முழுவதும் தொடரும்படி அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும் அதில் பின்னிப் பிணைந்திருக்கும் நகைச்சுவையும் ‘கிஸ் டோன்ட் மிஸ்’ என்று சொல்ல வைக்கிறது!

-சு.கணேஷ்குமார்
  

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்