படையாண்ட மாவீரா சினிமா விமர்சனம்

உண்மைக் கதையில் கற்பனை கலக்கும்போது எத்தனை சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக அணிவகுக்கும் படங்களின் வரிசையில் ‘படையாண்ட மாவீரா.’

‘காடு வெட்டி’ குரு தமிழகம் அறிந்த ஆளுமைகளில் ஒருவர். வன்னியர்கள் சங்கத் தலைவராக இருந்தவர்; பாட்டாளி மக்கள் கட்சியில் அங்கம் வகித்தவர்; எம் எல் ஏ.வாக பொறுப்பு வகித்தவர். அவரை பற்றி பல சர்ச்சைகள் உண்டு. அதையெல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு,

நமது பூமியின் வளங்களை அழிக்க முன்வந்தவர்களை முடக்கிய துணிச்சலில் தொடங்கி, பலகோடி பணம் கொடுத்து இழுக்க முயற்சித்த மாபெரும் அரசியல் கட்சியின் அழைப்பை நிராகரித்தது வரை அவர் மக்கள் நலனுக்காக செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க விஷயங்களை எடுத்துக்காட்டியிருக்கும் படம்.

பெண்களிடம் யாரேனும் தவறாக நடந்துகொண்டால் அவர்களை முந்திரிக்காட்டுக்கு உரமாக்குவதாகட்டும், சிமெண்ட் ஆலையாலும் நிலக்கரி வெட்டியெடுப்பதாலும் உருவாகும் பாதிப்பை முன் வைத்து மக்களைத் திரட்டி போராடுவதாகட்டும் குருவாக நடித்திருக்கும் வ கெளதமனின் நடிப்பு அவரது கனமான கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறது; வசனங்களைப் பேசும் விதத்தில், சண்டைக் காட்சிகளில் காட்டும் வேகத்தில் கேப்டன் விஜய்காந்திடமிருக்கும் ஆற்றல் தெரிகிறது.

கெளதமனின் மனைவியாக வருகிற புஜிதா தளதளப்பாக பளபளப்பாக இருக்கிறார். காட்சிகள் குறைவென்றாலும் கணவருடனான பாசநேச கெமிஸ்ட்ரியிலும் பாடல் காட்சியில் வெளிப்படுத்தும் மெல்லிய கவர்ச்சியிலும் அசத்துகிறார்.

இளவயது குருவாக வருகிற தமிழ் கெளதமனின் உடற்கட்டு கம்பீரமாகவும் தன் தந்தையைக் கொன்றவரை பழிதீர்க்கும் காட்சியில் வெளிப்படும் ஆக்ரோசம் மிரட்டலாகவும் இருக்கிறது.

கெளதமனின் அப்பாவாக வருகிற சமுத்திரகனி, அம்மாவாக வருகிற சரண்யா பொன்வண்ணன் இருவரின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பு, கெளதமனின் படைத் தளபதி போன்ற கதாபாத்திரத்தில் விசுவாசத்தின் உச்சத்தைக் காட்டும் மன்சூர் அலிகானின் பக்குவப்பட்ட நடிப்பு, திமிர்த்தனம் அராஜகம் கொலைவெறி என கெட்ட விஷயங்களின் மொத்த உருவமாக ஆடுகளம் நரேனின் ஆர்ப்பாட்டமான நடிப்பு, சந்தனக் கடத்தல் வீரப்பனாக வருகிற கராத்தே ராஜுவின் தோரணையான நடிப்பு இப்படி படத்தில் நடித்துள்ள அத்தனைப் பேரையும் தனித்தனியாக புகழ்கிற அளவுக்கு பங்களிப்பில் ஆழம் இருக்கிறது.

கதையோட்டத்திற்கு உயிரோட்டம் தருகிற வைரமுத்துவின் பாடல் வரிகளை ஜி வி பிரகாஷின் இசை செவிகளுக்கு விருந்தாக்க, பாடல் காட்சிகளில் தோன்றுகிறவர்களின் பளீர் வண்ண உடைகளும் காட்சிகளுக்கான கலர்ஃபுல் பின்னணியும் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றன.

படத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக இருக்கிறது சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை.

பரந்து விரிந்த முந்திரிக்காடு, மலைப் பகுதிகளின் பசுமை நிரம்பிய அழகு என கதை நிகழ்விடங்களின் நீள அகலங்களை அதனதன் தன்மை மாறாமல் தன் கேமராவில் அடக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன்.

காடு வெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவியிருக்கும் இந்த படத்தை ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் கவரும் படைப்பாக இல்லாமல், கற்பனை கலந்த சினிமா மசாலாக்களைத் தூவி கமர்சியல் சினிமா பிரியர்கள் அனைவரையும் கவரும்படி இயக்கியிருக்கிற வ கெளதமனின் சாமர்த்தியத்தைப் பாராட்டலாம்.

படையாண்ட மாவீரா – வரலாறு போற்றும் போர் வீரா!

-சு.கணேஷ்குமார் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here