Home விமர்சனம் பனை சினிமா விமர்சனம்

பனை சினிமா விமர்சனம்

‘பனையே துணை’ என்றிருப்பவர்களின் உழைப்பைக் கசக்கிப் பிழியும் சதிகாரன் ஒருவனை, சாமானியன் ஒருவன் சவக்குழிக்கு அனுப்பும் கதை.

கதை நடக்குமிடம் கருப்பட்டிக்குப் பெயர் போன உடன்குடி. அங்கு சொந்தமாக பனை மரம் வைத்திருப்பவர்கள் பதநீர் இறக்கலாம்; ஆனால், அதை காய்ச்சி கருப்பட்டி உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டுபோக முடியாது. அந்த வேலையை ராஜா அண்ணாச்சி என்பவர்தான் செய்வார். அவரை மீறி யாராவது எதையாவது செய்ய நினைத்தால் அடி உதை, கொலை என எந்த எல்லைக்கும் போவார். அப்படிப்பட்ட ராட்சசனை எதிர்க்க முத்துவேல் என்ற இளைஞன் கெத்தாக களமிறங்குகிறான். இது கதையின் ஒரு பாதி. அவன் அவரை எப்படி வீழ்த்துகிறான் என்பது மீதி… இயக்கம் ஆதி பி ஆறுமுகம்

முத்துவேலாக ஹரிஷ் பிரபாகரன். மீசையில்லாத முகம் தமிழக கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு அவ்வளவாக பொருந்தாவிட்டாலும், பாட்டியின் சொல்படி கருப்பட்டி தயாரிப்பில் இறங்கி முறையாக உழைப்பது, அதன் விளைவாக டிவி.யில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு முன்னுதாரண மனிதாக மாறி நிற்பது, அண்ணாச்சியை நேரடியாக எதிர்த்தால் பலனிருக்காது என்பதை உணர்ந்து சாமர்த்தியமாய் சம்பவம் செய்வது, தன்னைக் காதலிக்கும் பெண்ணிடம் அளவோடு பழகுவது என நடிப்புப் பங்களிப்பில் குறைவைக்கவில்லை.

சொந்தமாக பனை மரம் வைத்திருப்பவர்கள் இறக்கும் பதநீரை நியாயமற்ற விலைக்கு கொள்முதல் செய்வது, சொந்தமாக கருப்பட்டி தயாரிக்க நினைப்பவர்களை அடித்து உதைத்து முடக்குவது, தனக்கு கட்டுப்படாதவர்களின் பனை மரங்களை அழிப்பது, கருப்பட்டியில் கலப்படம் செய்வது, தனக்கு எதிராக யாரேனும் செயல்படுவதாக தெரிந்தால் கொலை செய்யவும் தயங்காதது என ராஜா அண்ணாச்சியாக வருகிற எம் ராஜேந்திரன் (இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர்) காட்டியிருக்கும் வில்லத்தனத்தில் மிதமான மிரட்டல் தெரிகிறது.

சீரியஸான கதையில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல் அடிக்கடி எட்டிப் பார்க்கிற மேக்னாவின் படபடக்கும் விழிகளும், பேசும்போது லேசாக மட்டுமே திறந்துமூடுகிற இதழ்களும் கொள்ளை அழகு. ஒரு காட்சியில் அவர் வேட்டியை மடித்துக் கட்டி, டீ சர்ட் அணிந்து வரும்போது முன்னழகு இளைஞர்களை மூடாக்கவும், பின்னழகு ரத்தத்தை சூடாக்கவும் வாய்ப்பிருக்கிறது. பதநீரை குடித்துவிட்டு போதையேறி போடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது. கவர்ச்சியோடு நின்று விடாமல், கதைப்படி அய்யர் வீட்டுப் பெண்ணான அவர் கருப்பட்டி தயாரிக்கிற இளைஞனை துரத்தித் துரத்தி காதலிக்கிற வேலையையும் கச்சிதமாக செய்திருக்கிறார்.

கெடுபிடியான அண்ணாச்சியின் எடுபிடியாக எங்கு பணிய வேண்டும், எங்கு குனிய வேண்டும் என்ற இலக்கணத்துடன் வலம் வருகிறார் இமான் அண்ணாச்சி.

கதாநாயகனை கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபட வைப்பதாகட்டும், அவனுக்குள் அண்ணாச்சியை எதிர்க்கும் துணிச்சலை உருவாக்குவதாகட்டும் தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார் பாட்டியாக வருகிற வடிவுக்கரசி.

அண்ணாச்சியின் கொடுமைகளைக் கண்டு மனம் வெறுத்து, பல ஆண்டுகளாக அவருடன் பேச்சை நிறுத்திக் கொண்டவராக, ஒரு கட்டத்தில் அவரது மூச்சை நிறுத்தவும் தயாராகிறவராக அனுபமா குமாரின் அமைதியான நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது.

கொஞ்ச நேரமே வந்து போனாலும் கதையில் முக்கியத்துவம் பெறுகிறது மருதன் – தனம் காதல் ஜோடியின் பெர்ஃபாமென்ஸ்.

கஞ்சா கருப்பு அப்படியும் இப்படியும் திரிந்து கொண்டிருப்பது சிரிப்புக்கு உதவுகிறது.

கட்டுமஸ்தாக இருக்கிற பாலியல் தொழிலாளி ஒருவரை ராஜா அண்ணா அடிக்கடி போய் அனுபவிப்பதும் அவர் சமைக்கும் பன்றிக் கறியை ருசிப்பதுமாய் இருக்க, அதே வேலையைச் செய்ய இமான் அண்ணாச்சியும் கஞ்சா கருப்பும் போட்டி போடுவது கிளுகிளுப்பான எபிசோடுகள்.

மீரா லால் இசையில் வைரமுத்துவின் வரிகளில் பனை மரத்தின் அருமை பெருமைகளை விவரிக்கும் ‘பனைமரம் பனைமரம் பணம் காய்க்கும் பனை மரம்’ பாடல் மனதில் இடம்பிடிக்கிறது; லாலா கடை ரிஷா குத்தாட்டம்போடும் ‘என் பேரு ஜன்ஜனக்கா’ பாடல் உற்சாகத்துக்கு உத்தரவாதம் தருகிறது; ஒத்தயில நிக்கிறேனே’ பாடலும் அசத்துகிறது.

கருப்படி என்றாலே உடன்குடி என்ற ஊர் நினைவுக்கு வருகிற அளவுக்கு பதநீர் இறக்குவதை, அதைக் காய்ச்சி கருப்பட்டியாக்கி விற்பனைக்கு கொண்டு வருவதை தொழிலாக செய்கிற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருப்பது, நாமே அந்த பகுதிகளுக்கு சென்று பார்த்து திரும்பியது போன்ற மன நிறைவைத் தருகிறது.

பனை மரத்தின் மகத்துவம் ரொம்பவே பெரியது. அதை உணர்த்த வேண்டும், பனை மரங்கள் காப்பாற்றப்பட வேண்டும், பனைத் தொழிலை நம்பியிருப்பவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டும்… இப்படியான நல்ல நோக்கங்களைச் சுமந்திருக்கும் இந்த படம் கமர்ஷியல் படைப்பாகவும் இருப்பதால் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுக்கலாம்!

-சு. கணேஷ்குமார் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்