கும்கி 2 சினிமா விமர்சனம்

யானைக்கும் எளிய மனிதனுக்குமான பாசப்பிணைப்போடு அழகிய காதலையும் கலந்துகட்டி பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’க்கு கிடைத்த வரவேற்பு தமிழ் சினிமாவில் வரலாறாக நிலைத்திருக்கிறது. அந்த கும்கி’க்கு தொடர்பில்லாத வேறொரு கதையாக விரிகிறது ‘கும்கி 2.’

பூமி சிறுவனாக இருக்கிறபோது, தாயை இழந்து தவிக்கும் ஒரு யானைக் குட்டிக்கு ஆதரவளிக்கிறான்; நிலா என பெயர் சூட்டி பாசமாக வளர்த்து ஆளாக்குகிறான். மதி இளைஞனாகிவிட்ட, நிலா 20-வது வயதை எட்டிவிட்ட காலகட்டத்தில், அரசியல் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு கும்பல் நிலாவை பலியிட திட்டமிடுகிறார்கள். பூமி துடித்துப் போகிறான். நிலாவைக் காப்பாற்ற களமிறங்குகிறான். அந்த களப்பணியில் அவன் சந்திக்கும் சவால்கள், கஷ்ட நஷ்டங்கள் காட்சிகளாக விரிய நிலாவை பூமியால் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…

உயிருக்குயிராக வளர்த்த யானை காணாமல் போனதும் காட்டுகிற பரிதவிப்பு, யானையை மீண்டும் காணும்போது பிரதிபலிக்கிற பரவசம் என கதைநாயகன் பூமியாக வருகிற மதியின் நடிப்புக்கு பாஸ்மார்க் தரலாம்.

யானையை மீட்பதற்கான போராட்டத்தில் அவரது பங்கு குறைவாக இருக்க, கொலைவெறிக் கும்பலின் தாக்குதல்களில் இருந்து அவரைக் காப்பாற்றும் பொறுப்பை நிலாவாக வருகிற யானை மீது ஏற்றியிருக்கிறது திரைக்கதை. அந்த யானை வளர்த்தவன் மீது பாசத்தைப் பொழிந்து, தன்னிடமிருக்கும் பந்துவீச்சுத் திறமையைப் பயன்படுத்தி தன்னைப் பலியிட வட்டமிடுபவர்களை சிக்ஸராக சுழற்றியடித்து தன் பொறுப்பை சரியாக செய்துமுடிக்கிறது. விசிலடிப்பது, ஓவியம் வரைந்து அனிமல் பிகாஸோவாக புகழ் பெறுவது என நிலாவை ரசிக்க இன்னும் சில காட்சிகளும் படத்தில் உண்டு. யானை சார்ந்த காட்சிகளில் கிராபிக்ஸ் பங்களிப்பு நேர்த்தி.

இடைவேளைக்குப் பிறகு என்ட்ரி கொடுத்து என்ட் கார்டு போடும்வரை வருகிற அர்ஜுன்தாஸ் அரசியல்வாதியின் சதித்திட்டத்துக்கு துணைநிற்கிற நபராக அலட்டலில்லாத வில்லத்தனத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

ஆரம்பக் காட்சியில் பூமியாக வருகிற சிறுவன் யானையை பள்ளத்திலிருந்து மீட்பது, அதற்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பது என நீள்கிற காட்சிகளில் இருக்கிற உயிரோட்டம் படத்தின் பலம்.

ரசூல் பூக்குட்டியின் டீமில் உள்ளவர்கள் என சொல்லிக்கொண்டு காட்டுக்குள் களப்பணியாற்றி ஒலிப்பதிவு செய்கிற பெண்ணாக ஸ்ரீதாராவ் கதையின் முக்கியமான பகுதியை ஒருசில நிமிடங்கள் ஆக்கிரமிக்கிறார். ஹீரோவின் அம்மாவாக, கரடுமுரடான பெண்மணியாக கவனம் ஈர்க்கும்படி களமாடி நகர்கிறார் மைனா சூசன்.

ஹீரோவின் நண்பராக வருகிற ஆண்ட்ரூஸ், யானையைப் பலிகொடுத்து பதவியை தக்கவைக்க நினைக்கும் முதலமைச்சராக பிளாரென்ட் பெராரா, அவரது குற்றச் செயல்களுக்கு உதவி செய்கிற காவல்துறை அதிகாரியாக ஹரீஷ் பெராடி, ஆகாஷ் என இன்னபிறரின் நடிப்பு கச்சிதம்.

பசுமை நிரம்பி பரந்து விரிந்த காடு, மலை, அருவி என கதை நிகழ்விடங்களில் அழகை படம் முழுக்க அள்ளி அள்ளி பருகும் வாய்ப்பைத் தருகிறது ஒளிப்பதிவாளர் எம் சுகுமாரின் கேமரா.

கதைக்களத்துக்கு பொருத்தமான வரிகளில் அமைந்த பாடல்கள் நிவாஸ் கே பிரசன்னா இசையில் அடிக்கடி எட்டிப் பார்த்தாலும் எதுவுமே மனதைத் தட்டிப்பறிக்கவில்லை. பின்னணி இசை காட்சிகளின் உணர்வோட்டத்துக்கும் பரபரப்புக்கும் முடிந்தவரை உறுதுணையாகியிருக்கிறது.

ஹீரோவுக்கு காதல், காதலியுடன் டூயட் அதுஇதுவென எதையும் நுழைக்காமல் கதையை நேர்க்கோட்டில் நகர்த்த நினைத்தது நல்ல விஷயம்தான். அதற்கேற்ப அழுத்தமான காட்சிகள் இல்லாதது படத்தை பலவீனமாக்கியிருக்கிறது.

பலியிடத் துடிப்பவர்களிடமிருந்து தான் வளர்த்த யானையை காப்பாற்ற போராடும் இளைஞன் என்கிற கதையில் கடந்த ஓராண்டில் ‘ராஜபீமா’, ‘படை தலைவன்’ என ஒன்றிரண்டு படங்கள் வந்துள்ள நிலையில் அதன் ஜெராக்ஸாக வந்துவிழுகிற காட்சிகள் அலுப்பு சலிப்பு தருகின்றன.

13 ஆண்டுகள் முன் வந்த கும்கி தந்த தாக்கத்தை இந்த 2-ம் பாகத்தில் எதிர்பார்த்து போனால் மிஞ்சுவது ஏமாற்றமாகவே இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைக்க முடியும் என்றால் குறைந்தபட்ச திருப்தி குறையில்லாமல் கிடைக்கும். படத்தின் சில காட்சிகள் உங்கள் குழந்தைகளை குஷியாக்கலாம்.

-சு. கணேஷ்குமார்  

REVIEW OVERVIEW
கும்கி 2 சினிமா விமர்சனம்
Previous articleகாந்தா சினிமா விமர்சனம்
k-291யானைக்கும் எளிய மனிதனுக்குமான பாசப்பிணைப்போடு அழகிய காதலையும் கலந்துகட்டி பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி'க்கு கிடைத்த வரவேற்பு தமிழ் சினிமாவில் வரலாறாக நிலைத்திருக்கிறது. அந்த கும்கி'க்கு தொடர்பில்லாத வேறொரு கதையாக விரிகிறது 'கும்கி 2.' பூமி சிறுவனாக இருக்கிறபோது, தாயை இழந்து தவிக்கும் ஒரு யானைக் குட்டிக்கு ஆதரவளிக்கிறான்; நிலா என பெயர் சூட்டி பாசமாக வளர்த்து ஆளாக்குகிறான். மதி இளைஞனாகிவிட்ட, நிலா...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here