Home விமர்சனம் தீயவர் குலை நடுங்க சினிமா விமர்சனம்

தீயவர் குலை நடுங்க சினிமா விமர்சனம்

ஒரு கொலை நடக்க, அதற்கு காரணமாக இருக்கலாம் என கருதும் ஒருவரை போலீஸ் விசாரிக்க, போலீஸ் முன்பாகவே அவர் கொலை செய்யப்பட, கொலைகளைச் செய்வது யார், காரணம் என்ன என்பதே ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் கதையும், திரைக்கதையும்…

போலீஸ் உயரதிகாரியாக ஆக்சன் கிங் அர்ஜுன். நெஞ்சை நிமிர்த்தியபடி தனது வழக்கமான மேனரிஸங்களுடன் வலம் வருகிற விதம் ரசிக்கும்படியும், கொலைகளுக்கான காரணங்களை  தோண்டித் துருவி கண்டறிகிற விதம் விறவிறுப்பாகவும் இருக்க, ஆக்சன் காட்சிகளில் எனர்ஜியை எக்கச்சக்கமாக டெலிவரி செய்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு இளைஞனை காதலிப்பவராக காட்டும்போது கொஞ்சல் மிஞ்சல் டூயட்டில் ஆடுவதோடு அவரது வேலை முடிந்துவிடுமோ என்ற நினைப்பு எட்டிப் பார்க்கிறது. ஆனால், அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அட என வியக்கும்படி அதிரடியாக சம்பவங்களை பவர்ஃபுல்லாக செய்பவர் ஆக்சன் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு சண்டைக் காட்சிகளில் தெறிக்கவும் விடுகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மார்ஷியல் ஆர்ட் கற்றுக் கொடுத்து சிங்கப் பெண்ணாக உருவாக்கும் மாஸ்டராக வேல ராமமூர்த்தி, சற்றே ஊனமான காலை வைத்துக் கொண்டு குற்றவாளிகளை அடித்து துவம்சம் செய்கிற காட்சி படத்தின் அனல் பறக்கும் அத்தியாயம்.

ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக வருகிற பிரவீன் ராஜா சில காட்சிகளில் நல்லவராக  நடந்து கொள்கிறார்; சில காட்சிகளில் வில்லனாக நடந்து ‘கொல்’கிறார். நடிப்புக்கான மதிப்பெண்ணை ஃபிப்டி ஃபிப்டியாக பிரித்துக் கொடுக்கலாம்.

பல்லாயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக கெத்து காட்டியிருக்கும் ராம்குமார் கணேசன், பாலியல் வக்கிரம் பிடித்தவராக கழிசடை அவதாரமாகவும் மாறியிருக்கிறார். நடிகர் திலகத்தின் வாரிசை அப்படியான பாத்திரத்தில் பார்ப்பதை ஜீரணிக்க முடியவில்லை.

12 வயது நிரம்பிய ஸ்பெஷல் சைல்டாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தை சுமந்திருக்கும் சிறுமி அனிகாவின் நடிப்பு தரம்.

ஆக்சன் கிங்கின் தந்தையாக வருபவர் நடிகர் விஷாலின் தந்தை ஜி கே ரெட்டி. அவரோடு அபிராமி வெங்கடாசலம், பிராங்ஸ்டர் ராகுல், ஓ ஏ கே சுந்தர், பி எல் தேனப்பன், லோகு என் பி கே எஸ், பிரியதர்ஷினி, அஜய் ரத்னம், மணிமாறன் என பலரும் கதையின் தேவைக்கேற்ப நடித்திருப்பதில் குறையில்லை.

பரத் ஆசிவகன் தன் பின்னணி இசையால் காட்சிகளுக்கு பரபரப்பும் கூட்டியிருக்கிறார்; முக்கியமான தருணங்களில் வசனங்கள் தெளிவாக புரியாதபடியும் செய்திருக்கிறார்.

கதைக்களத்தை மெருகேற்றியிருக்கிறது சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு.

சமூகத்தில் பரவலாக நடக்கும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி பல படங்களில் கையாண்ட கதையை மீண்டும் ஒருமுறை வெவ்வேறு நடிகர் நடிகைகளின் பங்களிப்பில் பார்க்கிற வாய்ப்பைத் தந்திருக்கிற இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன், நம் வீட்டுப் பிள்ளைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான கவனத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற பாடத்தை மீண்டும் ஒருமுறை கற்பித்திருக்கிறார்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்