எளிய மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் ‘மிடில் கிளாஸ்.’
சொற்ப வருமானத்தில் அல்லாட்டம் தள்ளாட்டமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிற அந்த நபருக்கு ‘திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் யோகம்’ என்பதுபோல் கிடைக்கிறது கோடி ரூபாய். கூடவே அதை பயன்படுத்த முடியாதபடி ஒரு சிக்கலும் உருவாகிறது.
அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்கிற திரைக்கதை பரபரப்பாக இருக்கிறது; சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாமல் நகர்கிறது.
தன் வருமானத்தில் குடும்பச் செலவையும் பிள்ளைகளின் கல்விச் செலவையும் சமாளிக்க முடியாமல் அவதிப்படுவது, வருமானப் பற்றாக்குறையால் மனைவியின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அவமானப்படுவது என மிடில் கிளாஸ் குடும்பஸ்தர்களின் ஜெராக்ஸ் காப்பியாக மாறியிருக்கிற முனீஸ்காந்த் நேர்மையான வழியில் கோடி ரூபாய் கிடைக்கும்போது பரவசமடைவது, அந்த பணம் கைவிட்டுப் போன சூழ்நிலையில் தவித்துப் போவது என காட்சிக்கு காட்சி தந்திருக்கும் பொருத்தமான நடிப்பால் மனதுக்கு நெருக்கமாகிறார். அப்பாவித்தனங்களை வெளிப்படுத்தி கலகலப்பூட்டவும் செய்கிறார்.
கணவனின் சம்பாத்தியத்துக்குள் சாத்தியப்படாத விஷயங்களுக்கு ஆசைப்பட்டும், பேராசைப்பட்டும் அவனை கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுக்கிற மனைவியாக மீட்டருக்கு கொஞ்சம் அதிகமாகவே அலட்டல் காட்டியிருக்கிறார் விஜய்லெஷ்மி.
நல்ல நண்பன்னா இப்படித்தான் இருக்கணும் என உதாரணமாக காட்டும்படியான கேரக்டரில் முனீஸ்காந்தின் நண்பனாக வருகிற ‘வாதகோடாங்கி’ வடிவேல் முருகனின் பங்களிப்பு பக்கா.
தந்தையாக வருகிற வேல ராமமூர்த்தி நம்மிடமிருப்பதை தேவையானவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து வாழ்வதில் கிடைக்கிற மனநிறைவு பற்றி பாடம் எடுப்பது படத்தின் அர்த்தமுள்ள காட்சிகளில் ஒன்று.
துப்பறிவாளராக வந்து ஆர்வத்தை தூண்டும்படி சில விஷயங்களைச் செய்துவிட்டுப் போகிறார் ராதாரவி.
தேர்ந்த நடிகர் காளி வெங்கட் தாளிப்பில் சேர்க்கும் கறிவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டிருக்க மாளவிகா அவிநாஷ், குரேஷி என இன்னபிறர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரங்களும் கவர்கிறார்கள்.
சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவாலும், பிரணவ் முனிராஜ் இசையாலும் கதைக்குரிய கடமையைச் செய்திருக்கிறார்கள்.
நம்மைச் சுற்றி நடக்கிற சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால் ‘இன்றைய காலகட்டத்தில் கெட்டது செய்பவனுக்கு மட்டுமே நல்லது நடக்கும்.’ ‘நல்லவர்கள், நேர்மையாக இருப்பவர்கள் இந்த உலகில் வாழத் தகுதியற்றவர்கள்’ என்கிற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. அப்படியான சூழ்நிலையில் ‘நல்லவர்களுக்கும் என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும்’ என்ற நம்பிக்கையை உருவாக்க இந்த படத்தின் மூலம் முயற்சி செய்திருக்கும் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கத்துக்கு பரிசளிக்கலாம் பாராட்டு முத்தங்களை!
-சு.கணேஷ்குமார்


