காதல் மோதல், காமெடி கலாட்டா என ரசிகர்களை குதூகலமாக்க புத்தாண்டின் தொடக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் படம்.
இந்த கதையின் ஹீரோ அதிகம் படிக்காதவர். நிரந்தர வேலை, சொந்த வீடு, பைக், கார் என எதுவும் கிடையாது. இடியாப்பம் விற்பது, போஸ்டர் ஒட்டுவது, பெயிண்ட் அடிப்பது என எதையெல்லாமோ செய்து நாட்கள் ஓட்டிக் கொண்டிருக்கிறார். சுமார் மூஞ்சி குமார் டைப்பில் இருக்கிற அவருக்கு, அழகாகவும் பளீர் நிறமும் பளபளப்புமாகவும் இருக்கிற அந்த பெண் மீது காதல் உருவாகிறது. அவளுக்கு அவரது முகவெட்டு, செய்கிற வேலைகள் என எதுவும் பிடிக்காமல் போக காதலை ஏற்க மறுக்கிறாள். அவர், அந்த பெண்ணைக் கவர என்ன செய்யலாம், எப்படியெல்லாம் ‘காக்கா‘ பிடிக்கலாம் என யோசிக்கிறார். அவளது அக்காவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்று போன விவரத்தை தெரிந்து கொள்கிறார்.
நின்று போன அந்த கல்யாணத்தை நடத்தி வைத்தால் தனக்கு தான் விரும்பிய பெண் கிடைத்துவிடுவாள் என நினைக்கிறார். நினைத்ததை செய்ய நண்பர்களுடன் களமிறங்கிறார். அவரது முயற்சிகள் அனைத்தும் காமெடி களேபரங்களாகவும் வில்லங்கமாகவும் விபரீதமாகவும் மாறுகின்றன…
காட்சிகள் இப்படியாக கடந்தோட ஹீரோ நினைத்தது நடந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…
ஹீரோவாக சென்றாயன். எளிமையான தோற்றம் அவர் செய்யும் வேலைகளுக்கு பொருந்திப் போகிறது. அவர் அழகான, வசதியான வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறார் என்கிறபோது ‘உனக்கு இதெல்லாம் அதிகப்படியா தெரியலையா?’ என கேட்கத் தோன்றுகிறது. இருந்தாலும் காதல் யாருக்கு வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் வரும் என்பதால் என்னதான் நடக்கிறது என பார்ப்போம் என்ற மூடுக்கு வந்து விடுகிறோம். ஆள் எப்படியிருந்தாலென்ன, உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிற அந்த கேரக்டரை மதிக்கத் தோன்றுகிறது.
நடிப்புப் பங்களிப்பு பொறுத்தவரை தான் சொன்ன காதலுக்கு மறுப்பு சொன்ன பெண்ணிடம் ஆசிட்டைக் காண்பித்து, ‘இது உங்க மீது அடிக்கிறதுக்கு இல்லை, உங்களைக் கவராத என் முகத்துல ஊத்திக்கிறதுதுக்கு’ என்கிற ரீதியில் டயலாக் விடும்போது, காதலிக்கும் பெண்ணின் அக்காவுக்கு கல்யாணம் செய்துவைக்க எடுக்கும் முயற்சிகளில் மதுரைக்கார ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு மிரட்சியடையும்போது என பல சந்தர்ப்பங்களில் ரசிக்க வைக்கிறார்.
சென்றாயன் தன்னைக் காதலிப்பதாக சொல்லிக்கொண்டு சுற்றிச்சுற்றி வரும்போது எரிச்சலடைவது, கழற்றிவிடுவதற்காக சாக்குபோக்கு சொல்வது, நாட்கள் கடந்துபோக அவனது உழைப்பின்மீது ஈடுபாடு ஏற்பட்டு மனம் மாறுவது என சாய் தன்யாவின் இயல்பான நடிப்பு கவனம் பெறுகிறது. இளமை நிரம்பிய அழகும் புன்னகையும் மனதைக் கவர்கிறது.
குடிகாரர்; சற்று நேரத்தில் கல்யாணம் நடக்கவிருக்கும் நிலையிலும் குடி போதையில் மிதந்து கொண்டிருப்பவர்; ஏற்கனவே சில பெண்களுடன் தொடர்பிலிருப்பவர்; தன் மீதிருக்கும் குற்றங்களால் திருமணம் நின்று போக நிச்சயம் செய்த பெண் வீட்டிற்குப் போய் கலாட்டா செய்பவர், போலீஸில் சிக்குபவர், அரசியல் செல்வாக்குள்ள மாமனால் போலீஸிடமிருந்து தப்பிப்பவர், அந்த மாமனின் தங்கை மீது காதல் வயப்படுபவர், தன் அப்பாவை துணைக்கு வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்பவர்… சாய் தன்யாவின் அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக வருகிறவருக்கு அப்படியொரு அதிரிபுதிரியான கதாபாத்திரம். அதை ஏற்று எல்லா நடவடிக்கையிலும் காமெடி ததும்பச் செய்திருப்பவர் இந்த படத்தின் இயக்குநர் தேனி கே பரமன்.
சாய் தன்யாவின் அக்காவாக வருகிற ரோஸ்மின் லட்சணமாக இருக்கிறார்; சிரிப்பாலும் அலட்டலில்லாத நடிப்பாலும் வசீகரிக்கிறார். கல்யாணம் நின்றுபோகும்போது மனம் உடைபவர், மீண்டும் அந்த மோசமான நபரிடமே சிக்கும்போது பார்க்கும் நமக்கு பரிதாபமாக இருக்கிறது. அந்த பரிதாபத்தை பரவசமாக்குகிறது திரைக்கதை.
படத்தின் ஒரு கதாநாயகன் சென்றாயன் என்றால் இன்னொரு கதாநாயகன் இனிகோ பிரபாகர். மரக்கன்றுகள் நடுவதை சேவையாக செய்கிற அவருக்கும் ரோஸ்மினுக்குமான காதல் மலரும் தருணம் கவிதையாக இருக்க, அவரது அளவாக நடிப்பு போதுமானதாக இருக்கிறது. அவரது மரக்கன்று நடும் சேவையை நடிகர் விவேக்கின் சிஷ்யர் செல்முருகன் நேரில் வந்து ஊக்குவிப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிக்கு தனி பாராட்டு.
காதல் திருமணங்கள் நடத்தி வைப்பதை வாழ்நாள் கடமையாகக் கருதி செய்கிற நபராக முனீஸ்காந்த். கதையின் வில்லனுக்கு மாமனாக வருகிற அவரது நடிப்பில் வழக்கமான அலப்பறை அட்ராசிடிகளுக்கு குறைவில்லை. அவருடைய முதலிரவுக் காட்சி குபீர் சிரிப்புக்கு கேரண்டி. அவருக்கு மனைவியாக ஒரேயொரு காட்சியில் எட்டிப் பார்க்கிறார் திருச்சி சாதனா. தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது.
போலீஸ் அதிகாரியாக வருகிற மகாநதி சங்கரின் பெர்ஃபாமென்ஸ் கலகலப்பூட்டுகிறது; அப்படியே ‘ஓகே ஓகே’ உதயநிதி படத்தை நினைவூட்டவும் செய்கிறது.
சென்றாயனின் நண்பர்களில் ஒருவராக கலந்திருக்கிறார் அப்புக்குட்டி.
ஹீரோயினின் தந்தை வங்கியில் பணிபுரிகிற அதிகாரியாக இருந்தாலும் மனைவிக்கு பயந்தவர்; அவரது மனைவி அவரை வாடா போடா என அழைத்து மரியாதை காட்டுபவர். அந்த கூட்டணியும் கிச்சுக்கிச்சு மூட்டுகிறது.
கூல் சுரேஷையும் இழுத்துப் போட்டிருக்கிறார்கள். அவரும் தன் பங்கிற்கு ரகளை செய்கிறார்.
சென்னை சாலிகிராம சுற்றுவட்டாரத்தில் தெருத்தெருவாக புகுந்து புறப்பட்டு காட்சிகளை கதைக்கேற்றபடி பதிவு செய்திருக்கிறது சுரேஷ்குமாரின் கேமரா.
கெவின் டி கோஸ்டாவின் இசையில் ‘முட்டகண்ணு பார்வையால’, ‘முகவரி தேடி அலைஞ்சேன்’ பாடல்களை ரசிக்கலாம்.
‘ஏழை உழைப்பாளிக்கு பணக்காரப் பெண் மீது காதல்’ என்கிற ஒன்லைனை எடுத்துக் கொண்டு, அதை ஆபாசமில்லாத திரைக்கதையால் கட்டமைத்து, கலகலப்பு விருந்தாக்கியிருப்பதால் இந்த படம் ‘குடும்பத்தோடு பார்க்கலாம்’ என்று பரிந்துரைக்கும் படைப்பாகிறது.
காக்கா _ காமெடி காக்டெயில்!
-சு.கணேஷ்குமார் 

