கார்ப்பரேட் முதலாளிகள் அநியாய அக்கிரம் செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்பதை பல விதங்களில் அறிந்திருக்கிறோம். அப்படியொரு முதலாளி எம் ஜி ஆர் கண்ணில் பட்டால் விளைவுகள் எப்படியிருக்கும்? ‘இப்படித்தான் இருக்கும்’ என விரிகிறது வா வாத்தியாரின் ஸ்கிரீன்பிளே.
எம் ஜி ஆர் போல் நல்லவராக வாழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட இளைஞன் ராமேஸ்வரன் நம்பியாராக மாறுகிறான். காவல்துறை அதிகாரியான அவன் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு சமூக விரோதிகளுக்கு துணை போகிறான். அந்த சந்தர்ப்பத்தில் எம் ஜி ஆரின் ஆன்மாவோ ஆவியோ ஏதோவொன்று அவனுக்குள் புகுந்துகொள்ள, அதன்பிறகு அவன் சமூக விரோதிகளை சுளுக்கெடுக்கத் தயாராகிறான்.
இப்படி அதிரிபுதிரி ஆட்டமாக துவங்கும் கதையில் அவனுக்கும் எம் ஜி ஆருக்கும் என்ன சம்பந்தம் என்பதை, எம் ஜி ஆர் அவனுக்குள் புகுந்தபின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை, நடக்கும் சம்பவங்களால் அவன் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களை காண்பித்தபடி நகர்கிறது இயக்குநர் நலன் குமரசாமியின் திரைக்கதை.
எம் ஜி ஆரின் அவதாரமாக கார்த்தி. எம் ஜி ஆர் கெட்டப்புக்காக பெரிதாக சிரமப்படவில்லை. மீசைக்கு பதில் மீசையிருக்கும் இடத்தில் கருப்பு மையால் வரைந்த கோடு, கண்களை மட்டும் மறைக்கும் ஓரு ரிப்பன். அவ்வளவுதான். ராமேஸ்வரன் எம் ஜி ஆராகி விடுகிறார். அப்படி மாறும் ராமேஸ்வரன் எம் ஜி ஆரின் சில மேனரிஸங்களை வெளிப்படுத்தும்போது, வில்லன் கும்பலை சுளுக்கெடுக்கும்போது கொஞ்சமே கொஞ்சம் கவர்கிறார். ராமேஸ்வரனாக சுற்றித்திரியும்போது அதே குறும்பு கொப்பளிக்கிற, திமிர் தெனாவட்டு ததும்புகிற , எனர்ஜிக்கு குறையில்லாத கார்த்தியை பார்க்க முடிகிறது.
கார்த்திக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி. கார்த்தி _ கிர்த்தி பெயர் பொருத்தமெல்லாம் அசத்தல்தான். ஆவியோடு பேசுகிறேன்; பேயோடு உரையாடுகிறேன் என அந்த அம்மணி எதையெல்லாமோ செய்கிறார். அதெல்லாம் கதையில் பெரிதாக எந்த தாக்கத்தையும் தரவில்லை என்றாலும் அழகாலும் பாடல் காட்சியில் ஆடும் உற்சாக நடனத்தாலும் கவர்கிறார்.
எம் ஜி ஆரின் ரசிகராக, பேரனை வாழும் எம் ஜி ஆர் என உலகம் கொண்டாடும்படி வளர்க்க ஆசைப்படுகிற தாத்தாவாக ராஜ்கிரண். நடிப்பில் அவருக்கு வயதாகிவிட்டது தெரிகிறது.
கதைநாயகன் எம் ஜி ஆராக மாறி ஒழித்துக்கட்ட முயற்சி செய்யும் வில்லனாக நிஜத்தில் எம் ஜி ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ். விதி வலியது. அவருக்கு கார்ப்பரேட் வில்லத்தனம் காட்டும் வேலை. நன்றாகவே காட்டியிருக்கிறார்.
சத்யராஜின் மகளாக ஷில்பா மஞ்சுநாத் மினி வில்லியாக மினிமம் காஸ்டியூம்களில் வந்து போகிறார்.
கருணாகரன் வீணடிக்கப்பட்டிருக்க, ஜி எம் சுந்தர், நிழல்கள் ரவி, யார் கண்ணன் என இன்னபிற நடிகர்கள் கொடுக்கப்பட்ட கடமையை சரியாக செய்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ ரீமிக்ஸ் ஆட்டம்போடத் தூண்டுகிறது. மற்ற பாடல்கள் செவிகளைத் தொடுகிறது; மனதைத் தொடவில்லை. பின்னணி இசை கதையோட்டத்துக்கு பொருத்தம். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு நேர்த்தி.
மொக்கையான, பைத்தியக்காரத்தனமான திரைக்கதைக்குள் மாட்டிக்கொண்ட பல நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏராளமாய், தாராளமாய் பார்த்து தலையிலடித்துக் கொண்டதுண்டு. மீண்டும் ஒருமுறை அப்படி அடித்துக்கொள்ள விரும்புவோருக்கு நல்ல சாய்ஸ் இந்த வா வாத்தியார்.
-சு.கணேஷ்குமார் 
