Home விமர்சனம் ப்ராமிஸ் சினிமா விமர்சனம்

ப்ராமிஸ் சினிமா விமர்சனம்

குடியும், அபத்தான நோய் எனும் இடியும் ஒருவனை தாக்கும் கதை. சத்தியத்தை மதிக்காத ஒருவனின் வாழ்வில் எதெல்லாம் மிஸ்ஸாகிறது என்பதை அலசி ஆராயும் ‘பிராமிஸ்.’

எளிய குடும்பத்து இளைஞன் சங்கமித்ரன், தான் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த லெஷ்மியும் காதலர்கள். மித்ரனின் குடிப்பழக்கத்தை வெறுக்கும் லெஷ்மி, அவனிடம் இனி குடிக்கக் கூடாது என அவள் மீது ப்ராமிஸ் அதாவது சத்தியம் செய்யச் சொல்கிறாள். அவனும் செய்கிறான். செய்த சத்தியத்தை மீறி குடிக்கிறான். அது அவளுக்கு தெரிய, அவனை விட்டுப் பிரிகிறாள். பிரிவின் வேதனையால் குடித்துக் குடித்து, இப்படியே விட்டால் இன்னும் கொஞ்ச நாளில் போய்ச் சேர்ந்து விடுவான் என்ற நிலைமை.

அவனைக் காப்பாற்றுவதற்காக அவனை தனக்கு தாலி கட்டச் சொல்லி மனைவியாகிறாள். மித்ரன் திருந்துகிறான். நல்லபடியாக வேலைக்குப் போகிறான். உற்சாகமாக குடும்பம் நடத்துகிறார்கள். அதன் விளைவாக லெஷ்மி தாய்மையடைகிறாள்.

எல்லாமே ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தால் எப்படி? திருப்பம், அதிர்ச்சி, குழப்பம், சோகம், துக்கம், சண்டை சச்சரவு என ஏதாவது இருந்தால்தானே கதை சுடுபிடிக்கும்? அதற்கேற்றபடி, மித்ரன் குடிபோதையில் செய்த செயலொன்று மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கிறது. அது என்ன செயல் என்பதும், அதன் விளைவுகளும் கதையின் மீதி.

காதலிக்கும்போது குஷி, நண்பர்களுடன் குடிக்கும்போது குதூகலம், பிரேக் அப் காலகட்டத்தில் குடிக்கு அடிமையாகி பைத்தியம் பிடித்த மனநிலை, கல்யாணமானபின் உற்சாகம், வியாதிக்கு ஆளானபின் கலக்கம், விரக்தி என மனித உணர்வுகளில் எதையும் மிச்சம் வைக்காமல் வெளிப்படுத்தும்படி அமைந்த மித்ரன் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தியிருக்கும் அருண்குமார் சேகரன் நடனத்திலும் எனர்ஜியை ஏற்றியிருக்கிறார்.

மாநிறமும் களையான முகமுமாய் ஒடிசல் தேகத்துடன் வலம் வருகிற அவர் பிரதிபலிக்கும் காதல் உணர்வும், வெட்கச்  சிரிப்பும், தன் உணர்வை மதிக்காத காதலன் மீது காட்டும் வெறுப்பும், அவனது மோசமான நிலையில் தன் வீட்டை எதிர்த்துக் கொண்டு அவனுக்கு மனைவியாகி பொழியும் கருணையும், அவன் நோய்வாய்ப் பட்டதும் தருகிற தன்னம்பிக்கையும்… காட்சிக்கு காட்சி லெஷ்மியாக நதியா சோமு தந்திருப்பது பாராட்டும்படியான நடிப்பு.

நாயகனின் நண்பர்கள், குடும்பத்தினர், நாயகியின் குடும்பத்தினர், டாக்டர் என இன்னபிற கேரக்டர்களை ஏற்றிருப்போர் இயல்பாக நடித்திருக்க, நாயகனின் அப்பாவாக வருபவர் மகன் முன் மது அருந்துகிற காட்சி கலகலப்புக்கு உதவுகிறது.

‘தேன்மழை சாரலே’, உதிர்கிறேன் நானடி’ பாடல்களை ரசிக்கும்படியான இசையில் வழங்கியிருக்கும் சரவண தீபன் கதை கடத்தும் உணர்வுகளுக்கேற்ப பின்னணி இசையையும் நேர்த்தியாக கோர்த்திருக்கிறார். வேலூரை சுற்றியுள்ள நகரங்களை, கிராமப்புறங்களை, பசுமை குறைந்த நிலப்பரப்புகளை ஏரியல் வியூவில் சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் குமார்.

குடிப்பழக்கம் எல்லா விதத்திலும் கேடு என்பதை எடுத்துக்காட்டுவது, எய்ட்ஸ் பாதிப்புக்கும் எச் ஐ வி தொற்றுக்குமான வித்தியாசத்தை புரியவைப்பது என ஸ்க்ரீன்பிளே ஏகப்பட்ட சமூக விழிப்புணர்வைச் செய்கிறது. கதைக்களம் ‘விவேக் புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என கேட்டு காமெடி கலாட்டாவில் ஈடுபட்ட காலத்தில் வந்திருக்க வேண்டிய படமாச்சே?’ இது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்