மிரட்டலான ஒரு கதை, அறிவுரை சொல்கிற அடுத்த கதை, அதிர வைக்கிற இன்னொரு கதை என கலந்துகட்டியிருக்கிற ‘ஹாட்ஸ்பாட் 2much.’
விவகாரமான கதையம்சத்தால் பரபரப்பு கூட்டி பெரியளவில் ஹிட்டான ‘ஹாட் ஸ்பாட்’ போலவே, அதனுடைய இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதையும் படம் இயக்கத் தயாராக இருப்பவர் தயாரிப்பாளரிடம் கதை சொல்வதாகவே நகர்கிறது.
விஜய், அஜித் மாதிரியான மாஸ் ஹீரோக்கள் இரண்டு பேரின் வெறித்தனமான ரசிகர்கள் இரண்டு பேரின் ரத்த சொந்தங்களை கடத்திப் போகும் மர்ம ஆசாமி, அந்த இரண்டு ஹீரோக்களும் தன்னிடம் கான்பரன்ஸ் காலில் இணைந்து பேச வேண்டும் என்கிறான். அப்படி பேசாவிட்டால் கடத்தி வைத்துள்ளவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான். அது ஏன், எதற்காக?
வெளிநாட்டில் படித்து, நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கிற தன் மகளின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏடாகூடமான உடையணிந்து போகிறார் அந்த அப்பா. மகளுக்கு அவரது நடவடிக்கை அவமானத்தை உருவாக்குகிறது. அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்?
2025-ல் வாழ்கிற இளைஞனுடன் 2050-ல் வாழ்கிற பெண் போனில் பேசுகிறாள். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. டைம் டிராவலில் அந்த பெண் அந்த இளைஞனை சந்திக்கிறாள். இப்போது மலர்ந்துள்ள காதலால் மட்டுமல்ல; பல ஆண்டுகள் முன்பே இருவருக்கும் அதிர்ச்சி தரும் விதமான நெருக்கமான உறவு இருந்துள்ளது. அது என்ன?
இப்படியான கேள்விகளுக்கு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் அமைத்துள்ள திரைக்கதையில் சுவாரஸ்யங்களுக்கு குறையில்லை… 3-ம் பாகத்துக்கான லீடும் அசத்தல்.
தான் விரும்பும் ஹீரோக்களை கொண்டாடுவதற்காக கொடி கட்டி, பாலபிஷேகம் செய்து வாழ்நாளை வீணடிக்கும் இளைஞர்களாக, பட்டும் திருந்தாத ஜென்மங்களாக ஆதித்யா பாஸ்கர், ரச்ஷன் இருவரும் துடிப்பான நடிப்பைத் தந்திருக்க, கடத்தல் மிரட்டல் என கவனம் பெறுகிறார் எம் எஸ் பாஸ்கர். இந்த கதையின் மூலம் சொல்லிருக்கும் கருத்து ஒட்டு மொத்த தற்குறித்தனமான ரசிக வெறியர்களுக்கான பாடம்.
‘என் ஆடை என் சுதந்திரம்’ என்கிற பெமினிச சிந்தனை, திருமணம் செய்துகொள்வதற்கு முன் சம்பந்தப்பட்ட ஆணின் ‘அந்த’ தகுதியை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு என குறைந்தளவிலான உடைகளில் வந்து திமிரும் தெனாவட்டும் பின்னிப்பிணைந்த நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார் சஞ்சனா திவாரி. சஞ்சனாவுக்கு அப்பாவாக தம்பி ராமையா. ‘நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப மாறுவது தவறில்லை; அதே நேரம் இடம் பொருள் பார்க்காமல் நடந்துகொள்வது சரியில்லை’ என்கிற கருத்தை ஊர் உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் கேரக்டரை தன் அனுபவ நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார்.
கதை கேட்கும்போது தூங்குவதை ஹாபியாக வைத்திருந்து பிரபலமான அஸ்வின் குமார், 2050ம் ஆண்டிலிருந்து பேசும் பெண்ணுடன் போனில், நேரில் பேசிப் பழகி, அப்படி பழகிய பெண்ணின் பிறப்பு பற்றி தெரிந்து அதிரும் விதம் கச்சிதம். அவருக்கு ஜோடியாக வருகிற பவானிஸ்ரீ மேக்கப் தூக்கலாகவும் நடிப்பு உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. திருச்சி தமிழ்நாட்டின் தலைநகர், சிவகார்த்திகேயன் சி எம் என இந்த அத்தியாயத்தில் அதிரிபுதிரி சமாச்சாரங்கள் அதிகம்.
பிரியா பவானிசங்கருக்கு மாறுபட்ட அணுகுமுறைகளில் படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லும் கதாபாத்திரம். பெரிதாய் அலட்டிகொள்ளாமல், ஒரு சேரில் உட்கார்ந்தபடியே கண்களால் பேசி ரசிக்க வைக்கிறார். அவர் சொல்லும் கதைகளைக் கேட்டு அரண்டு மிரண்டு போகிற தயாரிப்பாளராக பாலமணிமார்பன் தரும் ரியாக்சன்கள் ரகளை.
சற்றே விவகாரமான வேடத்தை ஏற்று, சதைப்பிடிப்பான இதழ்கள் துடிக்க கியூட்டான எக்ஸ்பிரஷன்களை தந்து போகிறார் பிரிகிடா சகா. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கும் சில சீன்களில் எட்டிப் பார்க்கிறார்.
பின்னணி இசையை காட்சிகளின் தன்மைக்குப் பொருந்தும்படி தந்து, ஒவ்வொரு கதையின் கிளைமாக்ஸிலும் உற்சாக அதிரடி நிகழ்த்தியிருக்கிறார் சதீஷ் ரகுநாதன்.
கதை பயணிக்கும் இடங்களின் நீள அகலங்களை அழகாக தொகுத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் ரவியின் கேமரா. படத்தின் நீளம் 2 மணி நேரம் மட்டுமே. அதில் தெரிகிறது எடிட்டரின் பங்களிப்பு.
முதல் பாகத்தோடு ஒப்பிட்டால் இந்த பாகம் தருகிற அனுபவத்தில் திருப்தி குறைவாக இருக்கலாம். இதை தனி திரைப்படமாக பார்த்தால் அவசியமான கருத்துக்களை அழுத்தந்திருத்தமாக பரிமாறியதற்காக, காமெடி கலாட்டாக்களை சரியான விகிதத்தில் கோர்த்திருப்பதற்காக கணிசமான பாராட்டுக்களை பரிசளிப்பது அவசியமாகிவிடும்.
ஹாட் ஸ்பாட் 2much – போரடிக்காத சிக்ஸர்!
-சு.கணேஷ்குமார்


