‘திருடனுக்கு தேள் கொட்டியது போல்’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். திருடத் துவங்கிய முதல் நாளிலேயே அப்படியொரு நிலைமைக்கு தள்ளப்படுகிறான் அன்பு. திருடப்போன மிகப்பெரிய பங்களாவில் முதலாளியம்மா தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் இருக்க, அன்பு உள்ளே நுழைந்ததால் முயற்சி தோல்வியடைகிறது. அந்த கடுப்பில், அன்புவிடம் துப்பாக்கியைக் கொடுத்து தன்னைக் கொல்லச் சொல்கிறாள்.
அன்பு போனது திருடத்தானே தவிர, கொலை செய்கிற அளவுக்கெல்லாம் அவனுக்கு துணிச்சல் கிடையாது. அதை எடுத்துச் சொல்லி, கொலை செய்ய மறுக்கிறான். அவள் விடுவதாயில்லை. கொலை செய்யாவிட்டால் திருட வந்ததற்காக போலீஸில் சிக்க வைத்து விடுவாள்; கொலை செய்தால் மட்டும் தப்பித்து விட முடியுமா? உம்ஹூம்… ‘வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல’ என்கிற நிலைமை.
திருட்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட நாளிலேயே கடுமையான சோதனை. அன்பு அந்த சூழ்நிலையிலிருந்து தான் தப்பிக்க வேண்டும். அந்த பெண்ணையும் தற்கொலை செய்து கொள்ளாமல் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறான்.
இப்படி ஃபர்ஸ்ட் கியர் போடும் கதை, அன்பு தான் நினைத்ததை செயல்படுத்த என்னென்ன செய்கிறான், அந்த பெண் தற்கொலை முடிவுக்கு ஏன் வந்தாள் என்பதையெல்லாம் எடுத்துக்காட்டும்போது டாப்கியரில் பறக்கிறது…
கோடிக்கணக்கில் பணமிருந்தும் செத்துப்போவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையில் நிற்கிற பெண்ணாக ஆஷ்னா சவேரி. தன் முடிவுக்கு காரணம் என்ன என்பதைச் சொல்லும்போது ஒருவித உடல்மொழி, கொன்றால்தான் விடுவேன் என மிரட்டும்போது வேறோரு விதமான பாடி லாங்வேஜ், நான் உன்னிடம் சிக்கவில்லை; நீ தான் என்னிடம் சிக்கியிருக்கிறாய்’ என்பதுபோல் அவதாரமெடுக்கும்போது கண்கள் சுழலும் விதம் அத்தனையும் அசத்துகிறது.
திருடனாக வருகிற முனீஸ்காந்த், தப்பித்து ஓடவும் முடியாமல் கொலை செய்யவும் முடியாமல் அவதிப்படுகிற கதாபாத்திரம். ’38 பெண் பார்த்து எதுவுமே அமையாம இப்போதான் ஒரு பெண் கூட கல்யாணம் ஆகப்போவுது; கல்யாணப் பத்திரிகையில உங்க பேர் போடுறேன். விட்டுடுங்கம்மா’ என ஆஷ்னாவிடம் கெஞ்சுவதாகட்டும் ‘தற்கொலை செஞ்சிக்க வக்கு இல்ல’ என எகிறுவதாகட்டும், ‘எனக்கு லங் கேன்சர்ம்மா’ என்று சொல்லி கலங்குவதாகட்டும் ஒரு பக்கம் அவர் படும்பாடு பாவமாக இருக்கிறது; அவரது நடிப்பு எல்லாவற்றையும் ரசிக்கவும் வைக்கிறது.
ஆஷ்னா பணக்கார வீட்டுப் பெண் என்பதற்காக கல்யாணம் செய்துகொண்டு, பிறகு அவரை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடும்போது காட்டும் வில்லத்தனத்தனத்தால், அதே ஆஷ்னாவிடம் கலங்கி நிற்கிற தருணங்களில் காட்டும் பரிதாப முகபாவங்களால் என கவனம் பெறுகிறார்.
அந்த மூன்று பேர் தவிர செக்யூரிடியாக வினோத் சாகர், காவல்துறை அதிகாரியாக சரவண சுப்பையா, கதாநாயகனின் தந்தையாக நிழல்கள் ரவி என கதையில் இன்னும் ஒருசிலர் மட்டுமே. அவர்களின் பங்களிப்பு குறைவுதான் என்றாலும் நடிப்பு நிறைவாகவே இருக்கிறது.
என் டி ஆர் இசையில் ‘லேசா லேசா இவ பார்வை லேசா’, ‘நான் வொர்ஸ்ட் பொண்ணு’ பாடல்கள் இனிமை. வொர்ஸ்ட் பொண்ணாக அஸ்மிதாவின் ஆட்டம் உற்சாகம் தர, வழக்கமான குட்டைப் பாவாடை தவிர்த்து புடவை ஜாக்கெட்டில் பார்க்கும் வாய்ப்பு கிறக்கடிக்கிறது. பின்னணி இசை காடசிகளின் நகர்வுகளுக்கு போதுமானதாக இருக்கிறது.
கிட்டத்தட்ட கதை முழுக்க ஒரு பிரமாண்ட வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுழன்றாலும் அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்க முடிகிறது. அதற்கேற்றபடி கேமரா கோணங்களைக் கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர் அதிசயராஜை ஸ்பெஷலாக பாராட்ட வேண்டும்.
‘தேவையில்லை’ என்று கருதும்படியான காட்சிகள் இல்லாமல் படத்தின் நீளத்தை 98 நிமிடங்களில் அடக்கியிருக்கிறார் ஆர் வசந்தகுமார்.
துரோகம், பழிவாங்கல், போலீஸ் விசாரணை என பழக்கபட்ட கதையை எடுத்துக் கொண்ட இயக்குநர் கார்த்தி தட்சிணா மூர்த்தி படத்தின் முன் பாதியை சுவாரஸ்யமாக பயணிக்க வைத்து, பின் பாதியில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து முடித்திருக்கிறார். படம் பார்த்து முடித்தபிறகு ‘கொடுத்த காசுக்கு ஒர்த்’ என்ற உணர்வு கிடைக்கிறது.
திரைவி – திருப்தி!
-சு.கணேஷ்குமார்

