இளமைப் பருவத்தின் தொடக்கத்திலிருக்கிற ஒரு பெண் எது காதல், எது ஈர்ப்பு என புரியாமல் அல்லாடி தள்ளாடி கரை சேர்கிற கதை.
ஆதரவற்ற அந்த பெண்ணின் வாழ்க்கையில் நான்கு ஆண்கள் நுழைகிறார்கள். நான்கு பேர் மீதும் அந்த பெண்ணுக்கு ஒருவித ஈர்ப்பு உருவாகிறது. நான்கு பேருமே அவளை அடைய நினைக்கிறார்கள். அந்த நினைப்பில் தவறாக நடந்துகொண்ட ஒருவர் கொலை செய்யப்படுகிறார். மிச்சமிருக்கும் மூன்று பேரில் அவளுக்கு கணவனானது யார் என்பது கதைநாயகியை மையப்படுத்தி சுழல்கிற இந்த கதையின் கிளைமாக்ஸ்…
பூப்பெய்திய ஒருசில நாட்களிலேயே தன்னைவிட ஒருசில வயது மூத்த இளைஞன் மீது மெல்லிய காதல் அரும்புகிறது. அதை வயசுக் கோளாறு என எடுத்துக் கொண்டால், கொஞ்ச நாளிலேயே இன்னொரு இளைஞன் மீது நேசம் பிறக்கிறது. அவனோ சாமியாராகி பிரம்மச்சாரியாக வாழும் முடிவில் இருக்கிறான். அதனால், அவள் அவனுடன மண வாழ்க்கையில் இணைய வாய்ப்பில்லை என்கிற நிலைமை. இன்னொரு இளைஞன் கிராமத்துப் பெண்ணான அவளை பியூட்டி பார்லருக்கு கூட்டிச் சென்று தோற்றத்தை மெருகேற்றி, கவர்ச்சியாக உடைகள் அணியச் செய்து அழகு பார்க்கிறான். இன்னொரு இளைஞன் அவளை வெறித்தனமாக காதலிக்கிறான்.
அப்படி இந்த கதையின் நாயகிக்கு, நான்கு பேரிடமும் கலந்து பழகி, ஒன்றாக உண்டு உறங்கி, பிரச்சனைகளைச் சந்தித்து, தனக்கானவன் யார் என்று முடிவெடுத்து தாலிக்கு கழுத்தைக் கொடுக்கும் கனமான வேலை.
அந்த கேரக்டரை சுமந்திருக்கும் அஜன்யா பார்ப்பதற்கு சிறுமி போலிருக்கிறார். அதனாலேயே கதைக்கு பொருத்தமாக இருக்கிறார். அப்பா அம்மா, சொந்த பந்தம் ஏதுமில்லாமல் தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்து, வயதுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே அவரையும் பறிகொடுத்து பரிதாபமாக நிற்கிற கதாபாத்திரத்துக்கு கன்னம் வற்றிப்போய் சற்றே எலும்பும் தோலுமான அவரது பரிதாபமான தோற்றம் பலம் சேர்க்கிறது. வயது குறைவென்றாலும் காதல் ஜோடியொன்று சில்மிசம் செய்வதை தடுத்து அறிவுரை சொல்வது, அக்கம் பக்கத்து பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, தன்னிடம் பழகுகிறவர்களில் தன்னை நிஜமாக காதலிப்பது யார் என உணர்வது என எல்லாவற்றிலும் பெரிய மனுஷித்தனம் எட்டிப் பார்க்கிறது. ஒன்றிரண்டு பாடல்களில் அப்படியும் இப்படியுமாக அழகான உடைகளில் வந்து போவதோடு ஒரு சில தருணங்களில் கணிசமாக கவர்ச்சி காட்டவும் செய்கிறார். ‘நான் மிட்நைட் விளக்கு / மிஸ் பண்ணா விடிஞ்சுடும் கிழக்கு’ என்றெல்லாம் கிக்கான வரிகள் நிரம்பிய ஐட்டம் சாங் ஒன்றில் ‘என்னைப் பார்; என் அழகைப் பார்’ என்கிற ரேஞ்சில் உற்சாக ஆட்டமும் போட்டிருக்கிறார்.
அஜன்யாவின் மனதில் இடம்பிடிக்கத் துடிக்கும் இளைஞர்களாக டி கிரண், ஏ விபின் சாதுல்பிரான் மூவரும் லட்சணமாக இருக்கிறார்கள். ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கேற்ப காதல், ஏக்கம், ஏமாற்றம், ஆக்ரோஷம், காமம் என உணர்வுகளை சரியான உடல்மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அஜன்யாவின் பூப்புனித நீராட்டு விழாவில் திடீர் தாய்மாமனாகிற மீசையரும்பும் பருவத்து இளைஞனின் காதல் பார்வையும் வெட்கமும் அத்தனை அழகு.
தன்னை விரும்புகிற ஆணுடன் அடிக்கடி காட்டுக்குள் ஒதுங்கி, அவன் சொன்னதையெல்லாம் செய்து, விளைவுகளைச் சந்திக்கிற அந்த இளம்பெண் கதாபாத்திரம் கதையில் அவ்வளவாக ஒட்டவில்லை என்றாலும், அந்த காட்சிகள் பெண்களுக்கு விழிப்புணர்வூட்ட பயன்படலாம்.
தாத்தாவாக நடித்திருக்கும் மீசை வெள்ளைப்பாண்டி பாசத்தில் நெகிழ வைக்கிறார். அவர் மூலம் நாட்டு மருத்துவத்தின் அருமை பெருமைகள் இரண்டொரு வசனங்களில் எடுத்துச் சொல்லப்படுவது கவனத்தில் பதிய வேண்டியது.
புதுக்கோட்டை காண்ட்ராக்டர் மைக்கேல்ராஜ், ஆண்டிபட்டி தொழிலதிபர் பி ஆர் கண்ணன் என இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் மண்மணம் மாறாதவர்களாக இருக்க, கிராமப்புறம், பசுமை, மரங்கள் அடர்ந்த நிலப்பரப்பு, மலை, நீரோட்டம், அணைக்கட்டு என கதை நிகழ்விடங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க அதன் தன்மை மாறாமல் தன் கேமராவில் பதிவு செய்திருக்கிறார் கோல்டு சந்துரு.
சி எம் மகேந்திராவின் இசையில் ‘புதிதாய் பூத்த பூவொன்று’, ‘அறுபது நொடிகளில் அறிமுகமானவள்’, ‘கடவுளின் அழகிய கவிதை இது’ பாடல்கள் இதம் தந்தும் ‘ஏ டூ இசட் வரை’, ‘பிஸ்ஸாலி பிஸ்ஸாலி’ பாடல்கள் உற்சாகமூட்டியும் கடந்து போகின்றன.
கதைநாயகி அப்போதுதான் டீனேஜை தொடுகிறாள். அந்த பருவத்திலிருக்கும் கதாபாத்திரம் மீது ஏகப்பட்ட சுமைகளை ஏற்றி பயணிக்க வைத்திருப்பது கொஞ்சம் அயர்ச்சி தந்தாலும் முழுக்க முழுக்க புதுமுகங்களை நடிக்க வைத்து, கொலை அதுஇதுவென பரபர சங்கதிகளை இணைத்துப் பிணைத்திருப்பது ஆறுதல் தருகிறது. ‘உங்களுக்காக உயிர் உருகுவது தெரிஞ்சா காதலிங்க’ என ஊர் உலகத்துக்கு இயக்குநர் இயக்குநர் எம் கஜேந்திரன் எடுத்துச் சொல்லியிருக்கும் கருத்தில் ஆழம் இருக்கிறது.
தெரிஞ்சா காதலிங்க _ அனுபவம் புதுமை!
-சு.கணேஷ்குமார்


