இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள் சாமி இயக்கும் முதல் படம் ‘அண்டர் 18.’ இந்த படத்தின் டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும் இணைத்து எமோஷனல் டிராமாவாக உருவாகிறது.
இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர்.
படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.
மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக இந்த படம் உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.


