வடக்கும் தெற்கும் சங்கமிக்கிற காதல் கதை.
திருமண வயதிலிருக்கும் பூஜா, சிறுவயதில் தன்னையும் தன் தந்தையையும் விட்டுவிட்டு பிரிந்துபோன அம்மாவைத் தேடி காசிக்கு போகிறாள். அந்த தேடலுக்கு துணையாக தன் காதலன் சிவாவை சேர்த்துக் கொள்கிறாள். போன இடத்தில் பூஜா காணாமல் போக, சிவாவால் அவளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் பூஜாவின் அப்பா சிவாவை போலீஸின் பிடியில் சிக்க வைக்கிறார்.
பூஜாவின் அப்பா பெரும் பணக்காரர்; எல்லாவிதமான செல்வாக்கும் படைத்தவர். அவருக்கு தன் மகள் பூஜா, தன் அந்தஸ்துக்கு சமமில்லாத எளிய குடும்பத்து இளைஞனான சிவாவை காதலிப்பது துளிகூட பிடிக்கவில்லை என்பது முக்கியச் செய்தி.
இப்படி துவங்கும் கதையில் பூஜாவுக்கு என்னவானது என்பது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் கடந்தோடும் அடுத்தடுத்த காட்சிகள். பூஜா – சிவா காதல் கல்யாணத்தில் முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…
காதலி காணாமல் போனபின் அவளுக்கு என்னவாகியிருக்குமோ ஏதாகியிருக்குமோ என பதறுவது, போலீஸில் அடிபட்டு மிதிபட்டு ரத்தம் சிந்துவது, கடைசியாக ஒரு முறை காதலியை பார்ப்பதற்காக அவளது அப்பாவிடம் அனுமதி கேட்டு கெஞ்சிக் கதறுவது என சிவாவாக வருகிற ஆதவ் கிருஷ்ணாவுக்கு கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் கனமான காட்சிகள். காதல் காட்சிகளில் காட்டும் பரவச மனநிலை தவிர்த்து மற்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவர் நடிப்புக்கு புதியவர் என்பது தெரிகிறது.
பூஜாவாக சிம்ரன் அத்வானி. வட இந்தியக் குடும்பத்துப் பெண் கேரக்டருக்கு முகம் பொருந்திப் போகிறது. காதல், அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமெண்ட் என விதவிதமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நடிப்பில் குறையில்லை. சில தருணங்களில் குட்டிக்குட்டியாய் உடையணிந்து செழிப்பான வளைவு நெளிவுகளைக் காட்டவும் செய்கிறார்.
கதாநாயகனின் அம்மாவாக வினோதினி வைத்தியநாதன் இயல்பாக நடித்து நகர்கிறார். அப்பாவாக வருகிற படவா கோபிக்கு சொல்லிக்கொள்ளும்படி வேலையில்லை. கதாநாயகிக்கு அப்பாவாக வருகிறவர் பணக்காரத் திமிரில் கொஞ்சம் மனிதாபிமானத்தையும் கலந்து வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.
ஹீரோவுக்கு லிஃப்ட் கொடுத்து சட்டத்தின் பிடியில் சிக்கித் தவிப்பராக ஜாவா சுந்தரேசன் கலகலப்பூட்டுகிறார்.
அஸ்வமித்ராவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை கதையின் நகர்வுக்கு பொருத்தம்.
காசியின் சந்து பொந்துகளில் பாய்ச்சல் காட்டி, கங்கை நதியோர பரபரப்பை அதன் தன்மையோடு படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என் எஸ் சதீஷ்குமார்.
சென்னையில் வசிக்கிற பணக்கார வட இந்திய குடும்பத்துப் பெண், சாதாரண குடும்பத்துப் பையனை காதலிப்பதாக துவங்கி ஜாலியாக பயணிக்கும் கதை, காசிக்கு நகர்ந்ததும் கிரைம் திரில்லருக்கான வேகமெடுக்கிறது. இடைவேளைக்குப் பிறகு கதை காசியில் தொடர்வதும், கதாபாத்திரங்கள் இந்தியிலேயே பேசிக் கொண்டிருப்பதுமாக இருக்க பார்ப்பது தமிழ்ப் படம் போல் இல்லையே என்ற உணர்வைத் தருகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி பெரிதாக இருந்திருக்கும்.
-சு.கணேஷ்குமார்

