ராணுவ வீரர்கள் நாட்டுக்காக செய்த, செய்துகொண்டிருக்கிற தியாகங்களைப் மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களின் வரிசையில் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி.’
வீரா இந்திய ராணுவத்தின் உயரதிகாரி. அவருக்கு ஒரு பெண் மீது காதல் உருவாக, அந்த பெண்ணும் அவரை நேசிக்க அடிக்கடி உற்சாக சந்திப்பு, அந்த தருணங்கள் முழுதும் தித்திப்பு என நாட்கள் கடத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் வீரா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைய, அந்த காதலிக்கு வீராவின் வாரிசைப் பெற்றெடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
கதை இப்படியொரு கட்டத்தை எட்டிப்பிடிக்க, காதலர்களாக சுற்றித் திரிந்த நாட்களில் அவர்கள் உடல் ரீதியாக இணைந்திருக்கலாம்; அதனால் அந்த பெண் கருத்தரித்திருக்கலாம் என நினைக்கிறோம். ஆனால், அவர்கள் மனதளவில் கலந்து பழகினார்களே தவிர உடலளவில் எந்த தொடர்பும் இல்லை என்கிறது திரைக்கதை. அப்படியெனில் வாரிசு எப்படி சாத்தியம்?
இந்த கேள்விக்கு பதில் சொல்லி நகரும் காட்சிகள் மனம் நெகிழச் செய்வதாகவும், ‘ராணுவத்தில் இப்படியொரு நடைமுறை இருக்கிறதா?’ என்கிற ஆச்சரியத்தையும் தருகின்றன…
வீராவாக (இந்த படத்தை இயக்கியிருக்கிற) வீர அன்பரசு. அவரிடம் ராணுவ வீரருக்கான உடற்கட்டு மிஸ்ஸிங் என்றாலும் நாட்டுக்கெதிராக செயல்படுபவர்களை, பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் காட்டியிருக்கும் கம்பீரம் போதுமானதாக இருக்கிறது. காதல் காட்சிகளின் நடிப்புப் பங்களிப்புக்கு பாஸ்மார்க் கொடுக்கலாம்.
ராணுவ வீரரின் காதலி என்கிற பெருமிதம், அவன் இறந்தபின்னும் அவனது கருவைச் சுமக்கிற பாக்கியம் என ஏஞ்சல் ஏற்றிருப்பது கனமான கேரக்டர். அதற்கு பொருத்தமான முகபாவங்களையும் உடல்மொழியையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பவர் அடிக்கடி குறைந்த உடையில் குளியல் போட்டு கவர்ச்சி விருந்தும் படைக்கிறார்.
வீராவின் மகனாக வருகிற ஆகாஷ் முத்துவுக்கு உணர்வுபூர்வமாக நடிக்கவும், அசத்தலாக நடனமாடவும் வருகிறது. முறையான பயிற்சிகளில் ஈடுபட்டு, உடலின் எடைகுறைத்து முறுக்கேறி, நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் ரசிகர்களின் வரவேற்பைப் பெறலாம்.
‘சூப்பர் குட்’ சுப்ரமணியும் ‘வாழை’ ஜானகியும் வீராவின் பெற்றோராக வருகிறார்கள். மகனை ராணுவ அதிகாரியாக பார்ப்பதில் பரவசத்தையும், மகனைப் பறிகொடுத்தபின் பரிதாபத்தையும் சரியானபடி வெளிப்படுத்துகிறார்கள். மகனுக்கு மனைவியாகமலே அவனது கருவைச் சுமக்கும் பெண்ணை தெய்வமாக மதித்து பிரியம் காட்டுகிற காட்சிகளில் எளிமையாக நடித்து மனதில் நிறைகிறார்கள்.
பிரித்விராஜ், பாய்ஸ் ராஜன் இருவரும் ராணுவ உயரதிகாரிகளாக கச்சிதமாக நடித்திருக்க,
ரோபோ சங்கர், ஸ்ரீதேவி, பூர்ணிமா, சுஷ்மிதா, நிஷா, இயக்குநர் அரவிந்தராஜ், தேனடை மதுமிதா, விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், சிரஞ்சீவி, ஓஏகே சுந்தர், துரைபாண்டியன் என இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களின் நடிப்பு அளவாக இருக்கிறது.
பாவலர் வரதராஜனின் இசையில் ‘வல்லினமா மெல்லினமா?’, ‘கொஞ்சிக் கொஞ்சி பேசவா?’, ‘முத்தத்தின் தோழா’ பாடல்கள் இளையராஜாவின் வாசனையோடு இதயம் வருட, கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை கதையோட்டத்தின் பரபரப்புக்கு உரம் போட்டிருக்கிறது.
காடு, மலை, அருவி என சம்பவங்கள் நடக்கிற லொகேஷன்களை கண்ணுக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் பதிவு செய்திருக்கிற ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ், நடிகர் நடிகைகளுக்கு அவசியமேயில்லாமல் காட்சிக்கு காட்சி குளோசப் வைத்திருப்பது சற்றே எரிச்சலூட்டுகிறது.
ராணுவ வீரர்கள் மேற்கொள்கிற பயிற்சி, அவர்களின் தேசப்பற்று, சந்திக்கிற சவால்கள், தாக்குதல்கள், உயிரிழப்புகள் என பலவற்றை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். காதலில் இனக்கவர்ச்சி காதல், உண்மைக் காதல், தெய்வீகக் காதல், நாடகக் காதல் என்பதையெல்லாம் காண்பித்திருக்கிறார்கள். இந்த படத்தில் இயக்குநர் வீர அன்பரசு உண்மைக் காதலின் ஆழத்தைக் காட்டியிருக்கும் விதம் இதுவரை திரையில் பார்க்காததாக இருப்பது தனித்துவம்; அந்த அனுபவம் ஆடியன்ஸுக்கு சிலிர்ப்பு தருவது நிச்சயம்.
கமாண்டோவின் லவ் ஸ்டோரி – தேசத்துக்கு சல்யூட்; காதலுக்கு மரியாதை!
-சு.கணேஷ்குமார்

