நிழல் என தலைப்பு வைத்ததற்கு பதிலாக ‘சிங்கப் பெண்’ என வைத்திருக்கலாம். அந்தளவுக்கு கதையின் நாயகி அதிரடி சம்பவங்களைச் செய்கிற படம்.
இளம்பெண் ரம்யா ஒருசில இளைஞர்களைக் கடத்தி, கொடூரமாகத் தாக்குகிறார். தாக்கப்பட்டவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலைமைக்கு ஆளாகிறார்கள். அப்போதே அவர்களால் அவளோ, அவளைச் சார்ந்தவர்களோ பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதற்காக பழி வாங்குகிறாள் என்றும் தோன்றுகிறது. தோன்றுவது சரிதான் என்கிறது கதையின் போக்கு.
என்ன பாதிப்பு, யாருக்கு பாதிப்பு, எப்படி பழி வாங்குகிறாள், அதில் என்னவெல்லாம் பிரச்சனைகளச் சந்திக்கிறாள் என நீளும் காட்சிகளில் பரபரப்பு மசாலாவை அளவாய் கலந்திருக்கிறார் இயக்குநர ஏ கே குமார்.
ரம்யா பிக்பாஸ் ஜனனி. அழகிலும் சிரிப்பிலும் அமுல் பேபி போலிருக்கிற அவர் அநியாயத்தைக் கண்டு ‘அடங்கமறு’ ஜெயம் ரவியாய் சினம் கொள்ளும்போது காட்டும் சீற்றம் அசத்துகிறது. தன் சகோதரிக்கு நேர்ந்த விபரீதங்களைக் கண்டு கலங்குவது நெகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் விபரீதங்களில் சிக்கி சின்னாபின்னமாகும்போது பரிதாபமாகவும் இருக்கிறது. சராசரி ஹீரோயின்கள் போல் ஹீரோவை காதலிக்கிற கடமையிலும் கமிட்டாகி கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்.
ஜனனியின் காதலனாக விஸாகன். சில படங்களில் கிளைமாக்ஸ் முடிந்து ஆடியன்ஸ் சீட்டை விட்டு எழும்போது வைப் மெட்டீரியலாக ஒரு பாடலைப் போட்டு உட்கார வைப்பதுண்டு. அப்படி கதையே முடிந்து விட்ட ஃபீல் வரும்போது காவல்துறை உயரதிகாரியாக களமாடி, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் சாமர்த்தியமாய் நுழைபவர்களிடம் துப்பாக்கியின் பவரை காட்டுகிறார். காதல் காட்சிகளில் மெல்லிய புன்னகை சிந்தி வலம் வருகிறார்.
ஹீரோயினுக்கு தோழியாக, தன் கண்ணெதிரில் நடக்கும் கொடுமைகளை கண்டு அதிர்வதும் பதற்றப்படுவதுமாக கவனம் பெறுகிறார் திவ்யா கிருஷ்ணன்.
சிவன் சீனிவாசன் குற்றச் செயல்களை குதூகலமாகச் செய்கிற மகனுக்கு பலமாக நிற்கும் தந்தையாக கெத்து காட்ட, காம வெறியர்களாக வருகிற இளைஞர்கள் மூன்று பேரின் உருட்டல் மிரட்டல்களில் குறையில்லை.
இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள் என்பது கதையின் விறுவிறுப்புக்கு உதவ, அதில் ஒருவரின் மனதைக் கவர்ந்தவராக கெளசிக். ஒருகட்டம் வரை கூட்டத்தில் ஒருவன் போல் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவர் கதை நீதிமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்ததும் அட்வகேட் கோட் அணிகிறார். அளவாய் நடித்து நகர்கிறார்.
ரமேஷ் கண்ணா, சபீதா ஆனந்த், அபிஷேக் என பழகிய பழைய முகங்களோடு சோஷியல் மீடியா பிரபலங்களும் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் தென்படுகிறார்கள்.
அபுபக்கர் இசையில் ‘அடியே அழகே’, ‘ஆடை கிழியும் சத்தம்’ சத்தம் பாடல்களில் கோடை மழை தருகிற உற்சாகமிருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கு பொருந்திப் போகிறது.
எளிமையான வீடு, மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல், இரவு நேர சாலைகள், தெருக்கள் என அங்குமிங்கும் பரவிப் பாய்ந்து காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது மோகன்குமாரின் கேமரா.
படத்தின் நீளம் 104 நிமிடங்களில் அடங்கியிருப்பது எடிட்டர் தினேஷ் தேவைக்கதிகமாய் எதுவும் வேண்டாம் என்பதில் உறுதியாய் இருந்திருப்பதற்கான சான்று.
நிர்பயா சந்தித்த கொடுமைகளை, பொள்ளாச்சி சம்பவங்களை நினைவூட்டும் விதத்திலான கதை, திரைக்கதையால் அதிர வைத்து,
‘சட்டம் எல்லோருக்கும் சமமல்ல’ என்கிற நிஜத்தில் முடிகிற இந்த நிழலில் தாராளமாய் ஒதுங்கலாம். திக்திக் திரில்லர் அனுபவம் பெறலாம்.
-சு.கணேஷ்குமார்

