இஸ்லாமியர்களின் குடும்பத்தில் சிலபல நாட்கள் ஒட்டி உறவாடி வசித்துவிட்டு வந்தது போன்ற அனுபவம் தருகிற ‘ஹபீபி.’
கால்களையும் கைகளையும் மணிக்கணக்கில் இயந்திரம் போல் இயக்குகிற தறி நெசவு மூலம் வேட்டி சேலைகளைத் தயாரிக்கிற எளிமையான குடும்பம். அந்த குடும்பத்தின் தலைவர் யூசுப். விசைத்தறிகளின் வரவால் அவரது தொழில் நலிவடைய, அதிலிருந்து விலகும் அவரது தம்பி பிழைப்புக்காக வெளிநாடு போகிறார்.
யூசுப்பால் பரம்பரைத் தொழிலை விடவும் முடியவில்லை; தொழிலில் போட்டிகளை சமாளிக்கவும் முடியவில்லை. அந்த நெருக்கடிகள் ஒரு பக்கமிருக்க அவரது மகன் அபுதாகிர் தங்கள் மதத்தைச் சேர்ந்த அதே பகுதியில் வசிக்கும் பெண்ணைக் காதலிக்க, அவளும் லேசாக பச்சைக் கொடி காட்ட,
அபுதாகீர் அவளை நிக்காஹ் செய்து கொண்டு உற்சாக வாழ வேண்டும் என்பதை கொள்கையாக வைத்து நாட்களைக் கடத்துகிறான்.
ஒரு கட்டத்தில் அபுதாகிரின் வறுமைச்சூழல் காதலுக்கு ஆப்பு வைக்க, அபுதாகிர் வெளிநாட்டு மண்ணில் கால் வைக்க அதன்பிறகாவது காதல் கல்யாணத்தில் முடிந்ததா இல்லையா என்பது மீதிக் கதை…
யூசுப்பாக இயக்குநர் கஸ்தூரி ராஜா. பாசம், ஆதங்கம், விரக்தி என எளிய மனிதனுக்கான சராசரி உணர்வுகளை சரியான மீட்டரில் கடத்துகிறார்.
கல்லூரிப் பருவம், கல்யாண வயதை தொட்டுத் தொடர்கிற பருவம், கல்யாணம் கைகூடாமல் காலம் கடந்து கொண்டிருக்க நடுத்தர வயதை எட்டிய நரைமுடிகளின் ஆதிக்கம் சூழ்ந்த பருவம் என வயதுக்கேற்ற தோற்ற மாற்றத்தோடு, உடல் எடையோடு அபுதாகிராக வலம் வரும் ஈஸா உணர்வுகளை வெளிப்படுத்துவது பரவாயில்லை ரகமாக இருக்கிறது.
மாளவிகா மனோஜுக்கு காதலி வேடம். குறைவான காட்சிகளில் நிறைவான பங்களிப்பு.
அக்கம் பக்கம், சொந்த பந்தம், ஊர்மக்கள் என எல்லோருமே கதைக்கு பொருத்தமான முகங்களாக இருக்க, நடிப்பு இயல்பாக இருக்கிறது.
பின்னணி இசையில் வழக்கமான அதிரடியைக் காட்டாமல் கதையின் தன்மைக்கேற்ப பயணித்திருக்கிறார் சாம் சி எஸ்.
இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறையை, சடங்கு பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான சடங்கு சம்பிரதாயங்களை பாராட்டும் விதத்தில் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கும் மீரா கதிரவன், வழக்கமான காதல், வழக்கமான மோதல், வழக்கமான முடிவு என குறுகிய வட்டத்துக்குள் சுழன்றிருக்கிறார்.
ஹபீபி – எதிர்பார்ப்பு பிரியாணி விருந்து; கிடைப்பது நோன்புக் கஞ்சி
