ஊர் உலகம் கொண்டாடும் மாபெரும் கர்நாடக இசை மேதை சாருகேசி. வாலிபப் பருவத்தை எட்டிவிட்ட அவரது மகனும், மகனுடைய மனைவியும் அவரை பெரியளவில் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். அதே நேரத்தில் அல்சைமர் என்கிற மறதி நோயால் தன் நிலை மறக்கிறார்.
மகனும் மருமகளும் அவருக்கு மன உளைச்சல் தருவதற்கான காரணங்கள் சஸ்பென்ஸ் திரில்லர் லெவலில் காட்சிகளாக விரிய, அல்சைமர் அவரை படுத்தும் பாடும் அதிலிருந்து அவர் மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பதும் கதையின் மீதி…
சாருகேசியாக ஒய் ஜி மகேந்திரன். அவரது இயல்பான முகவெட்டும் உடல்மொழியும் நிறமும் கர்நாடக இசை மேதை கேரக்டருக்கு பொருந்திப் போகிறது. தன் மனைவியின் மகனை தன் மகனான நினைத்து பாசம் காட்டி வளர்ப்பது, மகன் தன் அன்பை புரிந்து கொள்ளாத வேதனையில் தவிப்பது, அல்சைமர் தன்னை முழுவதுமாக பாதிக்கும் முன் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என பரபரப்பாவது, அல்சைமரிலிருந்து விடுபடும் ஒரு நாளில் உலகம் வியக்குமளவு இசையில் புதிய சகாப்தம் படைப்பது என அனுபவத்தில் ஊறிய நாடக நடிப்பை பரிமாறுகிறார்.
அப்பாவின் புகழ் தன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்ற முடிவுக்கு வருவது, அதன் விளைவாக அப்பா மீது வெறுப்பு நெருப்பை வார்த்தைகளால் கொட்டுவது, அவர் யார், தனக்கு அவருக்குமான உறவிலிருக்கும் வில்லங்க விவகாரமறிந்து அவரை அவரது அல்சைமர் பாதிப்பு காலகட்டத்தில் கனிவாக கருணையாக கவனித்துக் கொள்வது என ராஜ் ஐய்யப்பா வில்லத்தனமாகவும் நல்லத்தனமாகவும் நடிப்பில் இருவேறு பரிமாணங்களைக் காட்டியிருக்கிறார்.
உலகமகா இசைமேதையான சாருகேசி முன் கால்மேல் கால் போட்டு அமர்வதாகட்டும், அவரை எந்தளவு அவமானப் படுத்த முடியுமோ அந்தளவு பேச்சாலும் செயல்களாலும் அவமானப் படுத்துவதாகட்டும், ஒரு கட்டத்துக்கு பின் சாருகேசிக்கு உச்சபட்ச மதிப்பு மரியாதை தருவதாகட்டும் மருமகளாக வருகிற ரம்யா பாண்டியனின் நடிப்பில் திமிர், தெனாவட்டு, பாச நேச வெளிப்பாடு என அத்தனையும் அசத்துகிறது.
ஒய் ஜி மகேந்திரனின் மனைவியாக சுஹாசினி அனுபவ நடிப்பைத் தந்திருக்கிறார்.
பணிவின் உச்சம், விசுவாசத்தின் உச்சம், நன்றியின் உச்சம் இத்தனைக்கும் இலக்கணம் வகுத்தது போன்ற நடிப்பில் சாருகேசியின் நிழல் போல் களமாடியிருக்கிறார் ‘தலைவாசல்’ விஜய்.
இயேசு நாதரை நினைவூட்டும் விதத்திலான உடையில் வந்து தன்னை சிவபெருமான் என சொல்லிக் கொள்கிறவராக சத்யராஜ். நிஜத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவரை கடவுளாக பார்ப்பதே வித்தியாசமாக இருக்க, கதையோட்டத்தின் சில தருணங்களை அவரது வழக்கமான அலம்பல் சலம்பலற்ற எளிமையான நடிப்பு ஆக்கிரமித்திருக்கிறது. சமுத்திரகனி, ஒய் ஜி மதுவந்தி என ஒருசிலர் வந்து போகிறார்கள்.
‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையில் கிளைமாக்ஸில் வருகிற ‘அண்டம் படைத்து அகிலம் படைத்து அணுவும் படைத்த இறைவா’ பாடல் சிலிர்ப்பூட்ட, அவள் தந்த வரம்’ மனதில் தாவியேறி அமர்கிறது.
திரும்பிய பக்கமெல்லாம் பளபளவென்றிருக்கிறது. ஒளிப்பதிவில் படத்திற்கு அப்படியொரு வெளிச்சம் தந்திருக்கிறார் பி எல் சஞ்சய்.
ஒய் ஜி மகேந்திரன் நடிப்பில் சபாக்களில் பலமுறை நடத்தப்பட்டு வரவேற்பைக் குவித்த சாருகேசிக்கு திரை வடிவம் கொடுத்திருப்பது பாட்சா, அண்ணாமலை உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. அதை வைத்து, சாருகேசியும் மாஸாக, அதிரடி சரவெடியாக இருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். சினிமா மசாலா கலந்து களங்கப்படுத்தாமல் நாடகத்தை நாடகமாகவே எடுத்திருக்கிறார்.
சாருகேசி – அவ்வளவாய் இல்லை ருசி!
-சு.கணேஷ்குமார்
