ஒரே நபர் காலை 6 முதல் மாலை 6 வரை பெண்ணாகவும், மாலை 6 முதல் காலை 6 வரை ஆணாகவும் மாறிக் கொண்டிருந்தால், அப்படி மாறுகிற நபருக்கு காதல் பிறந்தால்… அப்படியொரு செம இன்ட்ரஸ்டிங்கான கதையில் ‘டபுள் ஆக்குபன்ஸி.’
அப்படியும் இப்படியுமாக மாறுகிற ரஜினி என்கிற கதாபாத்திரத்தில் ஆணாக ஆணாக சந்தோஷ், பெண்ணாக ரேஷ்மா வெங்கடேஷ்.
கதைப்படி ஆண் ரஜினிக்கு காதலி உண்டு; பெண் ரஜினிக்கு காதலன் உண்டு. இருவரும் தங்கள் பார்ட்னரிடம் 12 மணி நேரத்துக்கு ஒருமுறை தங்களது பாலினம் மாறுகிற பிரச்சனையை சொல்லிப் புரிய வைக்க முடியாமல் படும் அவஸ்தைகளை ரசிக்க முடிகிறது. நடிப்பில் காதல், உற்சாகம், குழப்பம், பதற்றம், தவிப்பு என உணர்வுகளைப் பிரதிபலித்திருப்பதில் போதுமான உயிரோட்டமிருக்கிறது.
ஆண் ரஜினியின் காதலியாக சம்யுக்தா விஸ்வநாதன், பெண் ரஜினியின் காதலனாக வினோத் கிஷன். இருவரின் நடிப்பிலும் ரசிக்க வைக்கும் அம்சங்களுக்கு குறையே இல்லை. காதல் கீதல், சண்டை சச்சரவு என மற்ற ஏரியாக்களிலும் அசத்தலான பெர்ஃபாமென்ஸ்.
விடிவி கணேஷ் கதையோட்டத்தில் கலந்து, தன் டிரேட் மார்க் டயலாக் டெலிவரியால் கலகலப்பூட்டுகிறார்.
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்ற உணர்வையும், பின்னணி இசை இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது. சாந்தகுமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கிறது.
ஒரு இதயம் இரு உயிர்கள் என படுபயங்கர சிக்கலான கதையை யோசித்து, அதற்கு நடக்கும் சம்பவங்களை ரசிக்கவும் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்க்கவும் வைக்கிற திரைக்கதையமைத்து ஆடியன்ஸுக்கு வித்தியாச விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி. லாஜிக் பற்றி யோசிக்கும் மூளைக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டுப் பார்த்தால் நேரம் போவது தெரியாது. முக்கியமான விஷயம் படத்துல லிப்லாக் சீனெல்லாம் உண்டு.
-சு.கணேஷ்குமார்
