Home பொது புதுச்சேரி முதலமைச்சரிடம் ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம்...

புதுச்சேரி முதலமைச்சரிடம் ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி!

திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இன்று மாலை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய “சினிமாவின் ஆன்மா” (சிறார்கள் திரைப்பட ரசனைக் கல்வி) என்ற நூலை வழங்கி, அதன் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார்.
இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மூலம் இந்நூல் குறித்து தீவிர ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
சந்தியா பதிப்பகத்தின் (திரு. சந்தியா நடராஜன்) வெளியீடாக வந்துள்ள இந்நூல் குறித்த சுருக்கமான விவரங்கள் வருமாறு:
நூலின் முக்கிய நோக்கம்:
பக்குவப்பட்ட நல்மனிதர்களை உருவாக்குதல்: இது கேமரா, எடிட்டிங் போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் ‘தொழில்நுட்பக் கல்வி’ அன்று; மாறாக, மனித உணர்வுகளையும், வாழ்வியல் அறத்தையும், கலை நுணுக்கங்களையும் ரசிக்கக் கற்றுத்தரும் ‘திரைப்பட ரசனைக் கல்வி’ (Film Appreciation Education) ஆகும்.
மனநலன் காக்கும் தடுப்பூசி: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் போதையற்ற, வன்முறையற்ற, பிறருக்கு நன்மை செய்யும் நல்மனங்களாக உருவாவதற்குக் கலை ரசனை மிகவும் முக்கியமானது.
ஆசிரியர்களுக்கான வழிகாட்டி: இது குழந்தைகள் படிப்பதற்கான பாடநூல் அல்ல; மாறாக, மாணவர்களுக்குத் திரைப்படக் கலையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டி (Guide) ஆகும். ஆறாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கைகள்:
1. நூலகங்களில் கட்டாய இடம்: இப்புத்தகத்தை ஒவ்வொரு பள்ளியின் நூலகத்திலும், ஆசிரியர் அறையிலும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் (Teacher Training Institutes) மற்றும் கல்லூரிகளிலும் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
2. பள்ளிகளில் ‘ஹோம் தியேட்டர்’ வசதி: குழந்தைகளின் உலக சினிமா பற்றிய புரிதலை வளர்க்கவும், பன்னாட்டுச் சிறார் திரைப்படங்களை அவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாகவும், ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படங்களைத் திரையிடுவதற்கெனப் பிரத்தியேக ‘ஹோம் தியேட்டர்’ (Home Theater) வசதியை ஏற்படுத்த கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
எதிர்காலத் தலைமுறையினரின் அறிவு மற்றும் ஒழுக்க மேம்பாட்டிற்காக, திரைப்படக் கல்வியை ஒரு சமூக இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று இயக்குநர் சீனு ராமசாமி இச்சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்