திகிலும் திரில்லுமாக மற்றுமொரு படம்.
ஓரு இளைஞன் தன்னுடன் தங்கியிருந்த இரண்டு பேரை கொடூரமாக கொன்று எரித்துவிட்டு, தானும் எரிந்து சாகிறான். அந்த வீட்டில் இந்த கதையின் நாயகன் தங்குகிற சூழ்நிலை.
அந்த வீட்டுக்கு போனதிலிருந்தே அவனைச் சுற்றி மர்மமான விஷயங்கள் நடக்க, அந்த வீட்டில் என்ன நடந்தது, மூன்று பேர் உயிரிழந்ததன் பின்னணி என்ன என்பதை தெளிவுபடுத்தும் விதமாக கதையை ஓரளவு பரபரப்பாக நகர்த்தி படத்தை முடித்து வைக்கிறார் இயக்குநர் கல்யாண் கே ஜெகன்.
பயத்தில் நடுங்குவதும், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் மன உளைச்சலுக்கு ஆளாவதுமாக நாயகன் அஜய் கார்த்தியின் நடிப்பு கதைக்குப் பொருத்தம்.
கதாநாயகனுடன் காதல், டூயட் என ரெகுலர் டியூட்டி ஏதுமில்லை அஞ்சனா முருகனுக்கு. திரையில் தோன்ற கொடுத்திருக்கும் நேரமும் குறைவு. அதிலும் காதல் உணர்வு, காதலன் ஏமாற்றிய வலி, மீண்டும் அதே வலியைக் கொடுக்கத் தயாரானவர்கள் மீது கொலைவெறி என அவரது எளிமையான நடிப்பு கவனிக்க வைக்கிறது.
நடக்கும் மர்மமான விஷயங்களை அலசி ஆராய்கிற வழக்கமான போலீஸ் அதிகாரியாக நட்டி நடராஜ், அலட்டலில்லாமல் கடமையாற்றியிருக்கிறார்.
இயக்குநர் கே பாக்யராஜ் அனுபவ நடிப்போடு வந்து போகிறார். இன்னபிறரும் குறையின்றி நடித்திருக்க, சைக்காலஜிக்கல் திரில்லர் கதையோட்டத்திற்கேற்ப மனு ரமேசனின் பின்னணி இசை திக் திக் உணர்வைத் தூண்டுகிறது. ரவி சக்தியின் ஒளிப்பதிவு நேர்த்தி.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாதது படத்தின் பலவீனம்.
புதுமைகளைத் தேடாமல், எளிமையான ஹாரர் த்ரில்லர் படங்களை விரும்புவோருக்கு பிடிக்கலாம்.

