முழுக்க முழுக்க மாற்றுச் சினிமா (Art / Experimental Cinema) ரசிகர்களைத் திருப்தி படுத்துகிற படம்.
‘கேர் ஆஃப் காஞ்சரபாலம்’, ‘உமாமகேஸ்வர உக்ரரூபஸ்ய’ உள்ளிட்ட பாராட்டுக்களைக் குவித்த திரைப்படங்களை இயக்கிய வெங்கடேஷ் மஹா எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்துள்ள ‘ராவ் பகதூர்.’
புவனம் ராமப்ப ராவ் பகதூர் (சத்யதேவ்) என்பவர் மாபெரும் ஜமீன் குடும்பத்து வாரிசு. குடிகாரர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருப்பவர். அவர் இன்று இறந்து விடுவார், நாளை இறந்து விடுவார் என எதிர்பார்க்கிறார்கள். நோய் முற்றிய நிலையிலும் அவர் உயிர் பிரிவதாயில்லை. அதற்கு காரணம் அவருக்குள் இருக்கும் ஒரு மரணம் பற்றிய சந்தேகம். அந்த சந்தேகம் எப்போது தீர்கிறது, எப்படி தீர்கிறது என்பதும் அவர் உயிர் எப்படி பிரிகிறது என்பதும் கிளைமாக்ஸாக இருக்க அவர் வாழ்வில் நடந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள அடிக்கடி எட்டிப் பார்க்கிறது ஃபிளாஷ்பேக். கிளைமாக்ஸில் ராப் பகதூரின் காதில் சொல்லும் ரகசியத்திலிருக்கும் ட்விஸ்ட் எதிர்பாராதது.
உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட தனது கதாபாத்திரத்திற்கு முரட்டுத்தனத்துக்குள் குழந்தைத்தனத்தைக் கலந்து உயிரூட்டியிருக்கிறார் சத்யதேவ். அரண்மனை போன்ற வீட்டுக்குள் முடங்கி மதுவுக்கு அடிமையாகி, வேறொரு கற்பனை உலகத்தில் வாழ்கிற மனிதராக வருகிற அவர் ராஜாவாக தன்னை அலங்கரித்துக் கொண்டு ஈடுபடும் செயல்கள் ரசிக்க வைக்கிறது. கருப்பு நிறத்தில் இருந்த மகனுடைய எலும்புக்கூட்டை பார்த்து கருப்பா இருந்தவன் வெள்ளையாகிட்டான் என்பது போல் பேசும் காட்சி நெகிழ வைக்கிறது. இளைஞனாக வருகிறபோது ஜமீன் குடும்பத்து வாரிசு என்பதற்கான கம்பீரத்தை கச்சிதமாக காட்டியிருக்கிறார்.
பகதூருக்கு ஜோடியாக தீபா தாமஸ், அழகாக இருக்கிறார்; உணர்வுப்பூர்வமான கேரக்டரை ஏற்று அளவாக நடித்திருக்கிறார். மகன் மரணத்துக்கு பின் பல வருடங்கள் ஒரே அறைக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளும்போது கேரக்டரின் மதிப்பு கூடுகிறது.
ராவ் பகதூரின் ரகசியங்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்கிற, பகதூருக்கு சிகிச்சையளித்து கவனித்துக் கொள்கிற குடும்ப மருத்துவராக விகாஸ் முப்பலா துறுதுறுப்பான நடிப்பால் கவனம் பெறுகிறார்.
கதையின் மையப்புள்ளியாக, பகதூரின் மனம் விரும்பாத நிறத்தில் பிறந்த மகனாக வருகிற சிறுவன் கிரணின் துடிப்பான பங்களிப்பு கவர்கிறது.
வேலைக்காரியாக வருகிற பாலா பராசர் பகதூரின் நிலையைப் பார்த்து அடிக்கடி அதிர்ச்சியடைகிறார். நடிப்பில் சுறுசுறுப்பு அதிகமிருக்கிறது. பகதூரின் மகனாக பிரணாய் வாகா, காவல்துறை அதிகாரியாக ஆனந்த் பாரதி உள்ளிட்டோரின் நடிப்பு நேர்த்தி.
ஸ்மரன் சாய் அமைத்திருக்கும் பின்னணி இசை கதையோட்டத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது.
அரண்மனைக்குள், மாயாஜால கனவு உலகத்துக்குள் விரியும் காட்சிகளுக்கு பயன்படுத்தியிருக்கும் கோணங்களால், ஒளிக் கலவையால் ஆச்சரியப்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பார்மர்.
அரண்மனையை படத்தின் ஒரு கதாபாத்திரமாக மாற்றியிருக்கும் கலை இயக்குநருக்கு தனி பாராட்டு.
தியேட்டரில் பார்ப்பதற்கான அத்தனை தகுதிகளும் கொண்ட இந்த படம் சைகலாஜிக்கல் திரில்லர், மேஜிக்கல் ரியலிஸம், டார்க் காமெடி என பல ஜானர்களின் கலவையாய், நிச்சயமாய் வித்தியாசமான அனுபவம் தரும்! 


