Home சினிமா லவ் ஓ லவ் சினிமா விமர்சனம்

லவ் ஓ லவ் சினிமா விமர்சனம்

காதலைப் பொறுத்தவரை காதலன் காதலியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக, அவளை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பான். அதேபோல் காதலியும் காதலனுக்கு சமமாக களமிறங்கினால் எப்படியிருக்கும்?

இப்படியும் இருக்கலாம் என்கிறது மகேஷ் ராஜேந்திரன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் கதையும் திரைக்கதையும்…

காதலிக்காக செலவு செய்து கடன் பிரச்சனையில் சிக்கித் தவிப்பதும் அதே தவிப்பை காதலிக்கு கொடுத்து ரசிப்பதுமாக தன் கடமையை சரியாகச் செய்திருக்கிறார் நாயகன் பவிஷ். ஃபேமிலி சென்டிமென்ட்’டிலும் குறை வைக்கவில்லை.

தனது ஆடம்பரத் தேவைகளை காதலன் மூலம் தீர்த்துக் கொள்வதும், பழி வாங்குவது போல் அவன் வைக்கும் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவதுமாக நாயகி நாகதுர்காவின் நடிப்பு கியூட்டாக இருக்கிறது.

செல்வராகவன் கனமான கதையுள்ள படங்களில் மட்டும்தான் நடிப்பார் என எந்த இயக்குநராவது நினைத்துக் கொண்டிருந்தால் அந்த நினைப்பை மாற்றிக் கொள்ளலாம். இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக, பெரிதாய் எந்த முக்கியத்துவமும் இல்லாத கேரக்டரை ஏற்று, காதலன் காதலி பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார். கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க முடிகிறது.

மாதர் சங்கத் தலைவியாக வந்து,  காதலர்களுக்குள் உருவான சிக்கலைத் தீர்த்து  சேர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி அலப்பரை செய்கிற வனிதா விஜயகுமார், பாடலொன்றில் எனர்ஜியாக ஆட்டமும் போட்டிருக்கிறார்.

நாயகியின் அம்மாவாக ரம்யாவின் கொந்தளிப்பான நடிப்பு கவனம் பெறுகிறது. நாயகனின் அப்பாவாக, மகன் அனுபவிக்கும் அவஸ்தைகளைக் கண்டு என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிற கேரக்டரில் நெகிழ வைக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

இன்னபிற கேரக்டர்களில் அஸ்வத், செளந்தர்யா, ஆதித்யா கதிர், ராம்குமார் பழனி உள்ளிட்டோரின் நடிப்பு நேர்த்தி.

ஃபாக்‌ஷன் கூட்டணி இசையமைத்துள்ள பாடல்களும் பின்னணி இசையும் இளமைத் துள்ளலுடன் நகரும் காட்சிகளுக்கு உற்சாகமூட்டுகிறது. .ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவில் ரிஸ்னெஸ் அதிகம்.

தமிழ்த் திரைப்படங்களுக்கு இப்படியான கதைகளில் ஹீரோவை வேலைக்கு போய் சம்பாதிப்பவராக காட்டுவது குற்றம் என்ற எண்ணம் உண்டு. அந்த குற்றத்தைச் செய்திருப்பதற்காகவும், போகிற போக்கில் கிரெடிட் கார்டு பயன்பாட்டின் ஆபத்துகளை எடுத்துச் சொல்லி, உணவை வீணாக்கக் கூடாது என்ற அட்வைஸை அள்ளிக் கொடுத்திருப்பதற்காகவும் இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு.

காதல் கதைகளில் இது புதுசு என்று சொல்லும்படி ஒரு ஒன்லைனை பிடித்த இயக்குநர், கலகலப்பாக திரைக்கதையை நகர்த்தி கிளைமாக்ஸை உணர்வுபூர்வமாக தொட்டிருக்கிறார்.

லவ் ஓ லவ் – ஜென்ஸி லவ்வர்ஸ் ஜாலியோ ஜாலி!

-சு.கணேஷ்குமார்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்