Home சினிமா இதயம் முரளி சினிமா விமர்சனம்

இதயம் முரளி சினிமா விமர்சனம்

முரளி நடித்த ‘இதயம்’ இடம் பிடிக்காத இதயம் தமிழ்நாட்டில் மிகமிக குறைவாகவே இருக்கும். அப்படியொரு அதிரிபுதிரி ஹிட்டான அந்த படத்தின் ரெபரன்ஸை தொட்டுக் கொண்டும் ஒட்டிக் கொண்டும், முரளியின் வாரிசு அதர்வாவை கதாநாயகனாக்கி களம் கண்டிருக்கிறது ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருக்கும் ‘இதயம் முரளி.’

நாயகன் இதயா (அதர்வா) சிறுவயதில் கிளாஸ் டீச்சர் மீது பிரியமாக இருக்கிறான்; ஒரு கட்டத்தில் அவரை தன் மனைவியாகவே நினைக்கிறான். அடுத்து பள்ளிப் பருவத்தில் ஒரு மாணவியைக் காதலிக்கிறான். காலம் கடந்துபோக, வாலிபப் பருவத்தை எட்டிய நிலையில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். இப்படி காதலிப்பது தொடர்கிறதே அவன் தவிர யாரிடமும் காதலைச் சொல்வதேயில்லை என்பதுதான் ஹைலைட் மேட்டர்.

ஒரு கட்டத்தில் அவனுக்கு திருமணத்துக்கு ஏற்பாடாகிறது. அந்த சூழ்நிலையில், அவன் சிறுவயதிலிருந்து யாரையெல்லாம் காதலித்தானோ அவர்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. அந்த வாய்ப்பால் உருவாகிற குழப்பங்கள் பரபரப்பாக இருக்க, இதயாவுக்கு மனைவியானது யார் என்பது கிளைமாக்ஸ்…

ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொண்டால் குழந்தை பிறந்துவிடும் என்று நம்புவதிலிருந்து, யாரிடமும் கடைசி வரை காதலை சொல்லவேயில்லை என்று உருவாக்கப்பட்ட அதர்வாவின் கேரக்டரே சுவாரஸ்யமாக இருக்கிறது. அதர்வாவின் அலட்டலில்லாத நடிப்பு கதையின் தேவைக்கு பொருத்தமாக இருக்கிறது.

பிரீத்தி முகுந்தன், கயாது லோகர் அதர்வாவின் காதலியாக வருகிறார்கள். அழகாக இருக்கிறார்கள். நடிப்பும் அசத்துகிறது. தன் காதலை அதர்வாவிடம் சொல்லும் காட்சியில் அதிக கவனம் ஈர்க்கிறார் கயாது லோகர்.

பகத் ஃபாசில் அதர்வாவின் பிளாஷ்பேக் பற்றி விரிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் காட்சிகளை கலகலப்பாக்கியிருக்கிறார்.

அதர்வாவின் மாமாவாக நட்டி நட்ராஜ், அதர்வாவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக மாளவிகா மோகனன், மாளவிகாவின் தந்தையாக ஆடுகளம் நரேன், நண்பர்களாக இசையமைப்பாளர் தமன், ‘பரிதாபங்கள்’ சுதாகர், ‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலின் என படம் முழுக்க கூட்டம் கூட்டமாய் நட்சத்திரங்கள்… பங்களிப்பு கச்சிதம்.

திருச்சியில் தொடங்கி நியூயார்க் வரை சுற்றிச்சுழன்று காட்சிகளை பிரமாண்டமாகவும் அழகாகவும் வண்ணமயமாகவும் மாற்றியிருக்கிறது ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சி.எச். சாய் கூட்டணி.

தமன் இசையில் பாடல்களின் அணிவகுப்பு பெரியது. தனுஷ் பாடும் வாம்மா வாம்மா இதம் தருகிறது. தங்கமே தங்கமே கொண்டாட்ட மூடுக்கு கொண்டு போகிறது.

பிரபலமான நடிகர் நடிகைகளைக் குவித்து, பணத்தை கோடி கோடியாக வாரியிறைத்து, காட்சிகளைப் பிரமாண்டமாக்கினால் படம் வெற்றி பெற்று விடும் என்று நினைத்தாரகளோ என்னவோ தெரியவில்லை; காட்சிக்கு காட்சி, செலவழித்த பணம் கெத்து காட்டுகிறது.

கதை விளையாட்டுத் தனமாக இருந்தாலும், சின்னச் சின்ன சுவாரஸ்யங்களும் காமெடி கலகலப்பும் இதயத்தை ஓரளவு பலமாகியிருக்கிறது.

-சு.கணேஷ்குமார்

 

REVIEW OVERVIEW
இதயம் முரளி சினிமா விமர்சனம்
Previous articleஐ நோபடி (I, Nobody) திரைப்பட விமர்சனம்
Next articleலவ் ஓ லவ் சினிமா விமர்சனம்
idhayam-murali-movie-reviewமுரளி நடித்த 'இதயம்' இடம் பிடிக்காத இதயம் தமிழ்நாட்டில் மிகமிக குறைவாகவே இருக்கும். அப்படியொரு அதிரிபுதிரி ஹிட்டான அந்த படத்தின் ரெபரன்ஸை தொட்டுக் கொண்டும் ஒட்டிக் கொண்டும், முரளியின் வாரிசு அதர்வாவை கதாநாயகனாக்கி களம் கண்டிருக்கிறது ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருக்கும் 'இதயம் முரளி.' நாயகன் இதயா (அதர்வா) சிறுவயதில் கிளாஸ் டீச்சர் மீது பிரியமாக இருக்கிறான்; ஒரு கட்டத்தில் அவரை தன் மனைவியாகவே...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்