ராம் ஏராளமான பெண்களால் நிராகரிக்கப்பட்ட அன்லக்கி பர்சன். ஒரு கட்டத்தில் அவன் வாழ்வில் வசந்தமாய் நுழைகிறாள் லீலா. பற்றிக் கொள்கிறது காதல். கூடவே தன்னை மாலை 6 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என அவள் விதிக்கும் நிபந்தனையால் தொற்றிக் கொள்கிறது குழப்பம்.
ஆறு மணிக்கு மேல் அவளுக்கு என்ன நடக்கிறது என்பது கதையின் பரபரப்பான பகுதி. அந்த சம்பவங்களால் ராம் லீலா காதலில் உருவாகும் பிரச்சனைகளும் தீர்வும் என வேகமெடுக்கும் திரைக்கதையில் காமெடி கலகலப்பும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
ராமாக ரியோ ராஜ். பெண்களைப் புரிந்து கொள்ளாத, பெண்கள் விஷயத்தில் அதிர்ஷ்டமில்லாத அப்பாவியாக கிட்டத்தட்ட படத்தை ஒற்றை ஆளாக தூக்கிச் சுமக்கும் கடமையை ஏற்றிருக்கிறார். ஆடியன்ஸைப் பார்த்து தன் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் விதமான டெட்பூல் பாணியிலான காட்சிகள் ஆரம்பத்தில் இன்ட்ரெஸ்ட்டிங். உணர்வோட்டம் குறைந்த நடிப்பால் போகப்போக சற்றே சலிப்பு தட்டுகிறது. ஆறுதல் இடையிடையே காமெடி கலாட்டாக்களை ரசிக்க முடிகிறது.
லீலாவாக, பாலின மாற்றம் என்ற ஏடாகூடமான பிரச்சனையில் சிக்கிய பெண்ணாக வர்த்திகா. கேரக்டரின் தன்மையுணர்ந்து நடித்திருக்கிறார்.
எதையும் சீரியஸாக அணுகுகிற அப்பாவாக சேத்தன். நடிப்பு வழக்கம்போல் தரம். மாளவிகா அவினாஷின் நடிப்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
தீபா வெங்கட்டுக்கு கவனம் ஈர்க்கும்படியான கேரக்டர். போதும்பா போதும் என்கிற லெவலில் காமெடி பங்களிப்பு தந்திருக்கிறார் மாகாபா ஆனந்த்.
மாமாவாக முனிஷ்காந்த், தங்கையாக தாஃபியா அபு, நண்பனாக பாலாஜி தியாகராஜன் தயாளன் என இன்னபிறர் கதைக்கு போதுமானதை செய்திருக்கிறார்கள்.
மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவில் காட்சிகளை கலர்ஃபுல்லாக பார்க்க முடிகிறது. அங்கித் மேனன் ‘செப்பு செல’ பாடலை உற்சாக இசையில் வழங்கி, பின்னணி இசையை பரவாயில்லை லெவலில் தந்திருக்கிறார்.
பாலின மாறுதல், ஏலியன் அவதாரம் என்றெல்லாம் கதையை அட்டகாசமான பேண்டஸி டச்சில் உருவாக்கிய அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் புகுந்து விளையாடியிருக்கலாம். 

