விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார் தரணி ராசேந்திரன்.

இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த 1944 ஆம் ஆண்டில், ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டுள்ளது ‘டெத் இரயில்வே’. இந்தியா தனது சொந்த மண்ணில் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அதே வேளையில், இந்திய வீரர்கள் தொலைதூர எல்லைகளில் அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகம் அறியப்படாத இந்த வரலாற்றுப் பக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டெத் இரயில்வே’ திரைப்படம் போர்க்களத்தின் தீவிரத்துடன் உணர்வுப்பூர்வமான காதலையும் இதில் பேசுகிறது.

இயக்குநர் தரணி ராசேந்திரன் பகிர்ந்து கொண்டதாவது, “இரண்டாம் உலகப்போர் தீவிரமடையும் பொழுது ஜப்பான் பர்மா, நாகலாந்தை ஆக்கிரமித்து இந்தியாவை நோக்கி முன்னேறியது. இந்த வரலாற்றை நேரடியாக படமாக்காமல் அந்த துயரத்தை பதிவு செய்ய விரும்பினேன் அதுதான் டெத் இரயில்வே. கதையை எழுதிவிட்டு தான் அதற்கான நடிகர்களை தேர்வு செய்தேன். சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்திலும் அதாவது INA கமாண்டராகவும் , இந்திய சோல்ஜர்களின் தலைவராக சமுத்திரக்கனியும், அசோக் செல்வன் கேமியோ ரோலிலும் நடித்திருக்கின்றனர். சுப்பிரமணியபுரம் படத்திற்கு பிறகு சசிகுமார், சமுத்திரக்கனி நேரடியாக சண்டை போடும் காட்சிகளும் உண்டு.
இந்த படத்தை பக்கா கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம். 1942-44 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த போரையும், போரால் எளியவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இதில் பதிவு செய்திருக்கிறோம்.
படப்பிடிப்புக்கு நாகலாந்தில் அனுமதி கிடைக்கவில்லை. அதனால், நாகர்கோவிலில் செட் போட்டு 90% படமாக்கினோம். மீதி 10% சிஜி, VFX பயன்படுத்தியிருக்கிறோம். பட வேலைகள் முடிய இன்னும் முழுமையாக ஒரு மாதம் ஆகும். அதன் பிறகுதான் வெளியீட்டு தேதி, புரோமோஷன் பணிகளை தொடங்க வேண்டும்” என்றார்.
இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதா பாத்திரத்தில், இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ மற்றும் ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். திறமையான நடிகர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படம், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பின்னணியில் வலுவான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என எதிர்பார்க்கலாம்.
ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கும் இப்படத்தை தரணி ராசேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். சர்தக் கல்யாணி இசையமைக்க, ஏ.சி. சார்லஸ் ராஜ் கூடுதல் இசையமைத்துள்ளார். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். மாலதி நாராயணன் இணை இயக்குநராகவும், வீரமணி கணேசன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், லிவி ஜேம்ஸ் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.
சண்டைப் பயிற்சி மிரட்டல் செல்வா, ஒலி வடிவமைப்பாளர் சரவணன் ராமச்சந்திரன், விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணர் டி.எஸ். ஹரி ஹர சுதீன், ஒலி கலவைப் பணிகளை கே.சி. பூபதி ராஜா, பாடலாசிரியர் நெய்தல், ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீ நிஷா, கலரிஸ்ட் பராஜிதர் ஆகியோர் பணியாற்றுகின்றனர். விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்களாக பி.ஜே. ஆகாஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளனர். குமரன் கே. புகைப்படக் கலைஞராகவும், நாகராஜ் செல்வம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், திருநீலகண்டன் ஜி. தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர்.

