Home பொது பெத்லகேம் குடும்ப யூனிட் சினிமா விமர்சனம்

பெத்லகேம் குடும்ப யூனிட் சினிமா விமர்சனம்

காதலில் வயது வித்தியாசம் இன்பமா? துன்பமா?
விவாதத்திற்குரிய இந்த விஷயத்துக்குள் புகுந்து புறப்படுகிற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்.’
‘பிரேமலு’ படத்திற்குப் பிறகு கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள படம். நடுத்தர வயது ஆணுக்கும், கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே மலரும் காதலும், அந்த காதல் அவர்களுக்குள் உருவாக்குகிற பிரச்சனைகளும் தருகிற உற்சாகமுமாக மனதுக்கு நிறைவு தருகிறது திரைக்கதை.
கதைநாயகியாக மமிதா பைஜூ. சூழ்நிலை காரணமாக தனது வீடு, நண்பர்கள், வாழ்ந்த சூழலை விட்டுவிட்டு புதிய ஊருக்கு புறப்படும்போது முகத்தில் நிரம்பியிருக்கும் சோகம், புதிய சூழலில் தன்னைவிட பல வயது அதிகமுள்ள ஆண் மீது நேசம் கொள்வதில் இருக்கிற படபடப்பு, காதலை சொல்லி முத்தமிடும்போது குதூகலம் என காட்சிக்கு காட்சி நடிப்பில் இருக்கிறது இளமைத் துடிப்பு.
மமிதா காதலைச் சொல்லும் தருணத்தில் மிரள்வதும், அவருக்கும் தனக்குமான வயது வித்தியாசம் தருகிற குழப்பத்தில் தவிப்பதுமாக நடிப்பில் கதாபாத்திரத்திற்குத் தேவையான முதிர்ச்சியை சரியாக கொண்டு வந்திருக்கிறார்.
நிவின் பாலியின் தம்பியாக சங்கீத் பிரதாப் குறும்படம் இயக்குநராக வந்து படம் கலகலப்பூட்டுகிறார். சுரேஷ் கிருஷ்ணா, ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன், வினய் ஃபோர்ட் என இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருப்போரும், கன்னியாஸ்திரியாக வருபவரும் கதையின் போக்கில் கலந்து பயணித்திருக்க இதமான மெல்லிசைப் பாடல்களைத் தந்து ஆர்ப்பாட்டமில்லாத பின்னணி இசையால் காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளார் விஷ்ணு விஜய்.
ஃபீல் குட் உணர்வைத் தரும் திரைக்கதையின் தன்மைக்கு ஏற்ப கேமராவை கேமராவை கையாண்டிருக்கிறார் அஜ்மல் சாபு.
முதல் பாதி சற்றே மெதுவாக நகர, இரண்டாம் பாதி வேகமெடுக்கும் இந்த படத்தின் நீளம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள்.
ஆபாசம், வன்முறை, ரத்தம் என டாக்ஸிக் சமாச்சாரங்கள் ஏதுமில்லாத மென்மையான காதல் கதையில் மூழ்க விரும்புகிறவர்களுக்கு பெத்லகேம் குடும்பத்தைப் பார்க்க தியேட்டருக்கு கிளம்பலாம். கலகலப்பாக சிரித்து ரசித்து திரும்பலாம்.
-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்