Home சினிமா 4 இடியட்ஸ் சினிமா விமர்சனம்

4 இடியட்ஸ் சினிமா விமர்சனம்

கிரைம் திரில்லர், சர்வைவல் திரில்லர் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படியான கதைக்களத்தில், டார்க் காமெடி என்டர்டெயினராக ‘4 இடியட்ஸ்.’
கிங், குயின், ஜாக், ஏஸ் என சீட்டுக்கட்டில் ரம்மி போல் கூட்டணி அமைத்த நான்கு பேர் பெட்டி கேஸ் போடுகிற லெவலில் சில்லறைத் திருட்டுகளில் ஈடுபட்டு நாட்களைக் கடத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் உலகமெல்லாம் கொரோனா பரவ ஊரடங்கில் முடங்குகிறார்கள். திருட வாய்ப்பில்லாமல் வறுமையால் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த நேரமாகப் பார்த்து, ஒரு பங்களாவில் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருகிற, அந்த பணத்தை ஒரேயொரு செக்யூரிட்டி பாதுகாத்து வருகிற தகவல் அவர்களின் ‘காதுகளுக்கு’ கிடைக்கிறது.
உடனடியாக அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க நான்கு பேரும் அந்தப் பங்களாவிற்குள் நுழைகின்றனர். அவர்கள் உள்ளே போனதும் கதவுகள் பூட்டிக் கொள்கிறது. பிறகுதான் அது பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடம் மட்டுமல்ல; மனித உறுப்புகளைத் திருடும் மெடிக்கல் டான் ஒருவரின் சாம்ராஜ்யம் என்பதும், அவர்களால் அங்கிருந்து உயிருடன் வெளியில் போக முடியாது என்பதும் தெரிகிறது.
பணத்தை திருடப் போனவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படியான சூழ்நிலையில் அவர்கள் படும் பாடு விறுவிறுப்பாகவும் காமெடி கலாட்டாக்களுடனுன் கடந்தோட, நான்கு பேரில் யாருடைய உயிருக்கெல்லாம் ஆப்பு, யாரெல்லாம் சேஃபு என்பது கிளைமாக்ஸ்.
டெரரான செக்யூரிட்டியை சமாளிக்க முடியாமல் தவித்துப் போகிற தருணங்களுக்கு உயிரூட்டும்படியிருக்கிறது கிங்காக வருகிற புகழின் பங்களிப்பு. அவரின் திருட்டுக் கூட்டாளிகளாக கும்கி அஸ்வின், திடியன், இந்திரன் ஆகிய மூவரின் நடிப்பும் கவர்கிறது.
கதையில் ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக இழுத்துப் போட்டது போலிருந்தாலும் குறைவான காட்சிகளில் எளிமையான நடிப்பையும் கணிசமான கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார் பிரக்யா நயன்.
மர்ம பங்களாவின் செக்யூரிட்டியாக ரவி மரியா, துப்பாக்கியை வைத்துக் கொண்டு நான்கு பேருக்கு மரணம் பயத்தைக் காட்டுவதும், அதே பயத்தை அவர் வெளிப்படுத்துவதுமாக அதிரிபுதிரியாக நடித்திருக்க, உறுப்புக் கடத்தல் கும்பலின் தலைவனாக வின்சென்ட் அசோகன் தந்திருக்கும் கார்ப்பரேட் வில்லத்தனம் போதுமான அளவில் இருக்கிறது.
சிரிப்பூட்டும் சீன்களுக்கு மிதமான அதிர்வலையிலும், உயிருக்கு ஆபத்தான சூழலில் மாட்டியிருப்பவர்களின் பயம் பதட்டத்துக்கு ஏற்ப அதிரடியாகவும் பின்னணி இசையைத் தந்திருக்கும் சுபாஷ் முனிரத்னம், பாடல்களை பரவாயில்லை ரகத்தில் வழங்கியிருக்கிறார்.
படத்தின் பெரும்பாலான சம்பவங்கள் ஒரே பங்களாவில் நடந்து முடிய, யு. கே. செந்தில் குமாரின் நேர்த்தியான கேமரா கோணங்களால் காட்சிகள் அசத்தலாக அட்டனன்ஸ் போடுவதை பார்க்க முடிகிறது.
லாஜிக் மீறல்களை பொறுத்துக் கொண்டால், படத்திலிருக்கிற சின்னச் சின்ன சுவாரஸ்யங்களை சிரித்து ரசிக்கலாம்!
-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்