Home சினிமா ‘சர்தார் 2’ சினிமா விமர்சனம்

‘சர்தார் 2’ சினிமா விமர்சனம்

கொடூர வில்லனின் தர்பாரை தகர்க்கும் உளவாளிகள். பழகிப் போன ஸ்பை திரில்லரில் ‘சர்தார் 2.’

நாட்டுக்கெதிரான சதியை முறியடிக்க, சதிகாரர்களை கொன்றழிக்க எந்த லெவலுக்கும் இறங்கிப் போராடுகிற, எடுத்துக் கொண்ட மிஷனுக்காக உயிரையும் விட தயாராகிற ரா உளவாளிகள் இரண்டு பேர்.

அவர்கள், ‘டோக்கு’ என்ற உயிரியல் ஆயுதம் மூலம் லட்சக்கணக்கான மக்களை கொல்லத் துடிக்கும் சைக்கோவை அழிப்பதற்கு களமிறங்க, விரியும் காட்சிகள் ஹாலிவுட் படங்களின் மினியேச்சராய் பிரமாண்டம் காட்டுகிறது.

டோக்கு உருவான பின்னணி, அதன் வீரியம், அதை வைத்து மக்களை கொத்துக் கொத்தாக கொல்ல நினைப்பவன் சைக்கோ மனநிலைக்கு மாறிய முன்கதை, அவனுடைய பவர், அவனையும் ஆயுதத்தையும் அழிப்பதற்கான முயற்சி, அழிக்கும் விதம் என 3 மணி நேரம் ஓடி முடிகிறது பி எஸ் மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படம்.

கார்த்தி வயது முதிர்ந்த சர்தார், இளமைத் துடிப்பான அவரது மகன் என இரு வேடங்களில் களமாடுகிறார். இருவரும் உயிரியல் ஆயுதத்தை கண்டுபிடித்து அழிப்பதற்கான முயற்சிகளில் எக்கச்சக்க பரபரப்பு நிரம்பியிருக்கிறது. தோற்றத்தில் வயதுக்கேற்ற வித்தியாசம் கச்சிதம். நடிப்பில் கேரக்டருக்கு பொருத்தமான தேசப்பற்று, மனித உயிர்கள் மீதான நேசம் என எல்லாமும் சரியான விகிதத்தில் வெளிப்படுகிறது. உடம்பை வருத்திக் கொண்டு நடிக்கிற அவசியமும் உண்டு. அப்படியான காட்சிகளில் முழுமையான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தெரிகிறது.

கிட்டத்தட்ட இடைவேளைக்குப் பின் முழுமையாக ஆக்கிரமித்திருப்பது எஸ் ஜே சூர்யாவின் வழக்கமான உடல்மொழியில் மிரட்டலான வில்லத்தனம். அவருக்கான காட்சிகள் நீண்டுகொண்டே போக சலிப்புணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. டாக்டரின் ஆலோசனையில்லாமல் கண்டபடி மெடிக்கல் ஷாப்களில் மருந்து மாத்திரைகள் வாங்கி விழுங்குவதன் பின்னணியில் இருக்கும் ஆபத்துகள் பற்றி அவர் விளக்குவது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பாடம்.

மாளவிகா மோகனன் உளவாளிகள் என்றால் மனதை இரும்பாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என ஹீரோவுக்கு புரிய வைக்கிறார்; அவரும் அப்படியே இயங்குகிறார். இன்னொரு ஹீரோயின் ஆஷிகா ரங்கநாத் மகன் கார்த்திக்குடன் இணைந்து சதித்திட்ட முறியடிப்பில் துணை நிற்கிறார். இரண்டு பேரின் நடிப்பும் நேர்த்தி.

நிழல்கள் ரவி – யோகிபாபு – எஸ் ஜே சூர்யா கூட்டணியில் சற்றே நீளமான காட்சியொன்று படத்தில் உண்டு. படு சீரியஸான பயணத்தில் லேசாக சிரிக்க முடிகிறது.

ஆஷிஷ் வித்யார்த்தி, அஸ்யூத் குமார், ரஜிஷா விஜயன் என ஏகப்பட்ட நடிகர் நடிகைகள், அவர்களுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்கள் என பங்கிட்டிருக்கிறது ஸ்க்ரீன்பிளே.

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையிலிருக்கும் அதிரடியும், காட்சிகளை விஷுவல் விருந்தாக்கியிருக்கும் ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் தரமான ஒளிப்பதிவும், வெறித்தனமான ஆக்சன் காட்சிகளும், பிரமாண்டமான மேக்கிங்கும் படத்தின் பலம். மனம் போன போக்கில் பயணிக்கும் திரைக்கதையும் படத்தின் நீளமும் பலவீனம்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்