JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் திரைப்படம் ‘திக் திக் திக்’ படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
டீசர் வெளியீட்டுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆர்யா ஆகியோர் டீசரை வெளியிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் படத்தின் மீதான கவனம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது.
தற்போது இந்த படத்தின் டீசர் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் டீசரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். டீசருக்கு கிடைத்த டிஜிட்டல் வரவேற்பும், திரையரங்குகளில் நடைபெறும் திரையிடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகள், முன்னணி திரையுலக பிரபலங்களின் ஆதரவு மற்றும் தற்போது திரையரங்குகளில் டீசர் திரையிடப்பட்டு வருவது என ‘திக் திக் திக்’ படத்தின் புரமோஷன் பயணம் சிறப்பான தொடக்கத்தைப் பெற்று இருக்கின்றது.
ஒரே இரவில் நடக்கும் கதை, பரபரப்பான சூழல் மற்றும் த்ரில்லர் கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இப்படத்தின் மூலம் சீனிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ரகு ராஜகோபாலுடன் இணைந்து படத்தின் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முழுக் கதையும் ஒரே இரவில் நடக்கின்றது. சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்புடன், குடும்ப உணர்வுகளையும் இணைத்து, இன்றைய காலகட்டத்துடன் தேவையான சமூக கருத்தையும் படம் பேசுகின்றது.
படத்தில் பாவெல் நவகீதன், ஜெ எஸ் கே சதீஷ்குமார், சாந்தினி தமிழரசன், சான்ட்ரா எமி, பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
‘தங்க மீன்கள்’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ உள்ளிட்ட தரமான, வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்துள்ள ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேசன், இந்த படத்தின் மூலமும் தனது தனித்துவமான கதைகளை தொடர்ந்து வழங்குகின்றது.
‘ஃபயர்’ படத்தைத் தொடர்ந்து ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேசன் தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல் 2’ திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படம் தற்போது திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் வருகிறது.

