சித்து நடிப்பில், நாட்டார் கதையை மையமாக வைத்து முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் ஃப்ரி ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் கதை நாயகன் சித்து பேசும்போது,
“இதே சாலிகிராமத்தில் பல்வேறு சினிமா கம்பெனி அலுவலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். இதே பிரசாத் லேபில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் வந்திருக்கிறேன். நான் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றியிருந்தாலும் இது எனக்கு முதல் படம். இதையே நான் ஒரு சாதனையாகப் பார்க்கிறேன் .அதுவும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது; எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக இயக்குநர் பாலாஜிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
அவர் என்னை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அது ஒரு த்ரில்லர் கதையாக இருந்தது.எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட ’காப் ஸ்டோரி ’ என்று ஒன்று கிடைப்பது அரிதாக இருக்கும் .எனக்கு முதல் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கதையாகக் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது .அதுவும் காவல் துறை சம்பந்தப்பட்ட திரில்லர் கதை என்று அமைந்திருப்பது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும் .நான் கதாநாயகனாக நடிக்கும்போது அதுவும் த்ரில்லர் படத்தில் நடிப்பது பல பரிமாணங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் .அப்படிப்பட்ட படம் முதல் படமாக வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அப்போது நான் கண்டிப்பாக நான் செய்கிறேன் என்றேன். அவர் அப்பொழுது சொன்னார், இது முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கதை என்றெல்லாம் சொன்னார். நான் அதைப் பற்றி எதுவுமே கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தை எப்படி மேலே கொண்டு செல்வது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது .ஒரு முடிந்து போன முடிவைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு வந்திருக்கும் வாய்ப்பை எப்படி நான் பயன்படுத்திக் கொண்டு மேலே முன்னேற வேண்டும் என்பதில் தான் என் கவனமும் இருந்தது. எனவே முடிவைப் பற்றி நான் பேசவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
அவரது படக்குழுவினரைப் பார்த்த பிறகு இந்தப் படம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுலபமாகப் படப்பிடிப்பு இடங்களில் படம் எடுப்பதற்கும் காடு, மலை என்று அலைந்து சிரமமான இடங்களில் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அப்படி சிரமப்பட்டு எடுத்தார்கள்.அந்த இடங்களில் மற்றவர்கள் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது.படக் குழுவினர் நான் நினைத்தது போலவே கடினமாக உழைத்தார்கள்.இந்தப் படத்தில் நிறைய நல்ல நல்ல நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ரித்விகா, தர்ஷிகா மட்டுமல்ல அனுபவமுள்ள மதிப்பிற்குரிய வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது.
வருகிற 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் ஆதரியுங்கள்”என்றார்.
படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,
“ஒரு படத்தைப் பாதிக்கு மேல் எடுத்து முடித்து அப்படியே வைத்து விட்டு பிறகு ஆரம்பிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். மீண்டும் இந்தப் படத்தைத் தொடங்கி முடித்து இன்று நான் உங்கள் முன் நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. அப்படி மூன்று பேருக்கு நான் நன்றி கூற வேண்டும்.ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று நான் தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் எடுக்கும் போது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது சரண் ,கோபால் சார், மற்றும் எனது படக்குழுவினர்.இந்த மூவரும் இல்லை என்றால் இந்தப் படம் எடுத்து இருக்கவே முடியாது.அவர்களுக்கு நான் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தை முக்கால்வாசி எடுத்துவிட்டு மீண்டும் அதே படத்தை மறுபடியும் எடுப்பது என்பது மன ரீதியாக மிகவும் அழுத்தம் தரக்கூடிய தொந்தரவு தரக்கூடிய ஒரு விஷயம். அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது என்பது சிரமமாகத்தான் இருக்கும்.அப்படி இருந்த எனது நெருக்கடியான சூழலில் சித்து சார் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி எதுவும் நினைக்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.கடந்த காலத்தைப் பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லை.அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று வரை சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அது ஒரு பெரிய காரணம்.அதற்கு அவருக்கு மிகவும் நன்றி.
அதேபோல இரண்டாவது முறை ஆரம்பித்தபோது பழையதைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் யாருமே பேசவில்லை; கேட்கவில்லை .இந்தப் படத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் தான் அனைவரது கவனமும் இருந்தது .அதற்கு அனைவருக்கும் நன்றி.அப்படியே படத்தை முடிக்கவும் செய்தோம்.துணை நிற்பவர்கள் சரியாக இருந்தால் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் சரியாக அமையும் என்பதற்கு இந்தப் படமே ஒரு சாட்சி. அவர்களே எனது பாடம்.அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் பெரிய அளவில் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு சென்றோம்.
இந்த படத்திற்காக அனைவரும் சிரமப்பட்டோம். சிரமங்களில் நான் பெரிதாக நினைப்பது என்னவென்றால் தூக்கம் இல்லாமல் உழைப்பது என்பதைத்தான்.மூன்று மணி நேரம் கூடத் தூங்க முடியாமல் சில நேரம் உழைத்து இருக்கிறோம். அப்போது தூக்கம் இல்லாத அந்த உடல் ரீதியான பிரச்சினை எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்தத் தொந்தரவிலிருந்து மீள்வது பெரும் போராட்டமாக இருந்தது.
அதிலிருந்து மீள்வதற்கு நாங்கள் நீண்ட நாள்கள் மிகவும் சிரமப்பட்டோம்.எனது படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா என அனைவருமே நன்றாக நடித்தார்கள் .அதுமட்டுமல்லாமல் அவர்களோடு அனுபவமுள்ள பெரிய நட்சத்திரங்களும் நடித்து இருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி சார் , நிழல்கள் ரவி சார் , ஜெயக்குமார் சார் போன்ற அனுபவம் உள்ள நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பில் இருந்ததால் இன்று வர முடியவில்லை.
மிகவும் முக்கியமான விஷயம் இது ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் படம் என்பதுதான்.டீஸர்,டிரெய்லர் எல்லாம் பார்த்து விட்டு அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் இருவருக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். அது படைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தானே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல. எங்களது மனஸ்தாபங்கள் எல்லாம் பேக் அப் சொல்வதற்குள் காணாமல் போய்விடும்.
அவர் நல்ல திறமைசாலி .அவர் பெரிய இடத்துக்கு வருவார். எனது இதயத்தில் இருந்து இதை நான் கூறுகிறேன்.
இந்தப் படத்தில் ரித்விகா வருவதற்கு முன்பு இந்த படத்தின் தரம் வேறு மாதிரி இருந்தது. வந்த பிறகு அது வேறு மாதிரியான உயரத்துக்குச் சென்றது. முக்கியமாக இந்தப் படத்தில் வரும் நான்கு பாத்திரங்களைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறேன் . பாரி,உமையாள், கனி இன்னொரு பாத்திரம் என இந்த நான்கையும் பிரதானமாக வைத்து நான் உருவாக்கி இருக்கிறேன். ரித்விகா ஏற்றுள்ள பாத்திரம் இந்தப் படத்திற்குப் பிறகு பேசக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரிடம் இதைக் கேட்பார்கள்.இவர்கள் எல்லாம் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிலைக்கு இன்று வந்து இருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். அனைவருக்கும் மிக்க நன்றி. செப்டம்பர் 18ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகிறது. நல்லதொரு திரையரங்க அனுபவமாக நிச்சயமாக இந்தப் படம் இருக்கும் .படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம். நன்றி” என்றார்.