Home பொது சிவாஜி அண்ணாவின் பெயரையும், அவரது குடும்பப் பெருமையையும் காப்பாற்றும் வகையில் தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்திருக்கிறார்!...

சிவாஜி அண்ணாவின் பெயரையும், அவரது குடும்பப் பெருமையையும் காப்பாற்றும் வகையில் தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்திருக்கிறார்! -லெனின் பாண்டியன் பட விழாவில் படத்தின் ஹீரோவுக்கு இசைஞானி இளையராஜா பாராட்டு

அறிமுக டி டி பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ‘லெனின் பாண்டியன்.’

தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

இந்த படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் முன் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.  திரைப் பிரபலங்கள், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அண்ணா எப்போதும் நேரத்தை மிகவும் கடைப்பிடிப்பவர். நான் தினமும் சரியாக 7 மணிக்கு எனது ஸ்டூடியோவிற்கு செல்வேன். ஒருநாள் ஐந்து நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. காரில் இருந்து இறங்கும்போது சிவாஜி அண்ணா நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், “ராசா, நீயுமா லேட்டு?” என்று கேட்டார். இத்தனை ஆண்டுகளாக நேரத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்னை விட சீக்கிரம் வந்து என்னிடமே இப்படிக் கேட்கிறாரே என்று அந்த நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சிவாஜி அண்ணா நடிப்பைப் பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். ஒரு நடிகர் புதிதாக அறிமுகமாகும்போது, “யாருப்பா இது?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இருக்க வேண்டும். அதன்பிறகு அந்த நடிகரைப் பார்த்து, “யாரு இந்த ஆள்?” என்று வியக்கும் அளவுக்கு அவரது நடிப்பு வளர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய கலைஞர் சிவாஜி கணேசன்.

அவருடைய குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தர்ஷனின் நடிப்பை இந்தப் படத்தில் பார்த்தேன். சிவாஜி அண்ணாவின் பெயரையும், அந்த நடிப்பு வம்சாவளியையும் காப்பாற்றும் வகையில் தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய அன்புத் தம்பி தர்ஷன் கணேசன் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். என் தம்பியை பற்றி சொல்ல வேண்டியதில்லை அவரும் நன்றாக நடித்துள்ளார்.

“லெனின் பாண்டியன்” போன்ற ஒரு மாறுபட்ட கதைக்களம் கொண்ட படத்தை உருவாக்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் D.D. பாலச்சந்திரனுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

நடிகர் தர்ஷன் கணேசன் பேசியதாவது:

செப்டம்பர் 12, 2026 என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். “லெனின் பாண்டியன்” படத்தின் விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறு வயது முதலே சிவாஜி சார் படங்களைப் பார்த்தும், அவரது வசனங்களைப் பேசியும், பாடல்களைக் கேட்டும் வளர்ந்தவன் நான். நடிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ளும்போது, நம்மால் நன்றாக செய்ய முடியுமா என்ற ஒரு சுய சந்தேகம் இருந்தது. அதிலிருந்து வெளியே வர கடுமையாக பயிற்சி செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த என் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி உள்ளிட்ட என் குடும்பத்தினருக்கு முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் நண்பர்கள், இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல நண்பர் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கும் அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்திருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் சார், செல்வி மேம், செந்தில் சார், அர்ஜுன் சார் ஆகியோர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிகுந்த நன்றி. சத்யஜோதி குடும்பத்திற்கும் உங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

இது எனக்கு அறிமுக விழா மட்டுமல்ல, இயக்குநர் பாலச்சந்திரன் சாருக்கும் அறிமுக விழா. இந்தக் கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கை வைத்ததற்கு அவருக்கு நன்றி. கங்கை அமரன் அங்கிள், உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரோஜா மேம் உள்ளிட்ட படத்தின் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், எடிட்டர் நாகூரான் சார் என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் குடும்பத்துடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகப் பயணித்து வரும் அனைவரும் இன்று இங்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவாஜி என்ற பெயரைச் சொன்னாலே நீங்கள் காட்டும் அன்பு எனக்கு மிகப்பெரிய பலம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

கங்கை அமரன் பேசியதாவது:

என்  அண்ணனின் ஆசிர்வாதத்தில்   “கோழி கூவுது ” என்ற படத்தை இயக்கி இயக்குநர் ஆனேன். அதன்பிறகு சுமார் 18 படங்களை இயக்கியுள்ளேன். சினிமாவில் இசையமைப்பாளராகவும் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இப்படி சினிமாவில் பல்வேறு பணிகளைச் செய்திருந்தாலும், இப்போது நடிகராக மீண்டும் சத்யஜோதி  தியாகரி வாய்ப்பு தந்தது  எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பை வழங்கிய தியாகு சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, நடிகராக இன்று அவருக்கு அருகில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையில் இதுபோன்ற புதிய அனுபவங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படக்குழுவினருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும். இயக்குநர் பாலச்சந்திரனுக்கு வாழ்த்துகள்.

நடிகை ரோஜா பேசியதாவது:

என்னுடைய முதல் படம் ‘செம்பருத்தி’. இப்போது “லெனின் பாண்டியன்” மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறேன். 30, 35 ஆண்டுகள் நீண்ட பயணம் என்று நீங்கள் சொல்லும்போதுதான், இவ்வளவு நீண்ட பயணத்தை நான் இவ்வளவு எளிதாகக் கடந்து வந்திருக்கிறேனா என்று தோன்றுகிறது. எந்த ஒரு காட்ஃபாதரின் பின்புலமும் இல்லாமல் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் பயணிக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்துக்கு இசையமைத்த இளையராஜா சாரே, என்னுடைய ரீ-என்ட்ரி படத்துக்கும் இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை.

இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு முக்கியக் காரணம் சுப்பு. நாங்கள் நீண்ட கால நண்பர்கள். நான் அரசியலுக்குச் சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தேன். அப்போது சுப்பு இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறினார். இயக்குநர் பாலச்சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து கதை சொன்னபோது, அவர் கதை சொன்ன விதத்திலேயே நான் முழுப் படத்தையும் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும், வசனங்களை எப்படி பேச வேண்டும், உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் என்பது வரை அவர் விவரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் படத்தின் மீதான அவருடைய ஆர்வமும், பார்வையும் என்னை மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது.

சிவாஜி சார் குடும்பத்தின் மூன்று தலைமுறையினருடனும் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. சிவாஜி சார், பிரபு சார் ஆகியோருடன் நடித்துள்ள நான், இப்போது தர்ஷனுடனும் நடித்திருக்கிறேன். அந்தக் குடும்பத்தினர் எப்போதும் என்னை ஒரு குடும்பத்தில் ஒருவரைப் போல அன்பாகவும், ஆதரவாகவும் நடத்துவார்கள். அவர்களுடன் பணியாற்றுவதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது; படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடியும் வரை வீட்டுச் சாப்பாடு கிடைக்கும். கங்கை அமரன் சாருடன் இணைந்து நடித்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு இசையமைத்தும், இயக்கியும் இருக்கும் அவர், இந்தப் படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம். அந்த நிறுவனத்தின் படத்தில் நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். தியாகராஜன் சார், செல்வி மேம், செந்தில் சார், அர்ஜுன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “லெனின் பாண்டியன்” என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். பாரதிராஜா சார் படங்களைப் பார்க்கும்போது நமக்குள் ஏற்படும் உணர்வைப் போல, இந்தப் படத்தைப் பார்த்து வெளியே வரும்போதும் ரசிகர்கள் கதையுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பார்கள்.

தர்ஷன் கணேசன் குறித்து குறிப்பாகச் சொல்ல வேண்டும். சிவாஜி சார் குடும்பத்திலிருந்து வந்தவர் என்ற எந்தவித கர்வமும் இல்லாமல், முதல் படத்தில் நடிக்கும் ஒரு சாதாரண நடிகரைப் போல மிகவும் எளிமையாகப் பழகினார். சக நடிகர்கள் நடிப்பதைப் பார்த்து அதற்கேற்றபடி ரியாக்ட் செய்வது, அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, வெயிலில் படக்குழுவினருடன் இருப்பது என அவர் மிகவும் இயல்பாக இருந்தார். முன்பெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குடும்பம் போன்ற சூழல் இருக்கும். தற்போது அது குறைந்து வரும் நிலையில், “லெனின் பாண்டியன்” படப்பிடிப்பில் மீண்டும் அந்த குடும்ப உணர்வை அனுபவித்தேன். அதனால் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்பதோடு, தர்ஷன் கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்