வெளிநாட்டில் தங்கியிருந்து வேலைக்காக முயற்சி செய்கிறாள் இளம்பெண் ஒலி. வேலை கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவிலிருக்கும் அப்பா அம்மாவை போனில் தொடர்பு கொள்கிறாள். அப்போதுதான், அவர்கள் பிரிந்து வாழ்வது தெரிகிறது.
அதை தாங்கிக் கொள்ள முடியாமல், உடனடியாக அப்பா அம்மாவை பார்ப்பதற்காக, நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்தியா புறப்பட தயாராகிறாள். அவளுடன் அவளது காதலனும் இணைகிறான்.
ஊருக்கு வந்து தந்தையைச் சந்தித்து, ‘அம்மாவை பிரிந்தது ஏன் என கேட்கிறாள்?’ அவர் காரணத்தைச் சொல்கிறார்… அதில் கிரைம் திரில்லருக்கான பரபரப்பு கொஞ்சம் கொஞ்சம் நிரம்பியிருக்க,
பிரிந்த அப்பா அம்மா வாழ்க்கையில் சேர்ந்தார்களா இல்லையா, ஒலியின் காதல் என்னவானது என்பதெல்லாம் மீதிக்கதை…
ஒலியின் அப்பாவாக, நேர்மையான மருத்துவராக குரு சோமசுந்தரம். தான் போஸ்ட்மார்ட்டம் செய்தபின் எழுதிய ரிப்போர்ட்டை மாற்றச் சொல்லி வருகிற மிரட்டல்களுக்கு பணிய மறுப்பதும், பின் பணிவதும், குற்ற உணர்ச்சியில் தவிப்பதுமாக நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.
அநியாயம் நடப்பது தெரிந்தால் போதும்; கொதித்து விடுவார். குரு சோமசுந்தரத்தின் மனைவியாக வருகிற அனுமோலுக்கு அப்படியொரு குணம். அந்த குணத்தை தைரியமாக வெளிப்படுத்துவதாகட்டும், கணவனுடன் நெருக்கம், மகளுடன் பாசம் என மற்ற உணர்வுகளோடு பயணிப்பதாகட்டும் நடிப்பு இயல்பாக இருக்கிறது. தவறு செய்தது கணவனாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க தயாராகும்போது கேரக்டரின் மதிப்பு உயர்கிறது.
ஒலியாக அர்ச்சனா. சுருள் சுருளாக பரந்து விரிந்த கூந்தல் சுமந்து வருபவர், பேச்சிலும் செயலிலும் துறுதுறு சுறுசுறு பார்ட்டியாக நடந்து கொள்கிறார். உணர்வுபூர்வமாக நடிக்கவும் வருகிறது. அர்ச்சனாவின் காதலனாக வந்து போகிற விஜய் விஸ்வா, டூயட் பாடலில் உடல் நோகாமல் ஆடுகிறார். அவருக்கும் அர்ச்சனாவுக்குமான காதல் கெமிஸ்ட்ரி ஓகே ரகமாக இருக்க, வில்லங்கத்தில் சிக்குகிற கதையில் முக்கியமான அந்த இளம் ஜோடியின் கெமிஸ்ட்ரி கவிதை போலிருக்கிறது. அவர்களின் முடிவு பரிதாபம்.
இன்னபிற கேரக்டர்களில் சாய் விக்கி, நயனா சாய், பிபின் குமார் என பொருத்தமான நடிகர் நடிகைகள் இணைந்திருக்க, பின்னணி இசையை ஓகே ரகத்தில் தந்திருக்கும் கே, ‘அழகழகாய் மனம்’, ‘தேன் பொழுதுகளே’ பாடல்களில் இதம் கூட்டியிருக்கிறார். சதீஷ் ஜி’யின் ஒளிப்பதிவில் ரிச்னெஸ் தெரிகிறது.
பாரிஸ் கஃபேயில் புதிதாய் ஏதாவது இருக்கும் என எதிர்பார்த்தால் ‘ஹானர் கில்லிங்’ என்கிற பழகிய வட்டத்துக்குள்ளேயே கதை, திரைக்கதை சுழன்றடிப்பது ஏமாற்றம்.
பாரிஸ் கஃபே – ஆறிய காஃபி!
-சு.கணேஷ்குமார்

