விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கி, அக்டோபர் 1-ம் தேதி வெளியான ‘பத்தா’ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடந்தது.

நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,
“எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது. பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. ஒரு படத்தை எடுத்து வந்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும்.
நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும். மகிழ்ச்சியாக வருவோம். கொண்டாட்டத்துடன் வருவோம். நீங்கள் நின்று, பாராட்டி, கை கொடுத்து, கட்டிப் பிடித்து, நடத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை தங்கள் படம் போல ஆரத்தழுவிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.
உங்களுக்குப் பிடித்து விட்டால் போதும், தூக்கிக் கொண்டு செல்வீர்கள். அது பற்றி யார் என்ன மாதிரியாகப் பேசினாலும், அதற்கு விளக்கம் கொடுப்பீர்கள். அனைத்து சமூக ஊடகங்களிலும் கொண்டு செல்வீர்கள். அப்படி அதை நீங்கள் உங்கள் படத்தைப் போலவே கொண்டாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது, நம் வாழ்க்கை வரம்தான் என்பதை நினைவுபடுத்துகிறது.
இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை. இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள் தானே? ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் உற்றுப் பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார். அதனால் நடிக்க முடியவில்லை.
சீதக்காதி, முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் சார், அமிதாப் சார், மோகன்லால் சார் போன்றவர்கள் நடிக்க வேண்டிய கதை என்றார். ஆனாலும் நான் நடித்தேன். தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட, அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும்.
இங்கு நிறைய நபர்களை அடிப்பது, இந்தக் கூட்டமாக இருப்பது, இதெல்லாம் பெரிய படங்களில் இருப்பவை. ஆனால் மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம் தான் பத்தா. இது உணர்வுகளைச் சொல்கிற படம். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சின்ன பையன் சாய் உடன் நான் சரியாக பேசவில்லை, பழகவில்லை. ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்க வேண்டும். ஒரு சகஜம் ஏற்பட்டு விட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன். அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப் படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது. அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வேன். லிஜோமோலின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. நன்றி. என் சகோதரர்கள் ஹரி, ஜோதி, விஷ்ணு, பாலா, உங்களுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். சாய் அப்யங்கர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தைப் புரிந்துகொண்டு வேலை செய்தார். இப்படி அனைவரும் இந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு பணியாற்றினார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசும்போது,
“இந்த வாய்ப்பு கொடுத்த மூன்று தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. என்னிடம் குறைவாக இருப்பது, அட்லீயிடம் அதிகமாக இருப்பது, அந்த நேர்நிலை எண்ணம்தான். முதலில் சேதுவிடம் கதை சொன்னேன். அவர் நண்பர் என்பதால் ஓகே செய்துவிட மாட்டார். அவருக்குப் பிடித்துப் போனதால் அட்லீயிடம் அழைத்துக் கொண்டு சென்றார். விஜய் சேதுபதியுடன் நான் இணைந்த படங்களில் உள்ள அனுபவத்தில் சொல்கிறேன். அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதை நிரூபித்தவர்.
லிஜோ மோல் மூன்று நாட்களுக்குள் படப்பிடிப்பு என்கிறபோதுதான் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் பெரிய நம்பிக்கை வந்தது. எது நடக்குமோ, அது நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது. அவர் தனது நேர்மையான பங்களிப்பை வழங்கினார். அவர் ஒரு சிறந்த நடிகை. சிறுவன் சாய் குழந்தை குணம் கொண்டவன். அவனை நடிக்க வைக்காமல் இருந்தாலே போதும். அந்தக் குழந்தைத்தன்மை சரியாக வந்தாலே சிறப்பாக அமைந்துவிடும் என்று நினைத்தேன். அப்படித்தான் வந்திருக்கிறது. சித்தாவில் வந்து பாராட்டைப் பெற்ற சிறுமி சஹஸ்ராவும் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தை நம்பினார்கள். அது படத்தில் பொறுப்பாக மாறி வெளிப்பட்டது. அதன் விளைவு சரியாக அமைந்திருக்கிறது. முத்துராஜ் என்ற அனுபவசாலி, அந்த 80s களின் உலகத்தைக் கொண்டு வருவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இப்படியே திறமையான ஒளிப்பதிவாளர், அற்புதமான எடிட்டர் என அனைவருக்கும் பங்கு உண்டு.
சாய் அப்யங்கர் முதலில் இசையமைக்க எனக்கு ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால் அந்தப் பயத்தை நீக்கி, நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு பின்னணி இசை அமைக்க வைத்தேன். அவர் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு சென்றார். அதுமட்டுமல்ல, காஸ்டியூமர் ஸ்ருதி மஞ்சரி வயதில் இளையவராக இருந்தாலும், 80s களின் உடைகளை எல்லாம் சரியாகக் கொண்டு வந்தார். டிசைனர் கோபி பிரமாதமான திறமைசாலி.
இப்படி இந்தப் படத்திற்குப் பின்னால் உழைத்தவர்கள் நிறைய பேர். அனைவருக்கும் நன்றி” என்றார்.

