‘ஆசை தவறில்லை, பேராசை வேண்டாமே.’ காமெடி கலாட்டாக்களோடு கருத்து சொல்கிற ‘ஆல் பாஸ்.’
நிஜ அண்ணன் தம்பிகளின் குடும்பங்கள் கூட அத்தனை பாசப்பிணைப்புடன் இருக்க மாட்டார்கள். அந்தளவு நெருக்கமான நட்புறவோடு, சிறியளவிலான வாடகை வீடுகளில் வசிக்கிற மூன்று ஏழை எளிய குடும்பங்கள். அந்த குடும்பத்தினரின் மகன்கள் மூன்று பேர். அவர்கள் பார்வையில் 5 கோடி ரூபாய் படுகிறது. அதை அப்படியே எடுத்து வந்து வீட்டில் கொடுக்க, அந்த பணத்தை மூன்று குடும்பங்களும் பங்கிட்டுக் கொள்ள, அதை வைத்து தங்கள் கடன்களைத் தீர்த்து, நகை, வீடு என வாங்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள்.
முடிவெடுத்ததை செயல்படுத்த முடிந்ததா, அந்த பணம் யாருடையது, எங்கிருந்து கிடைத்தது, எப்படி கிடைத்தது என்பதெல்லாம் மீதிக் கதை… இயக்கம் மைதீன்
குடும்பத் தலைவர்களாக ஜெயபிரகாஷ், சுப்ரமணிய சிவா, பிரசன்னா பாலசந்தர். குடும்பத் தலைவிகளாக வினோதினி, செந்திகுமாரி, மோகனா. கட்டுக்கட்டாய் பணத்தைப் பார்த்ததும், அதை அப்படியே இருந்த இடத்தில் திரும்ப வைக்கச் சொல்லும் நேர்மையாளராக ஜெயபிரகாஷ், கிடைத்த பணத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என யோசிக்கும் மற்றவர்கள். ‘நாம அந்த இடத்துல இருந்தாலும் அப்படித்தானே யோசிப்போம், முடிவெடுப்போம்’ என்பது போலிருக்கின்றன அவர்களின் நடவடிக்கைகள். பணம் வந்தபின் அவர்களுக்குள் இருந்த ஒற்றுமை சிதைவது, சந்தோஷம் பறிபோவது என நீளும் காட்சிகளில் ஒவ்வொருவரின் நடிப்பும் அத்தனை இயல்பு.
காணாமல் போன தன் பணத்தைத் தேடி, சம்பந்தப்பட்ட மூன்று குடும்பங்கள் குடியிருக்கும் வளாகத்திலேயே வந்து ரகசியமாய் தங்குகிற எம் எல் ஏ’வாக சரத் லோகிதஸ்வா. ஒரே இடத்தில் இருந்துகொண்டு நடந்தும் உட்கார்ந்தும் டயலாக் டெலிவரியால் வில்லத்தனம் காட்டுகிறார்.
கவுன்சிலராக வருகிற விஜய் சத்யா எம் ஏல் ஏ’வின் சந்தேகத்துக்கு ஆளாவதும், அதனால் அடி உதை படுவதும் சீரியஸாக இருக்க, அடுத்தடுத்து அவருக்கு நேர்கிற பிரச்சனைகள் கலகலப்புக்கு உதவுகிறது.
மகன்களாக வருகிற சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் துடிப்பாக நடித்திருக்க, அவர்களை வைத்து படிப்புக்கு சாதியும் பணமும் எப்படியெல்லாம் தடையாக இருக்கிறது என்பதை தொட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
கதையின் நாயகன் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ஆட்டோ ஓட்டுநராக, நேர்மையானவராக சில காட்சிகளில் வருகிறார். அவருக்கும் நாயகி ஜனனிக்குமான காதல், மோதல் கெமிஸ்ட்ரி கதையின் சில தருணங்களைத் தாங்கிப் பிடிக்கிறது.


