மாயாஜாலம், காதல், காமெடி என பயணிக்கிற ஜாலியான படைப்பு.
பேய் பங்களாவில் மனிதர்கள் சிக்கிக் கொள்வது காலங்காலமாக ஹாரர் சப்ஜெக்ட்டுக்கான டெம்ப்ளேட். இந்த ஃபேண்டஸி ஸ்டோரியில் விசித்திரமான சயின்டிஸ்ட் ஒருவரால் விநோதமாக வடிவமைக்கப்பட்ட வீட்டுக்குள், இரு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பேர் சிக்கிக் கொள்கிறார்கள்.
அங்கு அவர்களுக்கு என்ன நடக்கிறது, அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதெல்லாம் எக்குத்தப்பாக சுற்றிச்சுழலும் டிரோன்ஸின் சுவாரஸ்யமான எபிசோடுகள். இயக்கம் ராகவ் மிர்தாத்
தூக்கத்தில் நடக்கிற வியாதி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த கதையின் நாயகனுக்கு தூக்கத்தில் ஓடுகிற, ஆடுகிற வியாதி. அப்படி ஓடி ஆடுகிறவர் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து, பளீர் நிறத்தில், அழகில் மயங்கிக் கிறங்கி காதலில் விழுகிறார். அவளும் காதலிக்கிறாள். ஆனால், அவளை திருமணம் செய்து கொண்டு வாழ்வது சாத்தியமில்லை என்றாகி விடுகிறது. அத்தோடு நிற்காமல் ஒரு சூனியக்காரியின் பிடியிலும் சிக்குகிறார். அப்படியொரு கேரக்டரை ஏற்றிருக்கிற ‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம் காதலால் உருவாகும் குதூகலத்தை, சூனியக்காரியிடம் மாட்டிக் கொண்டு படும் பாட்டை, தனது நீண்ட கால தோழியின் உணர்வைப் புரிந்து வருந்துவதில் குறையில்லாத நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
புஸுபுஸு கன்னங்களும் கன்னத்தில் விழும் குழியுமாக சித்தி இத்னானி அத்தனை அழகு. அவரும் டிராவிட் செல்வமும் அறிமுகமாகும் காட்சி கவிதையாய் உற்சாகமூட்ட, இருவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி போதுமான அளவில் இருக்கிறது.
கதையோட்டத்தின் சீரியஸான பக்கங்களைத் தாங்கிப் பிடிக்கிற கனமான கடமையை அட்டகாசமாக செய்துள்ளார் அஞ்சலி நாயர். அவரது ‘கருப்பட்டி’ நிறத்தை வைத்து போகிற போக்கில் பேசியிருக்கும் விஷயம் உருப்படியானது.
தனது ஏடாகூடமான அறிவியல் மூளையைப் பயன்படுத்தி ‘பிளாக் ஹோல்’ என்ற படு இன்ட்ரஸ்டிங்கான உலகை உருவாக்கி அதனுள் வசிக்கிறவராக குரேசி. டிரோன்ஸை அல்லக்கை போல் பயன்படுத்துவதிலிருந்து தரைக்கு சம்பந்தமேயில்லாத படிக்கட்டில் ஏறி பாத்ரூமுக்கு போவதுவரை அவரது அலப்பரை அட்டகாசம்.
தான் ஒருவரை காதலிப்பதாக சொன்னால் அவருக்கு அப்போதே ஆயுள் முடிந்து விடும் என்கிற பிரச்சனையைச் சுமந்து நாட்களை கடத்துகிற காவல்துறை அதிகாரியாக ‘சினிமாவாலா’ சதீஷ். அவருக்கிருக்கும் பிரச்சனையை கிளைமாக்ஸில் பயன்படுத்தியிருக்கும் விதம் கவர்கிறது.
சூனியக்காரியாக கெட்டப்பிலும் சற்றே மிரட்டலான நடிப்பிலும் கவனம் பெறுகிறார் தேவதர்ஷினி. டிராவிட் செல்வம், அஞ்சலியோடு விநோத வீட்டில் அவதிப்படும் இன்னொரு நபராக ஆர் ஜே தீபக் உள்ளிட்டோரின் பங்களிப்பு கச்சிதம்.
ஹரி எஸ்.ஆர். இசையில் ‘அஸ்கு மச்சா’, ‘டெரர் எரர்’ பாடல்களில் துள்ளல் அதிகம். பின்னணி இசை கதையோட்டத்துக்கு எனர்ஜியை அள்ளிக் கொடுத்திருக்கிறது.
விசித்திர உலகை கட்டமைத்த கலை இயக்குநரும், அதில் நடக்கும் சம்பவங்களை நேர்த்தியான கோணங்களில் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவனும் தனியாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.
லாஜிக் பார்ப்பதை தவிர்த்து விட்டால், கமர்ஷியல் என்டர்டெயினருக்கான அத்தனை விஷயங்களும் கலந்து கட்டியிருக்கிற இந்தப்படம் வீக் என்ட் டைம்பாஸுக்கு நல்ல சாய்ஸ்!
-சு.கணேஷ்குமார்
–

