Home விமர்சனம் பருந்து சினிமா விமர்சனம்

பருந்து சினிமா விமர்சனம்

‘காதலிக்கலாம் தப்பில்ல; ஆனா அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு; நல்லது கெட்டது பத்தியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு.’

ஆர்வக்கோளாறு காதலர்களுக்கு அட்வைஸை அள்ளித் தருகிற படம்.

அந்த, இன்னும் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத பெண் காதலனுடன் ஊரை விட்டு ஓடிப் போகிறாள். மானம் பறிபோய்விட்டதாக கருதி, கொதித்துக் கொந்தளிக்கிறது சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பம். பெண்ணின் அப்பா தன் பெண்ணை தேடிக் கண்டுபிடிக்க ஊர் தலைவரின் உதவியை நாடுகிறார். இன்னொரு பக்கம் தாய்மாமனும் பெண்ணைத் தேடும் முயற்சியில் இறங்குகிறார்.

ஊர்த் தலைவரும் தாய்மாமனும் அடிதடி, ரவுடியிஸம் என எதற்கும் தயாராக இருப்பவர்கள். இந்த விவகாரத்தில் போலீஸும் நுழைகிறது.

எல்லோருமாக சேர்ந்து ஓடிப் போன காதல் ஜோடியை எப்படி தேடிக் கண்டுபிடிக்கிறார்கள், அவர்களை என்ன செய்கிறார்கள் என்பது மீதிக்கதை…

இந்த படத்தை தயாரித்து இயக்கியிருக்கிற அழகுமலை ஊர்த் தலைவராக வருகிறார். தன் தம்பியுடன் சேர்ந்து பெண்ணைத் தேடி காரில் ஊர் ஊராக அலைகிறார். அதட்டல் உருட்டலில் குறைவில்லை. அக்கறையாகவும் நடந்து கொள்கிறார்.

அவருக்கு தம்பியாக வருகிறவருக்கு கிராமத்து சப்ஜெக்ட்களில் ஹீரோவாக நடிப்பதற்கான களையான முகமும் மற்ற தகுதிகளும் இருக்கிறது. அவரது அடிதடி குணமும் அதை காதலர்களைத் தேடுவதற்கு பயன்படுத்தும் விதமும் இந்த கதைக்கு இது போதும் என்கிற அளவில் இருக்கிறது.

அவரது காதலியாக வருகிற ஷர்மிஷா களையான முகத்தோடும், வளைவு நெளிவுகளில் இளைமை ததும்பும் செழுமையோடும் வருகிறார். சிரிப்பால் அழகு கூடும் அவர், காதலரின் ரவுடித்தனத்தை வெறுப்பவராகவும், காதலர்களைத் தேடுவதில் அவருக்கு தனது காவல்துறை அதிகாரி பதவியைப் பயன்படுத்தி ஒத்துழைப்பவராகவும் எளிய பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார்.

இயக்குநர் மாரிமுத்துவுக்கு, மகள் ஓடிப் போனதால் குடும்ப மானம் போய்விட்டதாக எகிறிக்குதிக்கிற வேலை. மற்றபடி, அவரது மகளை ஏகப்பட்ட பேர் தேடி ஓடிக் கொண்டிருக்கிறபோது எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.

‘வெங்காயத்த தூக்குடா தக்காளி போட்டு வதக்கிடலாம்’ என மிரட்டுகிற தாய் மாமனாக மன்சூர் அலிகான். வழக்கமான திமிர், வழக்கமான தெனாவட்டு, வழக்கமான உடல்மொழி, வழக்கமான டயலாக் டெலிவரி. ஆனாலும் போரடிக்கவில்லை. வழக்கறிஞராக ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து கெத்து காட்டுகிறார் இயக்குநர் பேரரசு.

காதல் ஜோடி ஊரைவிட்டு போவதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து, அதனால் சிக்கல்களை சந்திப்பவராக சென்றாயனின் ‘நானும் ரவுடிதான்’ ரக எபிசோடுகள் ரசிக்கத்தக்க ரகளை. அலட்டல் கவுன்சிலராக வந்து மன்சூர் அலிகானிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிற அப்புக்குட்டியும் கலகலப்புக்கு உதவுகிறார்.

இளம் காதலனாக வி ஆர் நாயக்கின் நடிப்பும் அவரது பள்ளிப்பருவ காதலியாக வருகிற பெண்ணின் பயந்த சுபாவ ஃபெர்பாமென்ஸும் கச்சிதம்.

ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் ‘தெக்கு பக்கக் காத்து…’, ‘ஏ வான்முகிலே கார்முகிலே’ பாடல்கள் இதமூட்டுகின்றன. கங்கை அமரன் குரலில் கடந்தோடும் ‘காதல் பருவம்’ பாடல் அதிகம் கவர்கிறது. பின்னணி இசையில் அதிரடி ஆர்ப்பாட்டம் தூக்கல்.

காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவில் மதுரையின் பல பகுதிகளையும் சுற்று வட்ட ஏரியாக்களையும் விதவிதமாக சுற்றிப் பார்க்க முடிகிறது.

காதலர்கள் ஊரை விட்டு ஓடிப்போவதும், சம்பந்தப்பட்ட வீட்டார் அவர்களை வெறிபிடித்து தேடுவதும் படத்தின் ரெகுலர் டெம்ப்ளேட் சமாச்சாரங்கள். சாதிவெறி, வெட்டுக்குத்து, ஆணவக் கொலை என ரத்தச்சகதியில்லாத, யூகிக்க முடியாத, வித்தியாசமான கிளைமாக்ஸ் படத்தின் தனித்துவம்.

பருந்து – காமெடியும் கருத்தும் கலந்த விருந்து!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்