Home பொது சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் விமர்சனம்

சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் விமர்சனம்

சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை; வலுவாக இருந்தால் போதும். சட்டத்தை விருப்பப்படி திசை திருப்பலாம்; சம்பந்தப்பட்டோர் எதிர்பார்க்கிற நீதியைப் பெற்று விடலாம்.

இந்த விஷயத்தை அடித்தளமாக கொண்டு உருவாகியிருக்கிற ‘சட்டமும் நீதியும் 2.’

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறார். அவரை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நான்கு போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். அந்த நான்கு பேரும் தாங்கள் கொலை செய்யவில்லை என உறுதியாக சொல்ல, அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து மீட்க களமிறங்குகிறார் எளிமையான வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி.

இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி சந்திரா பிரபலமான லாயர். அவர், நடந்தது கொலைதான்; கொலை செய்தது அந்த நான்கு போலீஸாரும்தான் என நம்புகிறார். கணவரைக் கொன்றவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை உறுதியாக கொண்டு நீதிமன்றத்தில் நுழைகிறார்.

எளிமையான வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி – பலமான வழக்கறிஞர் சந்திரா. வழக்கு விவாதங்கள் சூடு பிடிக்கிறது. சட்டமும் நீதியும் யார் பக்கம் என்பதும், நடந்தது கொலையா அல்லது தற்கொலையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் பாலாஜி செல்வராஜ்

சுந்தரமூர்த்தியாக சரவணன். கடந்த சீஸனில் நோட்டரி பப்ளிக்காக இருந்து போராடியவருக்கு இந்த சீசனில் பெரியளவிலான குற்றப் பின்னணி வழக்கை பிரித்து மேய வேண்டிய வேலை. எடுத்துக் கொண்ட வழக்கில் ஜெயிப்பதற்காக ஆதாரங்களைத் தோண்டித் துருவி கோர்ட்டில் சமர்ப்பிப்பதாகட்டும், எதிர் தரப்பு வழக்கறிஞர் எத்தனை திறமையாக வாதாடினாலும் அதை தகுந்த ஆதாரங்களுடன் எதிர்கொள்வதாகட்டும், கஷ்ட சூழ்நிலையில் வசிக்கிறபோதும் லஞ்சத்துக்கு விலை போகாமலிருப்பதாகட்டும் கிளைமாக்ஸில் குற்றவுணர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளாவதாகட்டும் நடிப்பு தரம்.

சந்திராவாக வரலெஷ்மி சரத்குமார். கணவனை கொன்றவர்களை பழி வாங்க வேண்டும் என்ற வெறியை எப்படி வேண்டுமானாலும் காண்பிக்கலாம் என்ற சுதந்திரத்தைக் கொடுத்திருந்தால் தாரை தப்பட்டை கிழிந்து தொங்கியிருக்கும். மெர்சலாக்கியிருப்போம். அதற்கு வாய்ப்பில்லை. கோபமோ வெறியோ எதுவானாலும் கோர்ட்டில் வழக்கறிஞராக நின்று காண்பிக்க வேண்டும். கம்பீரம் குறையாமல் காண்பித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக பிரேம், சப் இன்ஸ்பெக்டராக கவிதா பாரதி, ஆறுபாலா உள்ளிட்டோர் போலீஸ் என்றாலே மோசமானவர்கள் என்பதற்கு இலக்கணமாக வலம் வருகிறார்கள்.

கொலை வழக்கு சிறப்பு விசாரணை அதிகாரியாக ஷிவின் கெத்து காட்டுகிறார். மகனை விபத்தில் பறி கொடுத்த வேதனையை வெளிப்படுத்தும் விதத்தில் கவனம் பெறுகிறார் கொலைக் குற்றம் சுமத்தப்படும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக வருகிற கல்லூரி வினோத்.

சரவணனிடம் பயிற்சி பெறும் ஜூனியர் லாயராக லாவண்யாவின் நடிப்பு துடிப்பு. பிரியங்கா ரோபோஷங்கர், அபர்ணா சுந்தர்ராமன் உள்ளிட்ட இன்னபிறரின் பங்களிப்பு நிறைவு.

காரசாரமான வாதங்கள், கதாபாத்திரங்களின் முகபாவங்கள், அடிக்கடி க்ளோஸப் என கேமரா கோணங்களை கச்சிதமாக கையாண்டிருக்கிறார் எஸ். கோகுலகிருஷ்ணன்.விபின் பாஸ்கரின் பின்னணி இசை பரபரப்பான திரைக்கதைக்குத் தேவையான விறுவிறுப்பைத் தருகிறது.

ஒரு கொலையும் அதன் பின்னணியும் என்ற ஒன்லைனை வைத்துக் கொண்டு கிரைம் திரில்லர், இஸ்வெஸ்டிகேடிவ் திரில்லர், ஹாரர் திரில்லர் என்றெல்லாம் இறங்கினால் திரைக்கதையில் எப்படி வேண்டுமானாலும் பரபரப்புத் தீ பற்ற வைக்கலாம். அதே ஒன்லைனை எடுத்துக் கொண்டு கோர்ட்ரூம் டிராமாவாக உருவாக்கும்போது ஆடியன்ஸ் அலுப்பு சலிப்பு மூடுக்கு போக வாய்ப்பு அதிகம். அந்த வாய்ப்பைத் தராது என்பது இந்த தொடரின் ஸ்பெஷாலிடி.

-சு.கணேஷ்குமார்

 

REVIEW OVERVIEW
சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் விமர்சனம் https://www.startcutaction.in/s-500/
Previous articleதெய்வீகம், மர்மம், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பு; ஆதி சாய்குமார் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகும் ‘ஆதி ருத்ரா.’ 
s-500சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை; வலுவாக இருந்தால் போதும். சட்டத்தை விருப்பப்படி திசை திருப்பலாம்; சம்பந்தப்பட்டோர் எதிர்பார்க்கிற நீதியைப் பெற்று விடலாம். இந்த விஷயத்தை அடித்தளமாக கொண்டு உருவாகியிருக்கிற 'சட்டமும் நீதியும் 2.' போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறார். அவரை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நான்கு போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். அந்த நான்கு பேரும் தாங்கள் கொலை செய்யவில்லை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்