காந்தாரா திரைப்படத்திற்குப் பிறகு தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமாக ‘ஆதி ருத்ரா’ உருவாகவுள்ளது. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Trishul Entertainments நிறுவனம் தயாரிக்கிறது.
Trishul Entertainments நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G ருத்ரப்பா தயாரிக்கிறார். ‘டண்டுபால்யா’, ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள இவர், இயக்குநர் நவரசன் எழுதி இயக்கும் இப்படத்தைப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில் தெய்வீக மர்மங்களையும், ஆன்மிகம் மற்றும் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்மம், பரபரப்பு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் என ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது.
‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’, தமிழில் வெளியான ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். A.J. ஷெட்டி ஒளிப்பதிவுப் பணிகளைக் கவனிக்கிறார்.
தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
கதையின் முக்கிய அம்சங்கள் மற்றும் திருப்பங்கள் குறித்த தகவல்களைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. தெய்வீக மர்மத்தை மையமாகக் கொண்ட இந்தப் பான் இந்திய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
‘ஆதி ருத்ரா’ – ஐந்து மொழிகள், ஒரே பிரம்மாண்டத் திரை அனுபவம்!

