Home சினிமா எனிமி ஆப் தி ஸ்மக்ளர் சினிமா விமர்சனம்

எனிமி ஆப் தி ஸ்மக்ளர் சினிமா விமர்சனம்

ஹெராயின் கடத்தல் பின்னணியில் பேராசையும் துரோகமும் ஆடும் ஆடுபுலி ஆட்டமாக ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்.’

இளைஞர்கள் இரண்டு பேர் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும், கடல் வழியாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் தாதா ஒருவரிடம் வேலைக்குச் சேர்கிறார்கள். அந்த தாதாவையும் அவரது நெட்வொர்க்கையம் கண்டுபிடித்து முடக்கவும் அழிக்கவும் கஸ்டம்ஸ் அதிகாரியொருவர் களமிறங்குகிறார். அவரிடம் தாதாவும் அந்த இரண்டு இளைஞர்களும் சிக்க, அவர்களின் நிலைமை என்னவாகிறது என்பது மீதிக்கதை…

நண்பனின் மூளையைப் பயன்படுத்தி ரிஸ்க்கான கடத்தலில் பரபரப்பாக செயல்படுவதாகட்டும், தனது பாஸை மீறி 500 கோடி மதிப்புள்ள போதைப் பொருளைக் கடத்த ஸ்கெட்ச் போடுவதாகட்டும், தனக்கு பதிலாக தன் காதல் மனைவி கைதான சூழலில் கலங்கித் தவிப்பதாகட்டும் இளைஞர்கள் இருவரில் ஒருவராக வருகிற சரணின் நடிப்பு துடிப்பாக இருக்கிறது.

சரணின் நண்பனாக பாலசரவணன். வழக்கமான காமெடி கலாட்டாக்களில் ஈடுபட வாய்ப்பில்லாத கேரக்டர். கடத்தல் விவகாரத்தில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தாதாவிடம் சிக்கி அடிபட்டு மிதிபடுவது வரை சீரீயஸான காட்சிகளில் தந்திருப்பது சின்சியரான பங்களிப்பு.

கடத்தல் தாதாக்களாக ஜே.டி. சக்ரவர்த்தி, லால் இருவரும் கார்ப்பரேட் வில்லத்தனத்தை அலட்டலாக செய்திருக்க, படத்தை இயக்கியிருக்கிற சமயமுரளி நேர்மையான கஸ்டம்ஸ் அதிகாரியாக கம்பீரம் காட்டி ஆக்சன் அதகளத்திலும் ஈடுபடுகிறார்.
ஜாபர் சாதிக், காளி வெங்கட் உள்ளிட்டோர் கேரக்டர்களின் தன்மையுணர்ந்து பங்களித்திருக்கிறார்கள். உணர்வுப்பூர்வமான கேரக்டரில் கவனம் பெறுகிறார் ராதிகா சரத்குமார்.
ஒல்லிப்பிச்சான் உடம்பும் களையான முகமுமாய் ஷிமேகா. நல்லவனா கெட்டவனா என்ற குழப்பத்துடன் ஹீரோவை காதலிப்பது, அதே குழப்பத்துடன் கல்யாணம் செய்து கொள்வது, கணவன் தவறான வேலை செய்பவன் என தெரிந்தபின் அதிர்வது தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.
கதையோட்டத்தின் விறுவிறுப்புக்கு போதுமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் இயக்குநர் சமயமுரளி. ‘தங்கம் தங்கம் நான் சொக்கத் தங்கம்’ பாடல் சாம் டேனியல் இசையில் கிறக்கம் தர, பாடலுக்கான ஆட்டத்தில் கிளுகிளுப்பூட்டுகிறார் சினேகா குப்தா.
கடலோரப் பகுதிகள், ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் நிரம்பியிருக்கும் துறைமுகம் என பல பகுதிகளில் பாய்ந்து பரவி காட்சிகளை பிரமாண்டமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் கா வின் பாஸ்கர்.
போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் பல படங்களைப் பார்த்துள்ள நமக்கு, இந்த படத்தின் கஸ்டம்ஸ் துறை சார்ந்த காட்சிகளில் இருக்கிற டீடெய்ல்ஸ் நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். காரணம்,  இந்த படத்தை இயக்கியிருக்கும் சமயமுரளி கஸ்டம்ஸ் துறையில் உயரதிகாரியாக பணியாற்றிய அனுபவமுள்ளவர். திரைக்கதையை வித்தியாசமாக, வலுவாக உருவாக்க அந்த அனுபவம் அவ்வளவாக கை கொடுக்கவில்லை.
எனிமி ஆப் தி ஸ்மக்ளர் – போதை பத்தல!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்