அஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள மராத்தி மொழித் திரைப்படம்.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஆனந்த் – சுமன் என்கிற புதுமணத் தம்பதிக்கு, அவர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள பிரச்சனை நீங்குவதற்காக ‘கோந்தல்’ என்கிற பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
தனக்கு நடந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் மன உளைச்சலில் இருக்கும் சுமன், தனது காதலனுடன் இணைவதற்காக கோந்தல் சடங்கு நடக்கும் இரவிலேயே தன் கணவனைக் கொல்லத் திட்டமிடுகிறாள். அதற்காகத் தன் மீது ஈர்ப்புடன் இருக்கிற ஊர்த் தலைவரின் மகனைப் பயன்படுத்துகிறாள்.
அவளது திட்டம் நிறைவேறியதா, கடவுளை அழைப்பதற்காக நடத்தும் கோந்தல் வழிபாட்டின் விளைவாக நடந்தது என்ன என்பதே மீதிக்கதை. இயக்கம் சந்தோஷ் தவாகர்
தன் விருப்பப்படி வாழ முடியாத சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிற, தான் நினைத்ததை சாதிக்க கொலை வரை செய்யத் துணிகிற பெண்மணி சுமனாக இஷிதா தேஷ்முக்கின் நடிப்பு அசத்தல் ரகம்.
அப்பாவி கணவன், பாட்டியின் மூலம் உண்மைகளை அறிந்த பின் வெறித்தனம் என தன் பங்களிப்பை கச்சிதமாகச் செய்திருக்கிறார் யோகேஷ் சோஹோனி.
அதிகாரத் திமிரில் மிதக்கிற ஊர்த் தலைவராக சுரேஷ் விஸ்வகர்மா, அவரது மகனாக முறுக்கு மீசையுடன் துடிப்பாக வலம் வருகிற நிஷாத் போயிர் என இன்னபிறரும் கவனம் பெறுகிறார்கள்.
குடும்பத்தின் பெரியவராக கிஷோர் கடம். அமைதியாக இருந்தபடியே எதிர்பார்க்காத விஷயங்களைச் செய்து அதிர வைக்கிறார். கூத்துக் கலைஞர்கள் ஒரு கட்டம் வரை ரசிக்க வைக்கிறார்கள்.
இருளடர்ந்த இரவு, வழிபாடு, ஆடல் பாடல் கேலி கிண்டல் நிரம்பிய கூத்து, நாயகியின் சதித்திட்டம் அரங்கேறுதல் என நீளும் காட்சிகளுக்கு இளையராஜாவின் பின்னணி இசை பொருத்தம். பாடல்களும் கவர்கின்றன.
காட்சிகள் மிரட்சியான உணர்வு தருவதற்கு ஒளிப்பதிவாளர் அமலேந்த் சவுத்ரிக்கு பெரும் பங்குண்டு. ஒளிப்பதிவுக்கு நிஜ இருட்டையும் நெருப்பு வெளிச்சத்தையும் மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள் என்பது முக்கியச் செய்தி. ஆஷிஷ் மத்ரேவின் படத்தொகுப்பு செம ஷார்ப்.
மராத்தி மக்களின் நாட்டுப்புறக் கலாச்சாரம், ஆன்மிகம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றையும் கலந்துகட்டி விறுவிறுப்பான திரில்லர் அனுபவம் தருகிற இந்த படம், வித்தியாசமான படைப்புகளை விரும்புகிறவர்கள் தவறவிடக் கூடாத படைப்பு. தமிழ் டப்பிங்கும் நிறைவு.
-சு.கணேஷ்குமார் 

