Home பொது ரத்னகுமார் இயக்கும் ‘மேயாத மான் 2’ படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது!

ரத்னகுமார் இயக்கும் ‘மேயாத மான் 2’ படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது!

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மேயாத மான்’. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி கிட்டதட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மேயாத மான் 2’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.
இது குறித்து இயக்குநர் ரத்ன குமார் கூறும் போது, ‘மேயாத மான் 2’ குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. ‘மேயாத மான்’ வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையில் ‘ஆடை’, ‘குலுகுலு’, ’29’ ஆகிய திரைப்படங்களை இயக்கியும் எழுத்தாளராக லோகேஷ் உடன் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றினேன்.
எனினும் நான் எங்கு சென்றாலும் பலர் என்னிடம் அவர்களுக்கு ‘மேயாத மான்’ மிகவும் பிடித்த திரைப்படம் என கூறுகிறார்கள். மேலும் சிலர் எப்போது அந்த மாதிரி ஒரு படம் அல்லது ‘மேயாத மான்‌ 2’ செய்வீர்கள் என்று கேட்கின்றனர். ஆனால் அந்த சமயங்களில் எனக்கு கதையாக ஒன்றும் தோன்றவில்லை. செய்வதையே மீண்டும் செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது.
’29’ வெளியான பிறகு பலர் படத்தில் இருந்ததை போன்ற சம்பவங்கள் தங்கள் வாழ்க்கையிலும் நடந்ததாக கூறினர். இதுதவிர படம் குறித்து எனக்கு கிடைத்த பல்வேறு தகவல்களில் இருந்து எனக்கு ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. அது தான்  “ஏன் ‘மேயாத மான் 2’ பண்ணக் கூடாது” என்று என் ஆர்வத்தை தூண்டியது.
பிறகு இதுகுறித்து பணிகளை தொடங்கியதும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தெரியாத வகையில் கதைக்களம் மிக புதிதாக உருவானது.
அந்தப் படம் இசை மற்றும் பாடல்கள் கலந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த மாதிரி இந்தப் படமும் இசை ரீதியாக பேசப்படும் வகையில் இருக்கும்.
இந்தப் படத்தில் வைபவ் அதே மூடில் நடிக்கிறார், பிரியா பவானி ஷங்கர் மதுவாக நடிக்கிறார், இந்துஜா சுடராக நடிக்கிறார். விவேக் பிரசன்னா வினோத் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து புதிதாக சில கதாபாத்திரங்களும் படத்தில் இருக்கின்றன.
இந்தப் படம் சம்பிரதாய இரண்டாம் பாகமாகவோ அல்லது வேறு வழியின்றி எடுத்த படமாகவோ இருக்காது. நிச்சயம் தனிப்பட்ட படமாக இருக்கும்.  இந்தப் படம் அதன் கதாபாத்திரங்களுக்காகவும், இசைக்காகவும், கதைக்காகவும் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த முறை ஜி ஸ்குவாட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ‘மேயாத மான்’ திரைப்படத்தை ஸ்டோன் பென்ச் மட்டும் தயாரித்தது. இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று தான் ’29’-ல ஆரம்பிக்கப்பட்டது.  லோகேஷ் அண்ட் கார்த்திகேயன் சார்பில் ஸ்டோன் பென்ச், ஜி ஸ்குவாட் இருவரும் சேர்ந்து தயாரிக்கிறார்கள்.
மேலும் இந்தப் படத்தை பிரதீப் பூபதி‌ இணைந்து தயாரிக்கிறார். இவர் தான் ஜி ஸ்குவாட் தலைவர். இவரால் தான் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இவர் இல்லை எனில் இந்த படம் ஆரம்பித்திருக்காது.
மற்றப்படி படத்தின் தொழில்நுட்ப குழுவினர் மற்றும் இதர கதாபாத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
‘மேயாத மான் 2’ திரைப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளோம், படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது,” என்றார்.
‘மேயாத மான் 2’ குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறும் போது, “மேயாத மான் எனது முதல் திரைப்படம். அதன் பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் நான் 20 திரைப்படங்களை தயாரித்துள்ளேன். மேயாத மான் 2 நான் தயாரிக்கும் 22-ஆவது திரைப்படம். ஜி ஸ்குவாட் மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் கூட்டணி  அமைந்து இருப்பது சந்தோஷம். இது நல்ல சகாப்தத்தின் தொடக்கம் மற்றும் நல்ல நேரம் உருளட்டும் வேடிக்கை ரிட்டர்ன்ஸ்,” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்