NBY PRODUCTION HOUSE சார்பில் பாஸ்கர் நடராஜ் தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இப்படம், காதல், நகைச்சுவை, நட்பு, உறவுகள் என இளமைக்கே உரிய உற்சாகத்தையும், மனதைத் தொடும் உணர்வுகளையும் ஒன்றிணைக்கும் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கனா’ திரைப்படம் மற்றும் ரசிகர்களிடையே கவனம் பெற்ற ‘லேபிள்’ (Label) இணையத் தொடரில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிரகாஷ் வி. பாஸ்கர், இப்படத்தின் மூலம் முழுநீளத் தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான சுயாதீனத் திரைப்படமான ‘Dear Jeeva’, சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று இவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இப்படத்தின் மூலம் சூரஜ் குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மற்றும் ‘கோர்ட்’ இணையத் தொடர் ஆகியவற்றில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த சுபாஷ் கண்ணன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘சுமதி வளவு’, ‘டெர்பி’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஜஸ்ன்யா ஜெயதீஷ் மற்றும் மிஸ் குளோபல் இந்தியா 2024 பட்டம் வென்ற சௌம்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் திறமையான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற காளி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொறுத்தவரை, ஒளிப்பதிவை கோகுல்காந்த் குமரேசன் மேற்கொள்கிறார். படத்தொகுப்பை எஸ்.ஏ. நாகர்ஜுன் கவனிக்கிறார். மனோஜ் கிருஷ்ணா இசையமைக்கிறார். கலை இயக்குநராக ஏ.ஆர். மோகன் பணியாற்றுகிறார். பாடல்களை மோகன் ராஜன் எழுதுகிறார். சண்டைப் பயிற்சியை கௌதம் மேற்கொள்கிறார். நடன அமைப்பை ரமேஷ் கவனிக்கிறார். தயாரிப்பு மேலாளராக மஞ்சுநாத் பணியாற்றுகிறார்.
காதலில் வரும் இனிமையான தருணங்கள், நட்புக்குள் நிகழும் கலாட்டாக்கள், உறவுகளுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன மனக்கசப்புகள், எதிர்பாராத திருப்பங்கள் என வாழ்க்கைக்கு நெருக்கமான பல உணர்வுகளை நகைச்சுவையுடன் சொல்லும் கதையாக இப்படம் உருவாகிறது. இளைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையிலும், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து, ரசித்து, உணர்ந்து பார்க்கும் வகையிலும் இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு மிக விரைவில் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. புதிய கூட்டணி, அறிமுக நாயகன், அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இதர அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

