காரைக்காலைச் சேர்ந்த விசாகன், ஹரிணி எனும் இரட்டையர்கள், இளம் வயதில் கராத்தே எனும் தற்காப்புக் கலையில், இரண்டு முறை பிளாக் பெல்ட்டை வென்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சாதனை புத்தக நிறுவனம் அளித்திருக்கும் சாதனை சான்றிதழில், ‘இந்தியாவில் உள்ள காரைக்காலைச் சேர்ந்த மாஸ்டர் ஸ்ரீ விசாகன். கே மற்றும் பேபி ஸ்ரீ ஹரிணி. கே ஆகிய திறமை வாய்ந்த இரண்டு குழந்தைகளும், உலகத்தில் மிகவும் இளம் வயதில் கராத்தே எனும் தற்காப்பு கலையில் இரண்டு முறை பிளாக் பெல்ட்டை வென்ற சாதனையாளர்கள் என அங்கீகரிக்கப்படுகிறது. இவர்கள் இந்த சாதனையை அவர்களின் 6 வயது மற்றும் ஒன்பது வயதில் இரண்டு முறை நிகழ்த்தியிருக்கிறார்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உலக சாதனை புத்தகத்தில் 2022-ம் ஆண்டு பதிப்பில் இடம்பெற்றிருக்கும் இவர்களது சாதனையால் காரைக்கால் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள இரட்டையர்களும், மாணவச் செல்வங்களும் பெருமிதம் கொள்கிறார்கள்.
இந்த சாதனையாளர்களின் பெற்றோரிடம் பேசினோம்… ”விசாகன், ஹரிணி 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர்கள். இவர்களை, மூன்றாவது வயதிலேயே தற்காப்பு கலையை கற்பிக்கும் காரைக்கால் உள்ள வி ஆர் எஸ் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியில் சேர்த்துவிட்டோம். அங்கு கராத்தே கற்கத் தொடங்கிய மூன்று ஆண்டுகளில், இவர்களின் ஆறாவது வயதில் முதல் டிகிரி பிளாக் பெல்ட்டை வென்று, இந்தியாவிலேயே முதன் முதலாக இத்தகைய பிளாக்பெல்டை பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையை படைத்தார்கள். அதை தொடர்ந்து மலேசியாவில் நடைபெற்ற நான்காவது கே.எல். மேயர்ஸ் கப் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு கோப்பையை வென்றார்கள்.
அதைத் தொடர்ந்து இளம் சாதனையாளர் விருதினையும், கௌரவ டாக்டர் பட்டத்தினையும், தமிழக பண்பாட்டுக் கழகம் வழங்கிய ‘ராஜ கலைஞர்’ என்ற விருதினையும் வென்றனர். கராத்தே என்ற தற்காப்புக்கலையுடன் நிஞ்சா டோ, டேக்வாண்டோ, கிக் பாக்சிங், மூ தாய், ஜூஜுட்சோ, சிலம்பம் ஆகிய கலைகளுடன் யோகாவையும் கற்றுத் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
தற்காப்புக் கலைகள் மட்டுமல்லாமல் அவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெறும் நாடகம், நடனம், பேச்சுப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்று வருகிறார்கள்.
பெற்றோராகிய நாங்கள் அவர்களது விருப்பங்களை அறிந்து ஆதரவளித்து வருகிறோம். அவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது பெருமிதமாக உள்ளது” என்றார்கள்.
சாதனை இரட்டையர்களிடமும் பேசினோம்… ”அப்பா, அம்மா, ஆசிரியர்கள், மாஸ்டர்கள் வழிகாட்டுதலுடன் விடாமுயற்சி, பேரார்வத்துடன் இதில் ஈடுபட்டிருக்கிறோம். இன்னும் சாதனைகள் படைப்போம்” என்றார்கள்.
இந்த சாதனையாளர்களில் விசாகனின் இலக்கு நன்றாகப் படித்து எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகி, நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதாம்.
இதய நோய் நிபுணராகி, ஏழை எளியவர்களுக்கு சேவை செய்வது ஹரிணியின் இலட்சியமாம்!
இருவரும் அவரவர் லட்சிய இலக்கை அடைய வாழ்த்துகள்!
