கயல் வின்சன்ட், டி ஜே பானு இணைந்து நடிக்கும் அந்தோணி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கியது. தற்போது இலங்கை – யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.
இந்த படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர்.
கயல் திரைப்பட நடிகர் கயல் வின்சன்ட் சினிமா உலகில் தனக்கென தனி இடத்தினை பிடித்து, மிக குறைந்த அளவில் சிறப்பான கதையம்சங்களை கொண்ட கதைகளை தெரிந்து நடித்து வருகிறார்.
காதலிக்க நேரமில்லை, வாழ், போர், மாடர்ன் லவ், இமைகள் கதாநாயகியான டி ஜெ பானு, நடிகர் அருள்தாஸ், குணச்சித்திர நடிகர் நிழல்கள் ரவி, மற்றும் இலங்கையை சேர்ந்த நடிகர் சுதர்சன் ரவீந்திரன், மற்றும் நடிகை செளமி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், இதயராஜ், யசிதரன், தர்ஷிபிரியா, ஷாமிலா, சாந்தா, சர்மிளா, வசந்த சீலன், போன்றோரும் தமிழ்நாட்டு நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கின்றார். சித்தா மற்றும் சென்னை சிற்றி கேங்ஸ்டர் போன்ற திரைப்பங்களின் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஏ பிரசாத் படத்தொகுப்பு பணியை செய்கின்றார். கலை இயக்குனராக கலா மோகன் அவர்களும், ஆடை வடிவமைப்பாளராக தரங்கனி அவர்களும், ஒப்பனை கலைவாணி மற்றும் அகல் சகி ஆகியோரும் பணியாற்றியிருக்கின்றனர்.
இலங்கையில் வெளிவந்த சினிமா திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு தனித்தன்மை கொண்ட எமது மண் சார்ந்த சினிமாவை எடுத்து காட்டுகின்ற திரைப்படமாக இந்த அந்தோணி அமையும் என்பதால், இத் திரைப்படம் ஐரோப்பிய அளவில் உலகத்தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
விரைவில் பாடல்கள், டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.
ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். திரு.இரமணன் அவர்கள் இத்திரைப்படத்தில் இணை இயக்குனராகவும் பணிபுரிகின்றார். மற்றும் இணை தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரடக்ஷன்ஸ்) ஆகியோர் இணைந்துள்ளனர்.