Home விமர்சனம் ஆண்பாவம் பொல்லாதது சினிமா விமர்சனம்

ஆண்பாவம் பொல்லாதது சினிமா விமர்சனம்

காமெடிக்கு பஞ்சமில்லாத படம்; இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் தலைமுறைக்கான கருத்துக்கள் அளவாய் அழகாய் நிரம்பியிருக்கிற ‘ஆண்பாவம் பொல்லாதது.’

சிவாவும் சக்தியும் கல்யாண வாழ்க்கையைத் துவங்கி ஒரு வருட காலத்தை தாண்டிய நிலையில், சக்தி டைவர்ஸ் கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார். டைவர்ஸ் கேட்கிற அளவுக்கு சிவா செய்த தவறு என்ன, கேட்டபடி சக்திக்கு டைவர்ஸ் கிடைத்ததா இல்லையா என்பதற்கான பதில்களையெல்லாம் காமெடி களேபரமாக்கியிருக்கிறார் இயக்குநர் கலையரசன் தங்கவேல்.

‘ப்ரோ, நீங்க இந்தளவுக்கு கேரக்டருக்கு பொருத்தமா நடிப்பீங்களா?’ என ஆச்சரியப்படும் அளவுக்கு உணர்வுபூர்வமான நடிப்பிலும் ‘இதேபோல தொடர்ந்து ஜாலியான சப்ஜெக்ட்ல நடிச்சு எங்களையெல்லாம் குஷிப்படுத்துங்க ப்ரோ’ என ரெக்வெஸ்ட் வைக்கும் அளவுக்கு காமெடியிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார் ரியோ ராஜ்.

அவருக்கு மனைவியாக வருகிற மாளவிகா மனோஜ் பெமினிசம் என்ற பெயரில் அலட்டல், அகம்பாவம், ஆணவம், திமிர் என எல்லாவற்றையும் ஒரு காட்டு காட்டிவிட்டு ஒரு கட்டத்தில் அதெல்லாம் தவறு என உணர்வதுவரை இறக்கி வைத்திருப்பது தேர்ந்த நடிப்பு.

ரியோ _ மாளவிகா டைவர்ஸ் வழக்கை எதிரும் புதிருமாய் இருந்து எடுத்து நடத்துவது டைவர்ஸான தம்பதிகள் என்பது கதையிலிருக்கிற சுவாரஸ்யங்களில் ஒன்று. அந்தவகையில் அட்வகேட் தம்பதியாக வருகிற ‘பிளாக்ஷிப்’ விக்னேஷ் காந்த் _ ஷீலா ஜோடி வழக்கில் ஜெயிப்பதற்காக எந்த லெவலுக்கும் இறங்கத் தயாராகிறபோது கதையில் பரபரப்பு கூடுகிறது.

ஷீலா சக்திக்கு டைவர்ஸ் பெற்றுத் தருவதை லட்சியமாக வைத்து காய் நகர்த்த, அவரது முயற்சிகளை தகர்ப்பதற்காக விக்னேஷ் காந்த் போடுகிற ஸ்கெட்ச் அத்தனையும் ரசிக்க வைக்கிற எபிசோடுகள்; அதிரிபுதிரி அட்டகாசங்கள். விக்னேஷ்காந்தின் நடிப்பில் இதுவரை பார்க்காத மெச்சூரிட்டி தென்படுவதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தன் கிளையண்டுக்காக வாதாடும்போது காட்டும் கடுமையாலும் வெளிப்படுத்தும் சீற்றத்தாலும் கவனம் பெறுகிறது ஷீலாவின் நடிப்பு.

விக்னேஷ்காந்துடன் இணைந்து பணிபுரிகிற லாயராக ஜென்சன் திவாகர். அவர் அடிக்கும் லூட்டியும், டயலாக் டெலிவரியும், பிரைவேட் டிடெக்டிவ் என்று சொல்லிக்கொண்டு தங்களை ஃபாலோ பண்ணும் நபரை டீல் செய்யும் விதமும் சிரிப்புக்கு 100% கேரண்டி.

தீபா சங்கர் அழுது புலம்பி கத்திக் கதறாத படங்களில் இதுவும் ஒன்று. அவர் மூலம் திருமண வாழ்க்கையில் பெண்கள் படும் அவதிகளை போகிற போக்கில் எடுத்துச் சொல்லியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

கதாநாயகியின் தந்தையாக இயக்குநர் ஏ வெங்கடேஷ், நீதிபதியாக இளங்கோ குமணன் உள்ளிட்ட மற்றவர்கள் கதையின் தேவையறிந்து நடித்திருக்க, பாடல்களுக்கான இசையை உற்சாகமாகவும் பின்னணி இசையை கதையோட்டத்தின் உணர்வுகளுக்கு பொருத்தமாகவும் இணைத்திருக்கிறார் சித்துகுமார்.

மாதேஷ் மாணிக்கத்தின் தரமான ஒளிப்பதிவு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.

பெண்களுக்கு சாதமாக இருக்கும் சட்டங்களை விரிவாக எடுத்துச் சொல்லி, அவற்றில் ஆண்கள் எப்படியெல்லாம் சிக்க வைக்கப்படலாம் என்பதை விவரித்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கான சாமர்த்தியமான அணுகுமுறைகளை வரிசைப்படுத்தியிருப்பது என நீளும் காட்சிகள் திரைக்கதை உருவாக்கத்திற்காக இயக்குநர் பெரியளவில் உழைத்திருப்பதற்கான சான்று.

பெண்களிடம் மாட்டிக் கொண்டு ஆண்கள் படும் பாட்டை எடுத்துச் சொல்லியிருப்பதெல்லாம் சரிதான் என்றாலும், கதாநாயகியின் கேரக்டரை இயல்புக்கு பொருந்தாத அளவுக்கு மோசமாக உருவாக்கியிருப்பதை ஏற்க முடியவில்லை.

கதையின் மையம் சீரியஸானதாக இருந்தாலும் அது தெரியாதபடி காட்சிக்கு காட்சி சிரிப்பு சிக்ஸர்களை விளாசியிருக்கும் ‘ஆண்பாவம் பொல்லாதது’ தியேட்டரில் பார்ப்பதற்கு உகந்தது!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்